jaga flash news

Friday, 26 February 2016

உறவுகள் புனிதமானவை

எல்லா உறவுமுறைகளையும் ஒருவித கட்டுக்குள் கொண்டுவர முடியும் ஆனால் தாய் தந்தைக்கு பிறகு உங்களால் வரையறுக்கவே முடியாத அளப்பறிய பாசத்தை கொண்டது தாய்மாமன் உறவு! 
என்னுடைய பள்ளிக்காலங்களில் கோடைவிடுமுறை வந்துவிட்டால் நான் என்னுடைய தம்பி தங்கை மூவரையும் தூரத்தில் இருக்கும் பாட்டிவீட்டில் கொண்டுபோய் விட்டு விடுவார்கள்!
இது தொடர்ந்து ஏழெட்டு வருடங்கள் நடந்தது அப்போதெல்லாம் தாத்தா பாட்டி இருந்தார்கள் எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தாத்தா பாட்டியே செய்துவிடுவார்கள் அதனால் மாமாவைப்பற்றி அதிகம் தெரியவில்லை ஒவ்வொரு தீபாவளிக்கும் தாத்தா வெல்லத்தால் செய்த அதிரசத்தை கொண்டுவந்து கொடுப்பார்
தாத்தா பாட்டி இறந்ததும் அந்த ஊர் உடனான எல்லா தொடர்பும் அறுந்துவிட்டதாக உணர்ந்தேன்
தாத்தா பாட்டியை மாமா சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்ற கோபம் அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது !
ஆனால் தாத்தாவிற்கு பிறகு ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா அதிரசம் கொண்டுவருவார்
ஒரு நாள் கூட தவறாமல் சரியாக தீபாவளி அமாவாசையன்று இங்கு இருப்பார், இது ஒருவருடம் இரண்டு வருடம் இல்லை
15 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது
அம்மா மாமாவோடு சரியாக பேசுவதில்லை
ஆனாலும் வருவார்
அவரின் இரண்டு மகள்களில் ஒருவரை எங்கள் வீட்டில் திருமணம் செய்துகொடுக்க ஆசைப்பட்டார்
முடியாமல் போனது, ஆனாலும் வருகிறார் !
மாமாவின் மகள்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து மாமா இப்போது தாத்தாவாகிவிட்டார்! ஆனாலும் அவர் வருவது நிற்கவில்லை!
மாமா படிப்பறிவு இல்லாதவர், வெகுளியான குணம் கொண்டவர்,
நான்கு பஸ்கள் மாறிதான் அவர் எங்கள் ஊருக்கு வரவேண்டும், இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவரோ அவர் கொண்டுவரும் அதிரசமோ வரத்தவறியதே இல்லை,
தன்னுடைய வாழ்நாள் கடமையாக நினைத்து இதை செய்துகொண்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது
சிறுசிறு சண்டைகளுக்கெல்லாம் உறவுகளை முறித்துக்கொள்ளும்
இந்த காலத்தில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்காமல் எப்படியாவது உறவை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று பதினைந்து வருடங்களாக அதிரசத்தோடு பயணித்து கொண்டிருக்கும் இந்த தாய்மாமனை என்னவென்று சொல்வது!!
அவரோடு பயணிப்பது அதிரசமல்ல, அதிரசம் என்கின்ற பெயரில் 


வரையறுக்க முடியாத பேரன்புதான்! அவருடைய பயணத்தை மென்மையாக்க பலவருடங்களுக்கு


 பிறகு பாட்டிதாத்தா வாழ்ந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன்! 

உறவுகள் புனிதமானவை பணம், நகை, நிலம், சொத்து, கோபம், பிடிவாதம், வெறுப்பு போன்றவற்றால் 


சேதப்படுத்திவிடாதீர்கள்!
உடைந்த உறவுகளை ஒட்டவைக்க பாலங்கள் தேவையில்லை,
ஒளித்து வைத்த பாசமும்
ஒருதுளி கண்ணீரும் போதும்!
முயன்றுபாருங்கள் !!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete