jaga flash news

Friday 10 July 2020

வில்வம்

இலங்கை, இந்தியா, போன்ற ஆசிய நாடுகளில் அதிக அளவில் காணப்படும் இப்பழம் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் இருந்து வருகிறது. நீண்ட வரலாறு கொண்ட வில்வ மரமானது, வில்வை, குசாபி, கூவிளம் போன்ற பல வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இது சைவ சமய வழிபாட்டில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சிவபெருமானின் தலவிருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது. நம்முடைய சாஸ்திரங்கள்,புராணங்கள் என அனைத்தும் இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.

வில்வத்தின் வகைகள்

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. அவற்றில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வ மரங்கள் காணப்படுகின்றன. வில்வ இலைகளை கொண்டு சிவனாரைத் தரிசித்தால், முந்தை ஜென்மங்களில் புரித்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். அதே சமயத்தில் வில்வமர நிழல், காற்று ஆகியஅனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

மருத்துவ நன்மைகள்

வில்வ மரத்தின் அனைத்து பாகங்களும் அதீத மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு ஆகிய அனைத்தும் பல்வேறு பிணிகளுக்கு மருந்தாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பயன்களையும், பயன்படுத்தும் விதத்தையும் நாம் பார்ப்போம் வாருங்கள்....!

வில்வ இலை தொற்று வியாதிகளை நீக்கவல்லது, வேட்டைப் புண்கள், பித்தம் ஆகியவற்றை போக்கும் தன்மையும் இதற்கு உள்ளது.

வில்வ பழம் மலமிளக்கியாக செயல்படுகிறது. வில்வ இலைக் கஷாயம் பருகக் கைகால் பிடிப்பு, உடல்வலி முதலியவை குணமாகிவிடும்.

இலைச்சாறு ஜலதோஷம், இருமல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு நிவர்த்தியளிக்கிறது.
இதன் பூ மந்தத்தை போக்கவல்லது. வில்வ காய் பசியை தூண்டிவிடும், மலத்தைக் கட்டும், குடல் கிருமிகளை நீக்கும்.

வில்வ இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும்.

மேலும் இந்த சாற்றினை நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும். இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து  80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் குறையும்.

வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.
வில்வ மரத்தின் பூவானது வாய் துர்நாற்றத்தைப் போக்கி விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது.

வில்வத்தின் இளம் பிஞ்சை அரைத்து 2-6 கிராம் எருமைத்தயிரில் கலந்து கொடுக்க அல்சர், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நிற்கும். இது குழந்தைகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் மருந்தாகும்.

வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொண்டால் பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம், இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும்.

வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நீர் சேர்த்து காய்ச்சி குடிக்க மூல நோய் கட்டுக்குள் வரும்.

வில்வக்காயை பசும்பால் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்க மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

வில்வத்தினை காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு செய்து ஊறுகாய், குடிநீர் என பல வகைகளிலும் உட்கொள்ளலாம்.

புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து,மாச்சத்து, கலோரி, உள்ளிட்ட பல சத்துக்கள் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பது வியப்பான செய்தி என்றாலும் நூறு சதவீதம் உண்மையானது.

சித்த மருத்துவத்தில், பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கியமான மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. பண்டைய நாட்களில், `பழங்களின் ராஜா’ எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டவை.

வில்வம், மஹாவில்வம் என இதில் இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரைநோய், வயிற்றுப்போக்கு, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிறு உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து.
வில்வம்... விசேஷம்!

* நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy), மூக்கில் நீர்வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், படிப்படியாக நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் தொடங்கும்.

* ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர்விட்டு வைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

* 50 கிராம் வில்வ இலைத்தூளுடன் 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் இதில் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். 

இது, ஈஸ்னோபோலியா (Eosinophilia) என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும். இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பர்ய முறையாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது.

* வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும்.

* வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்கு (பெப்டிக் அல்சர்) கொடுக்கலாம். இதை நாமே வீட்டில் செய்துகொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்துக்கு காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு டீஸ்பூன், இரவில் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

* அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக் கொண்டு செய்யும் வில்வாதி லேகியம் நல்மருந்து.

* சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை.

* வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து.

* வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறு பயறு, நெற்பொரி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர்விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும்.

* வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.
உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. 

வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்னர் கூறியதுபோல் ஊறவைத்தோ, கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தின் `சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

பல கொடிய நோய் தாக்குதல்களில் தற்போது நாம் அவதிப்பட்டு வரும் சூழலில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. 

அந்த வகையில், மேற்கண்டவாறு பல இயற்கை மருந்துகளின் பயன்களை தெரிந்து அதனை உட்கொண்டு, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வது அவசியமாகும். 


No comments:

Post a Comment