jaga flash news

Tuesday 30 June 2015

திருநீற்று மஹிமை

திருநீற்று மஹிமை

சிவ வழிபாட்டில் திருநீறு அணிவது முக்கிய கடமையாக கருதப்படுகிறது.“நீரில்லா நெற்றி பாழ்” என்பர் பெரியோர்.சிவ பெருமான் தன் நெற்றியில் திருநீறு அணிந்திருப்பதாக திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சிவ பெருமான் தன் நெற்றியில் திருநீறு தரித்துள்ளதாக கூறுகிறார்.எனவே திருநீறு சிவ சின்னங்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது.
திருநீறு அணியும் வழக்கம் சிவ பக்தர்களிடம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.ஆதியில் சுடுகாட்டு சாம்பலே திருநீறாக அணியப்பட்டதாக கூறப்படுகிறது.இன்றளவும் சில வட நாட்டு சிவாலயங்களில் சுடுகாட்டுச்சாம்பல் திருநீறாக பயன்படுத்தப்படுவதை அறியமுடிகிறது.
அவரைச்செடியில் பூச்சி வராமல் தடுக்க அடுப்புச்சாம்பலை தூவுவதை நாம் இன்றும் கண்கூடாகப்பார்க்கலாம்.சாம்பல் ஒரு கிருமி நாசினி என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. வாய் துற்நாற்றத்தைப்போக்குவதற்கும்,பற்களை பாதுகாப்பதற்கும் அடுப்பு சாம்பலையே பற்பொடியாக இன்றளவும் பயன்படுத்தி வருகிறோம்.சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு அடுப்பு சாம்பலையே பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். குறிப்பாக ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்களை சாம்பல் கொண்டு பூசினால் நச்சுத்தன்மை நீங்கும் என்ற காரணத்தினால் நம்முன்னோர்கள் அதை பயன்படுத்தினார்கள்.
எரிந்த கரித்துண்டு,பானை ஓடு இவைகளை கையில் வைத்திருப்பவர்களை, மந்திரவாதிகளால் எதுவும் செய்யமுடியாது. இதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நெருப்பில் பூத்த திருநீறை தினமும் தவறாது நெற்றியில் அணிந்து வந்தால் ஏவல்,பில்லி,சூன்யம் இவைகளால் யாரும் நம்மை துன்புறுத்த முடியாது.எனவே திருநீறு ஒரு நல்ல பாதுகாப்பு கவசமாகும்.
சாதாரண அடுப்பு சாம்பலுக்கே அளவிடமுடியாத ஆற்றல் இருக்கிறது என்றால், முறையாக தயாரிக்கப்பட்ட திருநீறு எவ்வளவு ஆற்றல் உடையதாக இருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
பசுஞ்சாணம் ஒரு கிருமி நாசினி என்பதை அறிந்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.இதனால் வீடு மெழுகுவதற்கும், வீட்டைச்சுற்றி தெளிப்பதற்கும் பசுஞ்சாணத்தைப் பயன்படுத்தினார்கள்.பசுஞ்சாணம் துற்நாற்றம் இல்லாதது.துற்நாற்றத்தைப் போக்குவது.எனவே திருநீறு தயாரிப்பதற்கு பசுஞ்சாணத்தைப் பயன்படுத்துகிறார்கள். பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என்பது ஒரு வித நம்பிக்கை.ஆதியில் சுடுகாட்டு சாம்பலை திருநீறாக அணிந்தவர்கள் பிற்காலத்தில் பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட சாம்பலை திருநீறாக அணியத்தொடங்கியுள்ளனர்.
திருநீறணிந்த சிவ பெருமான் பூத கணங்களின் தலைவனாகக் கருதப்படுகிறார். எனவே பூதகணங்கள் எல்லாம் சிவனுக்கு கட்டுப்பட்டவை என்ற அடிப்படையில், பேய்,பிசாசுகளைக்கண்டு பயந்தவர்களுக்கு திருவைந்தெழுத்தால் மந்திரிக்கப்பட்ட திரு நீறை பூசும் வழக்கம் சிவ பக்தர்களிடையே காணப்படுகிறது.
“மந்திரமாவது நீறு” என்கிறார் சம்பந்தப்பெருமான்.எனவே திருநீறே மந்திரம்தான். திருநீறு அணியும்போது “ ஓம் சிவாய நம:” என்னும் பஞ்சாக்ஷரத்தை ஓதி அணிவது வழக்கம்.இதனால் திருநீற்றிற்கு “பஞ்சாக்ஷரம்” என்ற பெயர் உண்டு.
திருநீற்றிற்கு வேறு சில பெயர்களும் உண்டு.அவை
விபூதி-இதன் பொருள் நிறைந்த செல்வத்தை அளிப்பது
பஸ்மம்-இதன் பொருள் பாவங்களைப்போக்குவது
பஸிதம்-இதன் பொருள் ஒளி வீச செய்வது
க்ஷாரம்-இதன் பொருள் துக்கத்தைப் போக்குவது
ரக்ஷா-இதன் பொருள் பாதுகாப்பு அளிப்பது
சிவ பெருமான் முன் அமர்ந்துள்ள காளையை(நந்தியை) சார்ந்த பசுக்கள் ஐந்து எனக்கூறப்படுகிறது.அவை
கபில வண்ணமுடைய நந்தை
கருமை வண்ணமுடைய பத்திரை
செவ்வண்ணமுடைய சுரபி
வெண்ணிறமுடைய சுசீலை
விசித்திர வண்ணமுடைய சுமனை எனப்படும்.
இவ்வைந்து பசுக்களிலிருந்தே விபூதி,பஸ்மம்,பஸிதம்,க்ஷாரம்,ரக்ஷா என்னும் ஐந்து வகையான திருநீறு உண்டானது என பிருகஜ்ஜாபலம் என்னும் உபநிடதம் கூறுகிறது.
திருநீறு தயாரிக்கும் முறை
பசுஞ்சாணத்தை உருண்டைகளாக்கி வெயிலில் காயவைத்து அந்த உருண்டைகளை உமியினால் நன்கு மூடி நெருப்பூட்டவேண்டு.இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து உமியின் சாம்பலை நீக்கினால் பசுஞ்சாண உருண்டைகள் சாம்பல் உருண்டைகளாக இருக்கும்.அவற்றை எடுத்து ஒரு துணியில் சலித்து வைத்துக்கொண்டால் அதுவே சிறந்த திருநீறாகும்.இதுவே சுலபமாக திருநீறு தயாரிக்கும் முறையாகும்.
திருநீறு அணியும் முறை
1. உடலில் ஆடையில்லாமலோ,ஈர உடையுடனோ திருநீறு பூசக்கூடாது.
2. கண்ணாடியில் பார்த்துக்கொண்டு திருநீற்றை நெற்றியில் பூசக்கூடாது.
3. ஆள்காட்டி விரலால் திருநீறு பூசக்கூடாது.
4. பேசிக்கொண்டும்,சிரித்துக்கொண்டும்,வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் திருநீறு
பூசக்கூடாது.
5. திருநீறு கொடுப்பவர்களும் பேசிக்கொண்டு ஒருவருக்கு திருநீறு கொடுக்கக்கூடாது.திருநீற்றை தரையில் சிந்தக்கூடாது. திருநீற்றை காலால் மிதிக்கக்கூடாது.
6. கோவிலில் திருநீறு வாங்கும்போது ஒரு கையை மட்டும் நீட்டி வாங்கக்கூடாது. வலது கை மேலும்,இடது கை கீழுமாக வைத்து திருநீறு வாங்க வேண்டும்.
7. வாங்கிய திருநீறை இடது கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து தரிக்கக்கூடாது. வலது கையில் பற்றுக்கொண்ட திருநீறை அப்படியே நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும் அல்லது ஒரு சிறு காகிதத்தில் திருநீறை இட்டு அதிலிருந்து எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.
8. நம்மைவிட வயதில் சிறியவர்களின் கைகளிலிருந்து திருநீறை எடுத்து பூசிக்கொள்ளக்கூடாது. திரு நீறை நம் கையில் வாங்கி, அதிலிருந்துதான் எடுத்து பூசிக்கொள்ள வேண்டும்.
9. திருநீற்றை ஒருவருக்கு தரும்போதும், நாம் பூசிக்கொள்ளும்போதும், “ஓம் சிவாய நம:” என்ற மஹாமந்திரத்தை பக்தியுடன் சொல்லவேண்டும்.
10. சிவ தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருநீறை நீரில் குழைத்து பூசிக்கொள்ள வேண்டும். சிவ தீட்சைபெறாதவர்கள் நீரில் குழைக்காமல் அப்படியே உதிரியாக பூசிக்கொள்ள வேண்டும்.
11. திருநீறு பூசும்பொழுது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு பூசவேண்டும்.
12. நடந்து கொண்டும்,படுத்துக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
திருநீறு அணிய வேண்டிய காலங்கள்
1.சந்தியாக்காலங்களில்
2. சூரிய உதய,அஸ்தமன காலங்களில்
3. நீராடிய உடன்
4. பற்களை சுத்தம் செய்த உடம்
5. உண்பதற்கு முன்னும்,பின்னும்
6. பூஜை செய்வதற்கு முன்னும்,பின்னும்
7.உறங்குவதற்கு முன்னும்,பின்னும்
8. மல,ஜலம் கழித்த பின்பு
9. சிவ தீட்சை பெறாதவரை தீண்ட நேர்ந்தால் அச்சமயத்தில்
10. பூனை,கொக்கு,எலி போன்ற பிராணிகளை தீண்ட நேர்ந்தால் உடனே திருநீறு அணிய வேண்டும்.


