jaga flash news

Monday 12 June 2017

!!*கவியரசு கண்ணதாசன் உரைத்தது*!!

!!*கவியரசு கண்ணதாசன் உரைத்தது*!!
எனது நண்பர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.
நல்லது. இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை. எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும். ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.
“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.
பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.
நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும். காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.
நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை விடவா அவன் உயர்ந்து விட்டான்.
ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.
சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை வரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.
ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டு பிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான். அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை. வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.
பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான். “கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?” “அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.
அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது அவனுக்குத் தெரியுமா? அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம். ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.
`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே! `மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது..

1 comment: