jaga flash news

Tuesday 23 May 2017

அஷ்டாவக்ர கீதையும் பகவத்கீதையும்!!!

அஷ்டாவக்ர கீதையும் பகவத்கீதையும்!!!
(மோக்ஷ சாஸ்திரமும் தர்ம சாஸ்திரமும்)
---------------------------------------------------
கீதை என்றவுடனேயே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பகவத் கீதை தான்!! ஆனால் கீதைகள் எண்ணற்றவை. மகாபாரதத்திலேயே “அணுகீதா, உத்தவகீதா, மங்கிகீதா.....” உள்ளிட்ட கீதைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஏனைய புராணங்களில் “சிவகீதை, ரிபுகீதை, கணேசகீதை, அவதூதகீதை, குருகீதை.........” முதலான கீதைகள் உள்ளன.
“கீதா/கீதை” என்னும் சொல்லின் பொருள் “உபதேசிக்கப்பட்ட, வகுக்கப்பட்ட” என்று கொள்ளலாம். ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்ததால் அது “பகவத் கீதை” ஆனது. சிவபெருமான் அம்பிகைக்கு உபதேசித்ததால் அது “சிவகீதை” என்றானது. அதேபோன்றே மகரிஷிகளுள் சிறந்தவரும், மகா ஞானியுமான அஷ்டாவக்ரர் ஜனகமகாராஜனுக்கு உபதேசித்த இந்நூல் “அஷ்டாவக்ர கீதை” என்றானது.
ஆதிசங்கர பகவத்பாதர் பத்து உபநிஷத்துகளுக்கும், வியாசர் அருளிய பிரம்மசூத்திரதிர்க்கும், ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதைக்கும் மிகவும் தெளிவாக, விரிவாக விளக்கவுரை எழுதியுள்ளார். இந்த “பத்து உபநிஷத், பிரம்மசூத்ரம், பகவத்கீதை “ இந்த மூன்றையும் ஆன்றோர் “பிரஸ்தான த்ரயம்” என்று அழைப்பர். அதாவது “உண்மைக்கான மூன்று” என்று பொருள். இந்த பிரஸ்தான த்ரயம் நம்மை வேதாந்தத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச்செல்லும்.
சங்கரபகவத்பாதர் குறிப்பாக இவைகளை தேர்ந்தெடுக்க அவசியம் என்ன?
பகவத் கீதையானது ஒருவனுக்கு “விவேகத்தை” அளிக்கவல்லது. அதாவது எந்த பாதையை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்னும் முதல் முடிவை எடுக்கசெய்வது. அழியும் உலக இச்சையை ஒழித்து, தர்மத்தின்வழியில் நம்மை நடக்கசெய்வது. வியாச பகவானது பிரம்மசூத்திரங்கள் நமக்கு “வைராக்யத்தை” அளிக்கவல்லது. வைராக்கியம் என்றால் விடாப்பிடியான முயற்சி, பிடிவாதம் என்று தவறாக நாம் புரிந்துள்ளோம், “வி+ராக: = வைராக்யம்” அதாவது எதன்மீதும் ஆசை அல்லது பற்றுதல் அற்ற நிலை வைராக்யம் ஆகும். பிரம்மசூத்திரங்கள் பிரம்மத்தின் நிலையை உணர்த்தி உலக இச்சைகளை விலக்க உதவும். முடிந்த சத்தியத்தை உபநிஷத்துகளில் இருந்து பெற்று, எப்பொழுதும் நாம் நம் சுயவடிவாம் பிரம்மமாக நிற்போம்!!!
இந்த நூல்களை ஞானவானான ஒரு குருவின் துணையில்லாமல் படிக்கக்கூடாது என்பது விதி. ஆதிசங்கரர் முதன்மை படுத்தியதால் பகவத்கீதைக்கு இன்றவிலான ஒரு பிரபலம் கிட்டியது.
அனைத்து நூல்களுக்குமே “அதிகாரி” என்று ஆன்றோர் வகுப்பார். அதாவது “யார் இந்த நூலை கற்க தகுதியானவர்?” என்று வகுப்பார். நாம் பகவத் கீதை யாருக்கு எங்கே உபதேசிக்கப்பது என்று பார்த்தல், “பாசத்தால் மதிமயங்கி, தன் கடமையை மறந்து, துறவு செல்வேன்” என்று மனம் தளர்ந்த அரசனான அர்ஜுனனுக்கு மற்றொரு அரசனான ஸ்ரீகிருஷ்ணர் உபதேசிப்பது. இந்த பகவத்கீதை மிகவும் இலக்கண நடையும், கவித்துவமும் நிறைந்தது. தளர்ந்த மனமுடைய ஒருவனை வீறுகொண்டு நிமிரச்செய்வது. கடமைக்கு முக்கியத்துவம் அளித்து பகவான் அளித்த மகத்தான சாஸ்திரமே பகவத் கீதை. ஆங்காங்கே மோக்ஷ மார்கத்தை கூறுவதாயினும், பகவத்கீதை மோக்ஷ சாஸ்திரம் அன்று. அது ஒரு தர்ம சாஸ்திரம்.
