jaga flash news

Sunday 11 October 2020

செவ்வாய்_தோஷமும்_வழிபாட்டு_முறைகளும்

#செவ்வாய்_தோஷமும்_வழிபாட்டு_முறைகளும்.

லக்னம், சந்திர ராசி, சுக்கிரன் நின்ற ராசி ஆகிய மூன்றுக்கும் 2,4,7,8,12 ல் செவ்வாய் நிற்பது செவ்வாய் தோஷ ஜாதகமாக கருதப்படும். அந்த ஸ்தானத்தில் மற்ற கிரகங்கள் இருந்தாலும் தோஷமே.

#செவ்வாய்_தோஷ_கணிப்பின்_முக்கியத்துவம்.

செவ்வாய் ஒரு போர் கிரகம், முரட்டு தனமும் கோபமும் கொண்ட கிரகம், பெண்களுக்கு கணவரை குறிக்கும், ஆண்களில் ஆண்மை தன்மையையும் வீரியத்தையும் குறிப்பவர். இத்தகைய செவ்வாய் பகவான் அமர்ந்த பாவகத்தை தன் வசப்படுத்த போராடும். 

இத்தகைய செவ்வாய் உடன் சேரும் கிரகத்துடனும் போராடும் (சுக்கிர அணி கிரகங்கள் உடன் மட்டும்.) 

திருமண அமைப்பின் முக்கியமான ஸ்தானங்களாக,
2ம் இடம் குடும்ப ஸ்தானமாகவும்
4ம் இடம் சுக ஸ்தானமாகவும்
7ம் இடம் களத்திர ஸ்தானமாகவும்
8ம் இடம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகவும் ஆயுள் மற்றும் மர்ம உறுப்புக்களை சொல்லும் ஸ்தானமாகவும்
12ம் இடம் அயன சயன போகம் கட்டில் சுகத்தை குறிக்கும் ஸ்தானமும் ஆகும். 

ராசி ஜாதகரின் உடலை குறிப்பதாலும்

சுக்கிரன் களத்திரகாரகனாகவும் சுக போகங்களுக்கு காரகராகவும் வருவதால்,

இந்த ஸ்தானங்களில் அல்லது சந்திரன் சுக்கிரன் உடன் செவ்வாய் அமர்ந்தால்,

ராசியில் அமர - கட்டுமான உடல், தடித்த தோல்கள், தாயுடன் போராட்டம், மிக வேகமான செயற்பாடுகள், கோபக்காரர்.

சுக்கிரன் உடன் சேர்க்கை பெற்றிட, போகத்தில் அதீத ஈடுபாடு, அவசரமான தாம்பத்தியம், களத்திரர் இடையே முரண்பாடுகள், சண்டை பிடிப்பது, 

2ல் செவ்வாய் - குடும்பத்தில் போராட்டம் பண்ணுபவர், பேச்சில் வம்பு வரும்.

4ல் செவ்வாய் - முழு நேரம் சுகத்தை அனுபவிக்க துடிக்கும்,

7ல் செவ்வாய் - களத்திரத்துடனான போராட்டம் மற்றும் சண்டை சச்சரவு, 

8ல் செவ்வாய் - அதீத வீரியம், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கும், களத்திரத்தின் ஆயுளுக்கு பிரச்சினை, களத்திரத்தின் குடும்பத்தாருடன் சேராது. 

12ல் செவ்வாய்- தாம்பத்திய பிரச்சினையை கொடுக்கும். 

செவ்வாய் இரத்தத்திற்கு உரிய கிரகம். ரத்த அணுக்களுக்கு உரிய கிரகம்.ஒரு சொட்டு விந்தணுவுக்கு 100 சொட்டு இரத்தம் எனக் கூறப்படுகிறது. எனவே, உடல் உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடல் உறவின் தன்மையை அல்லது காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான்.
தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆணை திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

திருமணம் என்பது ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும். இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும்.

