கேதார கவுரி விரதம் ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது? நோன்பு எடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?
கேதார கவுரி விரதத்தை பெண்கள் கடைப்பிடிக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த நோன்பு உருவான கதை என்ன என்பதையும் பார்க்கலாம்.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. சிவனை நோக்கி அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கௌரி விரதம். இதை மேற்கொண்டால், பெண்கள் விரும்பிய எல்லா வளங்களையும் பெறுவர். கேதார கவுரி விரதம் அன்னை பராசக்தி கௌரி இறைவனின் ஒரு பாகத்தில் ஐக்கியமாக மேற்கொண்டாள். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும் என்பதை உணர்த்தும் விதமாக கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து சிவனில் பாதியை பார்வதி தேவி பெற்றார் என்கிறது புராண கதை.
kethara gowri viratham spirtuality
ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கெளரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான் சக்தியை தன்னில் ஒருபாதியாக சிவன் ஏற்றுக் கொண்டார். ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்ல பட்ச தசமி முதல் கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி வரை ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை இருபத்தொரு நாட்கள் விரதம் மேற்கொள்ள வேண்டிய காலமாகும். இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் தீர்க்க சுமங்கலி வரம் பெறுவர்.
பக்தர்கள் இவ்விரதத்தை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். அம்பிகை சிவனை வேண்டி தவமிருந்த விரதம். இதனை திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் விரதம் இருக்கின்றனர்.
கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள். எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்க வேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.
இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப் போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். தோஷம் நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் முனிவர். சக்தியின் மனம் ஆறுதல் அடையும் போது சாபம் நீங்கும் என்றார். சிவனையும் என்னையும் பிரித்து பார்க்க கூடாது என்ன செய்வது என்று நாரதரிடம் கேட்கிறார் பார்வதி. அவரோ கௌதம முனிவரிடம் கேட்க சொல்கிறார். நேராக பார்வதி கௌதம முனிவரை பார்க்கிறார். அதற்கு கௌதம முனிவர் 21 நாட்கள் கேதாரம் என்ற தலத்திற்கு சென்று விரதம் இருக்க சொல்கிறார். அப்படி விரதம் இருந்தால் இறைவரின் இடபாகத்தை பெற்று இருவரும் ஒருவராகலாம் எப்போதும் பிரிய வேண்டியிருக்காது என்று கூறினார்.
கயிலாயத்தில் இருந்து அன்னை பார்வதி பூலோகம் வந்து தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு மெச்சிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாத வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் உருவெடுத்தார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கௌரி விரதநாள்.
கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும், கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment