jaga flash news

Tuesday 21 July 2020

திரௌபதி

மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.

திரௌபதி மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார். திரெளபதி கரிய நிறத்தவர்; அழகில் சிறந்தவர்.

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசத்தில் நடைபெற இருந்த சுயம்வரத்திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வரலாற்று உண்மையை விபரித்தார். முனிவர் ஒருவருக்கு அழகிய பெண் இருந்தாள், அவளுக்கோ திரு­மணம் நடைபெறக் காலதாமதம் ஆகிக் கொண்டே இருந்தது. அப்பெண்ணோ “தனக்கு திருமணம் விரைவில் நடைபெறவேண்டும்” என்று பரமசிவனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பரமசிவனும் அவள் முன்பு தோன்றினார். “பெண்ணே!, நீ விரும்பிய வரத்தைக் கோள்” என்றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பயபக்தியுடன் எம் பெருமானே!, நற்குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பரமசிவன் பதிலேதும் கூறாமல் நின்றார். அப் பெண்மணியோ, தான் வேண்டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூறலானாள். இவ்வாறு அவள் ஐந்து தடவைகள் “நற்­குணங்களைக் கொண்டவரை நான் கணவனாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்டினாள்.

ஐந்தாம் முறையாக அப்பெண் கூறிய பின்பு பரமசிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கணவர்களைப் பெறுவாயாக” என்று வரமருளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்டுமென அருளிச் செய்தீர்களே” என்று அப்பெண்மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அருளிவிட்டேன், அடுத்த பிறவியில் நீ இந்த வரத்தின்படி கணவர்களைப் பெறுவாய்” என்று கூறி, பரமசிவன் மறைந்தார். பரமசிவனால் வரம்பெற்ற அப்பெண்தான் துருபதன் புத்திரியான திரெளபதையாவாள் என்று கூறிமுடித்தார் வியாசக முனிவர்.

ஐந்து கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

No comments:

Post a Comment