jaga flash news

Tuesday, 30 June 2015

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை

ஆலயங்களிலோ அல்லது வீடுகளிலோ பூஜை செய்யும் முறையை கவனித்துப்பாருங்கள் அதில் ஒரு ரகசியம் மறைந்திருப்பதை அறியலாம்.அது என்னவென்று பார்ப்போம்.
பஞ்ச பூத கூட்டு எங்கே நிகழ்கிறதோ அங்கே ஒரு உருவாக்கம் நிகழும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.அதன் அடிப்படையிலேயே வேண்டுதல் செய்யும் முறையாக, பூஜைகள் செய்யும் வழிமுறைகளை உருவாக்கினார்கள்.நோக்கம் எதுவும் இல்லாமல் எந்த ஒருபூஜையும் செய்யப்படுவதில்லை.இதன் அடிப்படையிலேயே சங்கல்பம் இல்லாத பூஜைக்கு பலன் இல்லை என கூறுவார்கள். பஞ்ச பூதங்களை ஓரிடத்தில் சேர்த்து வைத்து, அந்த இடத்தில் என்ன சங்கல்பம் செய்தாலும் அது நடை முறையில் நிறைவேறி வருவதை அனுபவபூர்வமாக உணரலாம். பஞ்ச பூதங்களை எப்படி சேர்ப்பது என பார்ப்போம்.
பூஜைகள் செய்யும்போது முதலில் மண்ணினாலோ அல்லது சாணத்தினாலோ அல்லது மஞ்சள் பொடியினாலோ ஒரு பிள்ளையார் பிடித்து வைப்பார்கள், இந்த பிடித்து வைத்த பிள்ளையார் மண் தத்துவத்தைக்குறிப்பார். அடுத்து அதன் அருகே ஒரு மண் கலசத்திலோ அல்லது பித்தளை சொம்பிலோ நீர் நிரப்பி வைப்பார்கள்.நீர் தத்துவத்தை சேர்ப்பதற்காக இப்படி செய்கிறார்கள்.அடுத்து அதன் அருகே தீபம் ஏற்றி வைப்பார்கள்.நெருப்பு தத்துவத்தை சேர்ப்பதற்காக தீபம் ஏற்றப்படுகிறது.அடுத்து சாம்பிராணி புகையை போடுவார்கள்.அகர்பத்தி ஏற்றி வைப்பார்கள்.இந்த புகை காற்றில் மனம் பரப்பும் தன்மையுடையது.காற்று தத்துவத்தை சேர்ப்பதற்காக சாம்பிராணி புகை போடப்படுகிறது,அகர்பத்தி ஏற்றி வைக்கப்படுகிறது. ஆகாய தத்துவம் எங்கும் நிறைந்திருக்கிறது.(மீன் எப்பொழுதும் நீருக்குள்ளேயே இருப்பதால் நீரை அது உணர்வதில்லை,அது போல் நாம் எப்பொழுதும் ஆகாயத்திற்குள்ளேயே இருப்பதால் நாம் ஆகாயத்தை உணர்வதில்லை.) இதையடுத்து கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. கற்பூர ஆரத்தி காட்டும்போது கூடவே மணியும் அடிக்கப்படுகிறது. கற்பூர தீபம் விந்து(ஒளி) தத்துவத்தையும்,மணி ஓசை நாத (ஒலி) தத்துவத்தையும் குறிப்பவையாகும்.பூஜை செய்யும்போது என்ன நிகழ்கிறது என்றால் ஸ்தூல தத்துவங்களான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும்,சூட்சும தத்துவங்களான விந்துவும்,நாதமும் ஓரிடத்தில் இணைகின்றன. அந்த இடத்தில் நாம் என்ன சங்கல்பம் செய்கிறோமோ அந்த சங்கல்பம் எளிதில் நிறைவேறுகிறது.இறை வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை கடவுளின் உருவச்சிலைகளாகும். ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதற்காக கடவுளின் உருவம் அதற்கு தகுந்த வடிவத்தில் அமைக்கப்படுகிறது. அந்த வடிவம் வேண்டியதை தரும் என்ற நம்பிக்கை மூளையில் பதிய வைக்கப்படுகிறது.கடவுள் சிலைகள் எல்லாமே ஒரு வகையான அடையாளக்குறியீடுகளே.
அளவற்ற ஆற்றல் உடையது மனித மூளை என்றாலும், அவரவர் தேவைக்கு தகுந்தார்போல்தான் நாம் அதை பயன்படுத்தி வருகிறோம்.மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டே உருவ வழிப்பாட்டு முறையில் பன்மை தன்மை கடைபிடிக்கப்படுகிறது.கடவுள் தன்மை ஒருமைதான் என்றாலும்,அவரவர் பார்க்கும் விதத்தில் அது பன்மையாக தோற்றமளிக்கிறது.
கடவுள் படங்களையோ அல்லது உருவங்களையோ பார்த்து மனதில் பிரார்த்தனை செய்யும்பொழுது,அந்த கடவுள் உருவத்திற்கு முன்னே மேற்கூறியவாறு பஞ்ச பூத சேர்க்கையை ஏற்படுத்திக்கொண்டு பிரார்த்தனை செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும்.

No comments:

Post a Comment