jaga flash news

Tuesday 30 June 2015

சித்தர் என்பவர், ரிஷி என்பவர் யார்?

சித்தர் என்பவர், ரிஷி என்பவர் யார்?

சித்தர் என்னும் சொல் தற்காலத்தில் பலரை மதிமயங்கச்செய்யும் சொல்லாக அமைந்துள்ளது. சித்தர் என்ற சொல்லின் பொருள் விளங்காததால் பலர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் இந்த வார்த்தையே வெறுக்கத்தக்க வார்த்தையாக அமைந்துவிடவும் வாய்ப்புள்ளதால் அது பற்றி எனக்கு தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்ட அளவில் “சித்தர் என்பவர் யார்?” என்பதை கொஞ்சம் அலசிப்பார்க்கலாம் என தோன்றுகிறது.
சித்தி என்றால் வெற்றி என்று பொருள். சித்தர் என்றால் வெற்றியாளர் அல்லது சாதனையாளர் அல்லது வல்லுனர் என்று பொருள் அவ்வளவுதான். ஒரு மனிதர் ஏதாவது ஓரிரு துறைகளில் சாதனை படைப்பதை இன்றளவும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒரே மனிதர் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்ததாக சரித்திரத்தில் எங்கும் இல்லை. உதாரணமாக புரட்சிக்கவிஞன் பாரதி ஒரு கவிதை சித்தன், கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டு சித்தன்,இசை ஞானி இளைய ராஜா ஒரு இசை சித்தன். வலம்புரி ஜான் ஒரு வார்த்தை சித்தன். கணிதமேதை ராமானுஜன் ஒரு கணக்கு சித்தன். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனை நிகழ்த்தினால் அவர்களை சமூகம் ஒரு சித்தனாக பாவிக்கிறது. ஆனால் இவர்களில் யாரும் உலக விசயங்கள் அனைத்தையும் தெரிந்தவர்கள் இல்லை.
சித்தர் என்ற வார்த்தைக்கு பெரும்பாலானவர்கள் “அனைத்தும் அறிந்தவர்” என பொருள் காண முற்படுகிறார்கள். இது அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததையே காட்டுகிறது. பொறியாளர் என்பது ஒரு பொது வார்த்தை. பொறியியல் துறையில் பல பிரிவுகள் உள்ளதை நாம் அறிவோம். கட்டிடப்பொறியாளரும்,கணணிப்பொறியாளரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத பாமர மக்களுக்கு இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளமுடியாது.
நான் மின்னியல் துறை பொறியாளன்,என் கிராமத்தில் சிலர் என்னிடம் கட்டிட வரைவு படம் போட்டுத்தருமாறு கேட்டதுண்டு. என் தாய் படிப்பறிவு இல்லாதவர்.அவர் நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்த சமயம் மருத்துவர் வழங்கிய மாத்திரைகளை பார்த்து எந்த மாத்திரையை எந்த நோய்க்கு சாப்பிடவேண்டும் என்று பார்த்து சொல் என்றார். எனக்கு தெரியவில்லை என்று சொன்னேன். இதைப்பார்த்து சொல்லத்தெரியாதவன் பள்ளிகூடத்திற்கு போய் என்னத்தை படிக்கிறாய் என கேட்டார். மருந்தாளுநர் படிப்பு படித்திருந்தால் மட்டுமே மருந்துகளை பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்பது அவருக்குத் தெரியாது. அவருடைய பார்வையில் நான் எழுத படிக்கத்தெரிந்தவன். மாத்திரை மீது ஏதோ எழுதியிருக்கிறது. அதை பார்த்து படித்தால் விசயம் தெரிந்துவிடும் என நினைக்கிறார். இது போன்றுதான் சித்தர் என்பது ஒரு பொது வார்த்தை என்பதை அறியாமல், யாராவது தன்னை சித்தர் என்று கூறிக்கொண்டால் அவரிடம் சென்றால் நமக்கு வேண்டியது எதுவாக இருந்தாலும் கிடைத்துவிடும் என்ற தவறான நம்பிக்கையில் பலர் அனுகுகிறார்கள்.
இந்த உலகத்தில் அனைத்தும் அறிந்தவன் என கூறிக்கொள்ள ஒரு மனிதன் கூட இருக்கமுடியாது. தற்காலத்தில் சிலர் தன்னை திரிகால ஞானி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவன். எனக்குத்தெரியாமல் ஒரு ஈ,எறும்பு கூட அசையாது எனக்கூறிக்கொள்பவர்கள் உள்ளனர். ஆயக்கலைகள் அறுபத்து நான்கு எனக்கூறுவர். “அந்த அறுபத்து நான்கு கலைகளிலும் எனக்கு ஞானம் உண்டு, அவை பற்றி என்ன கேட்டாலும் என்னால் விளக்கமுடியும்” என எந்த சித்தராவது கூறியிருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஒருவர் தன்னை “அனைத்தும் அறிந்தவர்” என கூறிக்கொள்வாரானால், அவருக்கு உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து விலங்குகளின் மொழி தெரிந்திருக்கவேண்டும், அனைத்து பறவைகளின் மொழி தெரிந்திருக்கவெண்டும். ஆகாயத்தைப்பற்றி அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். பூமியைப்பற்றி அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். அவருக்கு தெரியாதது என்று உலகத்தில் எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி ஒருத்தர் எங்காவது இருக்கிறார? நிச்சயமாக அப்படி ஒருவர் இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
ரிஷி என்றால் கண்டுபிடிப்பாளர் என்று பொருள். இவர்கள் எதை கண்டுபிடித்தார்கள்? இவர்கள் ஆகாயத்தில் ஒளிவடிவமாகவும்,ஒலி வடிவமாகவும் உள்ள மந்திரங்களை கண்ணால் கண்டு,காதால் கேட்டு உலகத்திற்கு தெரிவித்தார்கள். அதனால் இவர்களை ரிஷி என அழைக்கிறார்கள். மந்திரங்கள் பல உண்டு. ஒவ்வொரு மந்திரத்தையும் கண்டுபிடித்த ரிஷி உண்டு. ஆனால் அனைத்து மந்திரங்களையும் ஒரே ஒரு ரிஷி மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு சில மந்திரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இவர்களில் யாரும் “ அனைத்தும் அறிந்தவர்” கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு காரணத்திற்காக மட்டுமே படைக்கபட்டிருக்கிறான். அதை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இயற்கை அவனை தயார் படுத்துகிறது. அனைத்தையும் இயக்குவது
ஒரே பரம்பொருள்தான். ஆனால் மனிதர்கள் இயங்கும் விதம் அவர்களின் படைப்புத்தன்மையைப்பொருத்தது. மின்விளக்கையும்,மின் விசிறியையும் ஒரே மின்சாரம்தான் இயக்குகிறது. ஆனால் அவைகள் இயங்கும் விதம் வேறு. இதை புரிந்துகொண்டால் அறியாமை நம்மை விட்டு விலகிவிடும். ஒரு சித்தர் அல்லது ஒரு ரிஷி அனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருப்பார் என எதிர்பார்ப்பது, எதிபார்ப்பவரின் பாமரத்தனமே தவிர வேறொன்றுமில்லை.
“கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்னும் தமிழறிஞர்களின் கூற்று சத்தியமானது.

No comments:

Post a Comment