திருநீற்றின் மஹிமை
1. திருநீற்றுப்பதிகம் பாடி திருநீறு பூசி மதுரை கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார் திருஞான சம்பந்தர்.
2. திலகவதியார் தன் தம்பி திருநாவுக்கரசருக்கு திருநீற்றை திருவைந்தெழுத்தால் ஓதிக்கொடுத்தார்.துடிதுடிக்க வைத்துக்கொண்டிருந்த வயிற்றுவலி நீங்கியது.
3. நெற்றி நிறைய திரு நீறு பூசி நித்தமும் நியமத்துடன் சிவ பூசை செய்து யமனை வென்றார் மார்க்கண்டேயர்.
திருநீறு அணிவதால் உண்டாகும் நன்மைகள்
1. உடல் நாற்றத்தைப்போக்கும்.
2. நோய்க்கிருமிகளைக்கொல்லும்.
3. உடலை சுத்தம் செய்யும்.
4. வியாதிகளைப்போக்கும்.
5. தீட்டைக்கழிக்கும்.
6. ஏவல்,பில்லி,சூனியம் இவைகளிலிருந்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
7. முகத்திற்கு அழகைத்தரும்.
8. ஞாபக சக்தியைப்பெருக்கும்.
9. ஞானத்தை உண்டாக்கும்.
10. புத்தி கூர்மையைத்தரும்.
11. பாவத்தைப்போக்கும்.
12. பரகதியைத்தரும்.

No comments:

Post a Comment