jaga flash news

Saturday, 17 October 2020

வெங்கட்ராமா கோவிந்தா கோவிந்தா பெருமாள்

வெங்கட்ராமா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.கரூர் தான்தோன்றி மலைக்கோயில்
வரலாறு.   பெருமாளுக்கு விரதம் இருந்து வித்தியாசமாக நேர்த்திக்கடன்!தான்தோன்றி மலைக் கோயில் வரலாறு!
உலகைப் படைத்த இறைவன் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக காட்டிலும், மலையிலும் கல், மரம், உலோகம், மண் முதலான அனைத்து உயிரற்றப் பொருட்களிலும் உருவுடனோ உருவமில்லாமலோ உள்ளிறங்கி அருள் புரிகிறான். இவ்வாறு அருள் புரியும் பெருமாள் தானாகத் தோன்றிய இடங்கள் ஸ்வயம் வ்யக்தத் தலங்கள் எனப்படும். அந்த இடங்களில் பெருமாள் தானாகத் தோன்றும் 
போது அந்த மூர்த்தங்களுக்கு ஸ்வயம்பு எனவும் தமிழில் தானே தோன்றியதால், தான்தோன்றி என்றும் அதுவே பேச்சு வழக்கில் தாந்தோணி என்று மருவி அழைக்கப்படுகிறார் பெருமாள்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்தவர் டங்கணாச்சாரி. தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது 
தீரா அன்பு கொண்டவர். வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. சுந்தராம்பிகை, தனக்கு குழந்தை பிறந்தால் அதனை ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக வெங்கடா
ஜலபதியிடம் வேண்டிக்
கொண்டாள் சுந்தராம்பாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள்.

தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சுந்தராம்பிகை வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு “குண்டலாச்சாரி‘ என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார்.  ‘‘கடவுள் சிவனின்றி வேறு யாருமில்லை; நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,” எனக் கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டறிந்த சிறுவன் நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,” என்றான். சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். “திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,” என்று அழுதான்.

அப்போது ஒரு துறவி அங்கு வந்தார். அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். பிறகு, “இதற்காகவா அழுகிறாய்? நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதி எழுந்தருள்வார், வா,” என்று கூறினார். சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது. மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்குப் போய்விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான். துறவியைக் காணவில்லை.  புதியதாகக் கோயில் கட்டப்பட்டுள்ள தகவல் அரசனை எட்டியது. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். “சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,” என்ற ஆவேசத்துடன் ஆத்திரம் கண்ணை மறைக்க, இரவில் சென்று கோயிலுக்குள் ஒளிந்து நின்றார் டங்கணாச்சாரி, குண்டலாச்சாரி வந்ததும் தன் மகன் என்று  தெரியாமலேயே வெட்டிச் சாய்த்தார்.

ஆனால் இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார். சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து ஓடி வந்தாள். அப்போது சன்யாசி ஒருவர் அங்கு வந்து ஒரு பிடி துளசி கொண்டு வரப் பணித்தார், முதலில் மறுத்தாலும் பின்னர் சென்று கொண்டு வந்தார் டங்கணாச்சாரி. குண்டலாச்சாரியின் வெட்டுப்பட்ட இடத்தில் துளசிச் சாறு பிழிய உயிர்த்து எழுந்து நடந்த அனைத்தும் கூறினான், மகன். அனைவரும் மலை மீது அமைந்திருந்த கோயிலுக்குள் சென்றனர். உடன் வந்த சன்யாசி மறைந்து குகை நடுவே வேங்கடேசப் பெருமாள் தோன்றினார். தானாய் தோன்றிய அப்பெருமாள் ‘‘குண்டலாச்
சாரிக்காக இங்கு தோன்றி காட்சி தந்தேன்; இனி இந்தத் தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன். உன் பிரார்த்தனையை இங்கேயே செலுத்து,” எனக் கூறினார். அது முதல் திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு அங்கே செல்ல இயலாதவர்கள் தம் காணிக்கைகளை இங்கேயே செலுத்தத் தொடங்கினார்கள் எப்போதும் லட்சுமியை மார்பில் கொண்டு  பெருமாள் காட்சி தருவதால், பெருமாள் கல்யாண வெங்கடரமண சுவாமி என அழைக்கப்படுகிறார்.

இந்த குடைவரைக் கோயில் 197 அடி நீளமும்.14 ½ அடி அகலம், 9 அடி உயரமும் கொண்டது. கலைநயத்தோடு காட்சி தருகின்றது. இங்குள்ள குகை ஆஞ்சநேயர் சிலையை, பாறையைக் குடைந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ‘குணசீலன்’ என்ற ஆதியேந்திரன் நிறுவியதாகத் தல வரலாறு கூறுகிறது. தான்தோன்றிமலை பெருமாள் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்திலும், மாசி மாதம் மகம் நட்சத்திரத்திலும் இங்கு தேர்த் திருவிழா நடைபெறும்.  புரட்டாசித் திங்கள் திருவிழா, 18 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்
படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பூஜைகள் மிகச்சிறப்பாக இருக்கும். அதிலும் மூன்றாவது சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. தாந்தோன்றிமலை கோயிலில் தினமும் காலை 7 மணி, 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. உச்சிக் காலத்திற்கு முன்பு எண்ணைக்காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றினால் மூலவருக்கு முழுக்கு நடைபெறும்.

உலகம் முழுவதற்கும் படி அளக்கும் இப்பெருமாளுக்கு செம்மாளி (செருப்பு) சமர்ப்பித்தல் பழக்கம். பெருமாளுக்கு செம்மாளி சமர்ப்பிக்க நேர்ந்து கொண்டவர்கள் ஒற்றை பெரிய செருப்பு தயார் செய்து விரதம் இருந்து  செம்மாளியை அலங்காரம் செய்து சுமந்து வந்து சமர்ப்பிப்பார்கள். பெருமாள் கனவில் சொன்னபடி அவரவருக்கு எந்த அளவில் எந்த கால் செருப்பு சமர்ப்பிக்கச் சொல்லுகிறாரோ அதனைச் சமர்ப்பிப்பர். இப்படி தனித்தனி பக்தரால் ஒற்றை செருப்பாக சமர்ப்பிக்கும் செருப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து ஜோடியாகி விடும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது! இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த தான்தோன்றிமலை  கரூரில்  இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வெங்கட்ராமா கோவிந்தா கோவிந்தா 
பெருமாள் அடியவன்.

No comments:

Post a Comment