jaga flash news

Tuesday 21 November 2023

நம் வாழ்க்கை இப்படியே சென்று விடுமா?


எதற்காகப் பிறந்தோம் எதனால் இந்த பூமிக்கு வந்தோம். நம் வாழ்க்கை இப்படியே சென்றுவிடுமா?  இறப்புக்குப் பின்னால் நம்முடைய நிலை என்ன? என்று, நம் பிறப்பிற்கான காரணம் என்ன நம் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்று? அனுதினமும் சிந்தித்துக்கொண்டே இருப்பவர்கள் நீங்கள், உங்கள் கேள்விக்கான பதிலை இதில் பார்ப்போம். 

ஒரு ஆசிரமத்தில் ஒரு குரு வசித்து வந்தார். அங்கு வழிப்போக்கனாக வந்த ஒருவன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். "பிறப்பு இறப்பு என்றால் என்ன? நாம் இந்த வாழ்க்கைக்கு எங்கிருந்து வந்தோம்.  இறப்புக்குப் பின்னால் நாம் எங்குச் செல்வோம்?" என்று கேட்டான்.

உடனே, குரு சிரித்துக்கொண்டே ஒரு புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டு,  கேள்வி கேட்டவனிடம் அதை பக்கத்து அறையிலிருந்து எடுத்து வரச் சொன்னார். அவனும் அந்த அறைக்குச் சென்று பார்த்து மீண்டும் குருவிடம் வந்து, “அந்த அறை முழுவதும் இருளாக இருக்கிறது. எப்படி அந்த புத்தகத்தைத் தேடுவது?” என்று கேட்டான்.

குரு மீண்டும் சிரித்துக்கொண்டே கையில் ஒரு மெழுகுவர்த்தியை அவன் கையில் கொடுத்து அதில் ஒளியேற்றி “இதைக் கொண்டு தேடு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.  மெழுகுவர்த்தியுடன் சென்ற அந்த வழிப்போக்கன் குரு சொன்ன புத்தகத்தை குருவிடம் கொண்டுவந்து கொடுத்தான்.

குரு அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு அந்த மெழுகுவர்த்தியை  ஊதியணைத்தார். வழிப்போக்கனுக்குப்  பயங்கர கோபம் வந்தது,
‘நான் என்ன கேள்வி கேட்டேன், இந்த குரு அதை விட்டு வேறு வேலைகள் எல்லாம் செய்யச் சொல்கிறார்’ என்று முணுமுணுத்து, அதனை குருவிடமும் கேட்டுவிட்டான்.

குரு சாந்தமாக அந்த வழிப்போக்கனிடம் பதில் உரைக்கிறார். “இந்த மெழுகுவர்த்தியில் ஒளி எங்கிருந்து வந்தது?” என்று அவனிடம் கேட்டார்.

அதற்கு அவன் “எனக்குத் தெரியாது” என்றான்.

“சரி நான் ஊதி அணைத்த பின்பு இந்த ஒளி எங்குச் சென்றது?” என்று மீண்டும் அவனிடம் கேட்டார்.

அதற்கும் அவன் தெரியாது என்று கூறினான்
அப்போதுதான் குரு அவனிடம் தெளிவாகக் கூறினார், “இந்த ஒளி எங்கிருந்து வந்தது, எங்குச் சென்றது என்பது நமக்கு முக்கியம் இல்லை. ஆனால், இது ஒளி தந்த காலங்களில் நாம் தேடிய ஒரு பொருளைக் கண்டறிய நம்மால் முடிந்தது. அது, நமக்கு ஒளி தந்த நேரத்தில் பயனுள்ளதாக இருந்தது இல்லையா? அதேபோல்தான் நம் வாழ்க்கையும். நீ எங்கிருந்து வந்தாய், இறப்புக்குப் பின்பு நீ எங்குச் செல்வாய் என்பதைப் பற்றி எண்ணுவது முக்கியமில்லை. இந்த வாழ்க்கையில் உனக்கான காரணம் என்ன, உனக்கான பயன் என்ன என்று அறிந்து அதைத் தேடு” என்றார்.

குரு சொன்னதைப்போல், நம் வாழ்க்கை இப்படி ஏன் இருக்கிறது என்று எண்ணுவதைவிட, நம் வாழ்க்கையில் நமக்காக என்ன இருக்கிறது என்று எண்ணித் தேட ஆரம்பித்தாலே உங்கள் வாழ்க்கை பயனுள்ளதாக மாறிவிடும். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த தருணம் வந்தால் நினைவில் கொள்ளுங்கள்... இந்த வரிகள் உங்களுக்கு மீண்டும் நம்பிக்கையைத் தரும்.

‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்’.

‘தேடித்தேடிக் கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை’.



2 comments:

  1. அய்யா..! வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். தங்களின் விவேகமான கதைகள் அனைத்தையும் ரசிப்பவள் இந்த அடியேன். அதிலே அடியேனுக்கு ஒரு பேரானந்தமும் உண்டு.

    இந்த விளக்கம் அய்யா.. சிவநெறித் திருக்குறளிலும் உண்டு. ஆனாலும், தங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொள்வதில், புதிதாக அறிவது போலான ஒரு உணர்வு. அய்யா ! அருமை அய்யா..!

    ReplyDelete
  2. இக்குறள் திருவருட்பயனில் ..
    "ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
    தெளிவு இல் லெனில் என் செய" என... விழித்திருக்கின்ற கண்ணிடத்தில், காணும் தன்மை இல்லையாயின்,ஒளியும், இருளும் உலகும் ஆகிய மூன்றும் இருந்தும் அக்கண்ணிற்கு என்ன பயன் ? அவை யாதொரு பயனையும் அறியா என்ற பொருளில் வருகிறது .. அய்யா.

    அடுத்து ஒரு குறள்...

    "ஒளியும், இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெளியாச் செயல்". என்ற குறள் மூலமாக, அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில்... "ஒளியில் அழுந்தும் நிலை தெளிவு நிலை. "இருளில் அழுந்தும் நிலை தெளியா நிலை.

    அதாவது, இருள் நிலையில் உலகம் புலப்படாது. அருள் நிலையில்(ஒளி) ஞானியர்க்கு உலகம் காட்சிப் படாது. இதைத்தான், தங்கள் உவமைப் பதிவாக எங்களுக்கு அளித்துள்ளீர்கள்..அய்யா.

    ReplyDelete