உலகமே பகவத்கீதையை புகழ்ந்து கூர, நீ மட்டும் பகவத்கீதை மோக்ஷ சாஸ்திரம் அன்று. அது ஒரு தர்ம சாஸ்திரம் என்று கூறுமளவிற்கு பெரியவனோ? என்ற ஐயம் உங்கள் மனதில் எழுவது தெரிகிறது. அனைத்து காலகட்டத்திலும் தர்மம் அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் முடிந்த ஞானம் கோடியில் ஒருவராலேயே ஏற்கப்படும். உலகம் முழுவதும் இன்று பகவத்கீதை கொடிகட்டி பரப்பதிலிருந்தே நாம் அது ஒரு தர்ம சாஸ்திரம் என்ற முடிவிற்கு வரலாம்.
தர்ம சாஸ்திரம் என்றால் என்ன??
நீ இவ்வாறுதான் வாழவேண்டும். இந்த வழியில்தான் நடக்கவேண்டும். இப்படித்தான் செய்தாகவேண்டும். இவ்வாருசெய்தால்தான் உனக்கு நன்மை,.... என்று மக்களின் மனங்களை நல்வழிப்படுத்துவதே தர்ம சாஸ்திரங்களின் நோக்கமாகும். பகவத்கீதையும் இதைத்தானே விழைகிறது, “கடமையைசெய்! பலனை எதிர்பாராதே. அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு! நான் பார்த்துக்கொள்கிறேன். கடமையில் இருந்து தவறாதே!! கடமை! கடமை!! கடமை!!!........” என்ற தர்ம சிந்தனைதான் பகவத்கீதை மக்களுக்குள் விதைக்கிறது. நம் மனம் பண்பட தர்ம சாஸ்திரங்கள் தேவை. ஆனால் அதயும்தாண்டி அவைகளால் நம்மை மோக்ஷதிற்க்கு வழிகாட்ட இயலாது.
ஆனால், மோக்ஷ சாஸ்திரங்களின் நோக்கம் ஒருவனை தர்மத்தையும் தாண்டச்செய்து, தர்ம அதர்மம் என்ற நினளைகளை கடக்கசெய்வதுதான். நீ கட்டற்றவன், மாசற்றவன், வினையற்றவன், பற்றற்றவன், பணியற்றவன், முழுமையே நீ!!! என்று இரண்டுகளை நீக்கி ஒருமையாம் நம் சுயத்தை நமக்கு காண்பிப்பதே மோக்ஷ சாஸ்திரங்கள்.
“பற்றற்றுப் பணியற்று மாசற்ற சுயம் பிரகாசனே நீ. (மற்றும்) சமாதி பழகுகிறாயே அதுவே நின் பந்தம்”
“மேனியால் எதனையுந் தொடாமலே தொன்றுதொட்டு உலகு தாங்கும் எனக்கு நிகர் சமர்த்தனெவன்? நானே நான்! என்னை வணங்குகுறேன்.”
முதலான உண்மை உரைகளால் கர்ஜிக்கிறார் அஷ்டாவக்ரர்.
அதுமட்டுமின்றி பகவத்கீதையை நம் விருப்பத்திற்கு, நம் மனதிற்கு ஏற்ற விளக்கங்கள் தரலாம். யார்வேண்டுமானாலும் பகவத்கீதைக்கு எளிதாக பொருள் கூற முடியும். ஏனெனில் அதுஒரு தர்ம சாஸ்திரம் ஆதலால். தர்மத்தை யார்வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் ஞானத்தை யாராலும் கூற இயலாது. "பிரம்மமே தான்" என்று உறுதிகொண்ட ஞானையத்தவிர!!!
பகவத்கீதைக்கு இத்துணை உரைகள் இருப்பினும், அஷ்டாவக்கிர கீதைக்கு ஒரு விளக்கவுரை கூட இல்லாதது ஆச்சரியம்!!! ஏனெனில், தர்மம் மனிதனின் மனதில் இருந்து உதிப்பவை. ஆகவே யாவராலும் இலகுவாக பொருள் கூற இயலும். ஆனால் ஞானம் என்பது மனதை கடந்தது. மனம் இறக்கும் தருணத்தில் பிறப்பது. அவ்வாறிருக்க மனத்தால் எவ்வாறு பொருள்கூற இயலும்???
வேதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் தவப்புதல்வன் சுகமுனிவர். ஆன்ம விசாரத்தில் அவருக்கு பெரும் சந்தேகம். தந்தையின் பதில்கள் திருப்பதி அளிக்காததால், வியாசர் ராஜரிஷியான ஜனகரிடம் சென்று வினவுவாயாக என்று சுகரை மிதிலைக்கு அனுப்பினார். ஜனகரிடம் வினவி அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து பிராமரிஷியாக வலம்வந்தார் சுகப்பிரம்ம ரிஷி!!!
உலகமே ஞானவான் என்று போற்றும் பல ரிஷிகளும் தங்கள் சந்தேகங்களை தீர்க்க அரசனான ஜனகனை நாடுவார்கலாம்.
ஆனால் ஜனகருக்கு இந்த உயர்ந்த நிலையை அளித்தவர் “அஷ்டாவக்கிரர்” ஆவார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் போன்ற ஓரிரண்டு சீடர்களுக்கு இந்த “மகாகீதை” எனப்படும் “அஷ்டாவக்கிர கீதையை” மிகவும் இரகசியமாக உபதேசித்துள்ளார். பகவான் ஸ்ரீரமணர் “அஷ்டாவக்கிர கீதைக்கு ஈடிணை வேறு ஏதும் இல்லவே இல்லை” என்கிறார்.
Image may contain: 1 person

1 comment:

  1. பகவத் கீதை, அஷ்டாவக்கிர கீதை,(மகா கீதை) இரண்டின் வேறுபாடு+விளக்கம் அருமை.

    ReplyDelete