jaga flash news

Tuesday 9 May 2017

மனிதன் வாழுகின்ற வீட்டில் நடராஜர் படம்/சிலையை வைத்து வழிபடக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, சிதம்பரத்திலுள்ள தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு வரும்படி அழைத்தார்.
சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர்.
அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார்.
அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர்.
ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும்.
இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
பெருமாள் கோயில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால், சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர்.
நடராஜர், ஊர்த்துவதாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர்.
சுவாமி தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார்.
இதனடிப்படையில் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.
நடராஜரின் துணைவியை சிவகாமி என்பர். ஆனால், திருவாலங்காட்டு அம்பாளுக்கு சமி சீனாம்பிகை என்று பெயர்.
நடராஜரின் நடனத்திற்கு ஈடுகொடுத்து, காளி ஆடியபோது ஒரு பெண்ணால் இப்படியும் ஆட முடியுமா? என இந்த அம்பாள் ஆச்சரியமடைந்தாள்.
இதனால், இவளுக்கு சீனாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. சீனம் என்றால் ஆச்சரியம்.
இவள் இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் நிலையில், ஆச்சரியப்படும் பாவனையுடன் முகத்தை வைத்திருக்கிறாள்.
இந்த சிலை அமைப்பு காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்.
நடராஜரின் திருநடனத்தை சிவகாமி என்ற பெயர் தாங்கி அம்பிகை கண்டு களிப்பதைக் காணலாம்.
ஆனால், சிதம்பரத்தில் நடராஜர் சிவசக்தியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். அதாவது ஆண்பாதி, பெண்பாதியான அர்த்தநாரீஸ்வரரின் தன்மையுடன் திகழ்கிறார்.
வலப்பாகம் சிவமும், இடப் பாகம் சக்தியும் வீற்றிருக்கின்றனர்.
அதனால், சிவகாமி இல்லாமல் நடராஜரை வழிபட்டாலே இருவரையும் வழிபட்ட பலன் உண்டாகும்.
சிவபெருமானுக்குரிய 25 சிவமூர்த்தங்களில் தலையாயதாக நடராஜரே விளங்குகிறார்.
இவருக்கு அம்பலவாணர், ஆடல்வல்லான், கூத்தப்பெருமான், சபாபதி, நிருத்தன், நடேசன், சித்சபேசன் என்று பல பெயர்கள் இருந்தாலும் நடராஜர் என்ற பெயரே மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது.
பழந்தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தில் ஆடல்வல்லான் என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது.
சிதம்பர ரகசியம் போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது.
காரைக்காலம்மையார் சிவனைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றபோது சிவன் அவரை அம்மா! என்றழைத்து,என்ன வரம் வேண்டும்? எனக்கேட்டார்.
அவர் பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்! என்றார்.
சிவன் அந்த வரத்தை அருளவே, ஆலங்காடு வந்த அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடினார். இவ்வேளையில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார்.
அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னதி எழுப்பினான். இதில் காரைக்காலம்மையார் ஐக்கியமானார்.
இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.
நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால், அப்பெருமானை நடேசன் என்று போற்றுகிறோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார்.
இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36.
திருமாலுடன் ஆடியது 9.
முருகப்பெருமானுடன் ஆடியது 3.
தேவர்களுக்காக ஆடியது 12. ஆகும்.
இதனைபார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர். நம் ஆன்மாவை, சிவகாமியாக எண்ணி, நடராஜப் பெருமானின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.
நடராஜர் என்பவர், எல்லாம்வல்ல பரமேஸ்வரனின் மஹேச்வர மூர்த்தங்களில் முதன்மையானவர். அவரே பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமானவர். அவரில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன. நான் இவற்றை எழுதுவதும், பதிப்பகத்தார் பதிப்பிப்பதும், நீங்கள் படிப்பதும் என்ற அனைத்து காரியங்களும் அவனது அசைவுகளே! நம்முள் இயங்கிவரும் கோடிக்கணக்கான அணுக்களின் அசைவுகளும் அவனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் இதனால்தான்! இது மட்டுமல்ல. காற்று வீசுவதும், தண்ணீர் சென்றுகொண்டிருப்பதும், பறவைகள் பறப்பதும், மீன்கள் நீந்துவதும், எறும்பு நகர்வதும்-இப்படி எல்லா விதமான ஆற்றலும் அவரே. இதனாலேயே இவரை காஸ்மிக் டான்சர் என்கிறோம். அதாவது, பிரபஞ்சகூத்தாடி எனப் போற்றுவது வழக்கம். இவரை தெற்கு நோக்கி வைத்து வழிபட்டால், நமது ஆற்றல் மேம்படும். இப்பேராற்றல் மிக்க நடராஜப் பெருமானை வழிபடுவதினால், உடலாலும் உள்ளத்தாலும் சோர்வு பெற்றிருக்கும் உயிர்கள், சோர்வு நீங்கி ஆற்றல் பெறுவார்கள் என்பது நமது முன்னோர்கள் கண்ட உண்மை.
ஆலையத்தில் எல்லா தெய்வ உருவங்களும் கிழக்குமுகமாக பிரதிஷ்டை செய்ய பட்டாலும் கூட நடராஜ பெருமானை மட்டும் தெற்கு பார்த்தவராகவே பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
ஆலையத்தில் மட்டுமல்ல வீடுகளிலும் நடராஜர் விக்கிரகங்களை தெற்கு பார்த்த வண்ணம் வைத்து வழிபட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
மேலும் மனிதன் வாழுகின்ற வீட்டில் நடராஜர் படம்/சிலையை வைத்து வழிபடக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.

1 comment:

  1. சிவனைப் புகழ்ந்து பாட, எனக்குள்ளும் ஒரு ஆசை. இதோ சில வரிகள்.

    *அப்பர் பிரான்*, சிவன் மீது உள்ள அதிக பற்றுதலினால் பாடிய பாடல்.

    என்னில் ஆரும் எனக்கு
    இனியார் இல்லை
    என்னிலும் இனியான்
    ஒருவன் உளன்
    என்னுளே உயிர்ப்பாய்
    புறம் போந்து புக்கு
    என்னுளே நி்ற்கும்
    இன்னம்பர் ஈசனே!.

    Explanation : தனக்குள்ளே இருக்கும் சிவபெருமானை, மந்திர பூர்வமாக, (ஈசனை துதித்தல்) வெளியே கொணர்ந்து, அந்த மூர்த்தியை, மனக் கண்ணினால் ஆவாகித்து, வழிபட்ட பின்னர், மீண்டும் தனது மனத்தினுள்ளே அந்த மூர்த்தியை,ஒடுக்கும் திறன் படைத்தவராக, *அப்பர் பிரான்* இருந்ததை, இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

    உயிர்ப்பு = இயக்கம், மூச்சு பிராணன்(உயிர்) *உசச்சரிக்கப்படும் மந்திரம்* என்பது இந்த பாடலுக்குப் பொருந்தும்.
    அப்பர் பிரான் சிவபெருமான் மீதுள்ள அதிகப் பற்றுதலால் போற்றிப் பாடிய பாடலாகும்.

    ReplyDelete