jaga flash news

Tuesday 30 June 2015

ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம்

ஜோதிடத்தில் பரிகார சூட்சுமம்

முற்பிறப்பு, இப்பிறப்பு, அடுத்த பிறப்பு என மூன்று ஜென்மங்களைப் பற்றி தெரிவிப்பது ஜோதிட சாஸ்திரமாகும். ஜாதக கட்டத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக்குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும், இப்பிறப்பைக்குறிக்கும் பாவம் முதல் பாவமாகும், அடுத்த பிறப்பை பற்றி தெரிவிக்கும் பாவம் ஐந்தாம் பாவமாகும்.

ஜென்ம லக்கினத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்த பிறவியில் அனுபவிக்கப்போகும் பிரார்ப்த கர்மங்களை குறிக்கும் இடமாகும். முற்பிறப்பில் செய்த கர்மங்களை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்கப்போகும் கர்மங்கள குறிக்கும் பாவம் இரண்டாம் பாவமாகும்.

முற்பிறப்பைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். ஒன்பதாமிடத்திற்கு பத்தாக வருவது லக்கினத்திற்கு ஆறாமிடமாகும். எனவே ஆறாமிடம் முன் ஜென்ம வினைகளைக்குறிக்கும். அடுத்த பிறப்பைக்குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். ஐந்தாமிடத்திற்கு பத்தாக வருவது இரண்டாமிடமாகும். எனவே இரண்டாமிடம் அடுத்த பிறவியில் அனுபவிக்கவேண்டியதைக்குறிக்கும்.


லக்கினம் ஜாதகரை குறிக்குமிடமாகும். லக்கினத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக்குறிக்குமிடமாகும். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக்குறிக்குமிடமாகும்.
தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாமிடமாகும். அதாவது ஜாதகர் இப்பிறப்பில் தன்னிச்சையாக செய்யும் தெய்வ வழிபாட்டைக்குறிக்கும் இடம் ஒன்பதாம் இடமாகும். எனவே ஒன்பதாமிடம் ஜாதகரின் இஷ்ட தெய்வம் அல்லது உபாசனா தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.

ஜாதகரின் தகப்பனைக்குறிக்குமிடம் ஒன்பதாமிடமாகும். எனவே தகப்பன் தெய்வத்திற்கு சமமானவனாவான். தகப்பன் வழிபட்ட தெய்வத்தைக்குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குல தெய்வத்தைக் குறிக்குமிடமாகக்கருதப்படுகிறது. தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால் பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக்குறிக்குமிடமாகவும் அமைகிறது.

கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவம் அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராக செயல்படும் அல்லது அந்த குறிப்பிட்ட பாவத்தை அழிக்கும் என்பது ஜோதிட விதியாகும். இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்க வேண்டுமானால் , அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடுகளை தவறாமல் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முன் ஜென்ம வினைகளால் நமக்கு வரும் பிரச்சினைகளிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.

இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக்குறிக்கும் பாவம் பத்தாம் பாவமாகும். அதற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக்குறிக்குமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ, அல்லது தெரியாமலோ செய்யும் தீவினைகளிலிருந்து விடுபட , முதலில் நம் தாய்,தகப்பனை நல்ல முறையில் பேணிக்காத்து வரவேண்டும். அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழும் நமக்கு கிடைக்குமாறு பர்த்துக்கொள்ளவெண்டும். மேலும் இஷ்ட தெய்வ வழிபாட்டை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்துவரவேண்டும். மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் குல தெய்வ வழிபாடு,பித்ரு வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு இவைகளை விட்டுவிடாமல் தொடர்ச்சியாக செய்து வந்தால் கர்ம வினைகளால் வரும் இடையூறுகள் நம்மைத்தீண்டாது என்பது புலனாகிறது.

அடுத்த பிறவியைக் குறிக்குமிடம் ஐந்தாமிடமாகும். அதற்கு பத்தாமிடமாக அமைவது,ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடமாகும். வாய், உண்ணும் உணவு இவைகளை குறிப்பது இரண்டாமிடமாகும். எனவே இந்த ஜென்மத்தில் நாம் பிறர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், அடுத்த ஜென்மத்தில் நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். எனவே முடிந்தவரை அடுத்தவர் வீட்டில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இதனால் நம்முடைய கடன் சுமை குறையும். நாம் பிறருக்கு அன்னமிடுவதால் அவர்கள் நமக்கு கடன் பட்டவர்களாகிவிடுகிறார்கள். இந்த பிறவியில் நமக்கு சோறுபோட்டவர்கள் நம் பெற்றோராகும். எனவே நாம் அவர்களுக்கு கடன் பட்டவர்களாகும். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.
அன்ன தானம் செய்வதால் நம்முடைய பூர்வஜென்ம பாவங்கள் தொலையும், பித்ரு கடன்கள் குறையும், ஆயுள் ஆரோக்கியம் விருத்தியடையும்.

No comments:

Post a Comment