#செவ்வாய்_தோஷத்தின்_அறிவியல்_சார்ந்த_விளக்கம்:

இரத்தப் பிரிவுகளான A,B,AB,O எனும் இரத்தத்தில் Rhesusfactor - (RH-) உள்ள பெண் திருமணம் செய்யு முன் மருத்துவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சிறந்தது. நோய்களுக்காக மட்டுமல்லாது, RH பிரிவு பற்றியும் அறிந்து, கருத்தரித்த காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் காணலாம். RH- உள்ள பெண்ணின் குழந்தை RH+ ஆக இருக்குமிடத்து பல பிரச்சனைகளை உருவாக்கும். பெரும்பாலும் முதல் முறை கருத்தரித்த காலத்தில் தாய்க்கு பிரச்சனைகளை தராத போதும், பின்னர் கருத்தரிக்கும் காலத்தில் தாய்க்கோ,பிள்ளைக்கோ ஆபத்து ஏற்படலாம். கூடவே RH இரத்த ஒவ்வாமை நோயையும் குழந்தைக்கு ஏற்படுத்தலாம்

#செவ்வாய்_தோஷ_விதி_விலக்குகள்

தோஷமாக கருதப்படும் 2 4 7 8 12 ஆகிய ஸ்தானங்களில் செவ்வாயின் ராசியான மேஷம் விருச்சிகமாகி ஆட்சியாகவோ மகரத்தில் உச்சமாகி இருந்தாலோ தோஷமில்லை.

குரு பார்வை சேர்க்கை பெற்று சுபத்துவமடைந்தால் தோஷமில்லை.

சூரியன் பார்வையில் தோஷமோ சேர்க்கையில் அஸ்தங்கமோ அடைந்தோ இருப்பின் தோஷமில்லை.

சனி பார்வையினால் அல்லது சேர்க்கையில் பாதிப்படைந்தால் தோஷமில்லை.

புதன், கேது உடன் சேர்ந்து கிரக யுத்தமடைந்தாலும் தோஷமில்லை.

கடக சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமாகாது.

மிதுனம் கன்னி ராசிகள் 2ம் இடமாகிய செவ்வாய் நின்றால் தோஷமில்லை.

4ம் வீடாக மேஷம் விருச்சிகமாகி செவ்வாய் ஆட்சி ஆனாலும் தோஷமில்லை.

கடகம் மகரம் 7ம் இடமாகி செவ்வாய் நின்றாலும் தோஷமில்லை.

8ம் வீடாக மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனமாகி செவ்வாய் நின்றால் தோஷமில்லை.

12ம் இடம் மேஷம் ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரமோ ஆகி செவ்வாய் நிற்பின் தோஷமில்லை.

சிம்மம் கும்பத்தில் இருந்தாலும் தோஷமில்லை. 

செவ்வாய் நின்ற ராசி நாதன் லக்ன கேந்திர திரிகோண த்தில் நிற்பின் தோஷமில்லை.

ஆகவே செவ்வாய் தோஷமாகாத ராசிகளாவன: 
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய 7 ராசிகளில் நிற்கும் செவ்வாய் ஒரு போதும் தோஷமாகாது. ஏனைய 5 ராசியை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

#வழிபாட்டு_முறைகள் (பரிகாரங்கள்)

* செவ்வாயின் அதிதேவதையாக வரும் முருகப் பெருமானிற்கு மாதாந்தம் வரும் ஷஷ்டி விரதங்கள் கடைப்பிடிக்கலாம்.

செவ்வாய்க்கிழமைகளில் முருகனிற்கு   சிகப்பு திரியில் நெய் தீபம் போடலாம். (எந்த பாவகத்தில் தோஷமோ அத்தனை தீபங்கள்)

அறுபடை வீடுகளை தரிசனம் செய்யலாம்.

செவ்வாய் சார்ந்த வஸ்துக்களை தானம் கொடுக்கலாம்.

வைத்தீஸ்வரர் ஆலயம் - செவ்வாய் பரிகாரஸ்தலம் சென்று வழிபாடு செய்யலாம். அவ்வாலயத்தில் தீர்த்தமாடி, அருள்மிகு தையல் நாயகி உடன் உறை வைத்தியநாதரையும் செல்வகுமார சுவாமிகளையும் தரிசிக்க சிறப்பு.

அகத்தீஸ்வரர் ஆலய தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருக்கலாம்.

கந்தபுராணம், திருமுருகாற்றுப்படை, சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சஷ்டி கவசம் மற்றும் கந்தர் அனுபூதி போன்ற நூல்களை பாராயணம் செய்வதனால் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்து தப்பலாம். 


No comments:

Post a Comment