மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். மேலும் உத்திராயண புண்ய காலம் எனப்படும் தேவர்களின் பகல் பொழுது சந்திர தரிசனம் என்பதும் இதன் கூடுதல் சிறப்பாகும். மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றி 7.00 மணிக்குள் மறைந்துவிடும்.
அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
ஜெனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே ‘விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" என திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.
சந்திரன் தட்சனிடம் பெற்ற சாபம்:
ஒருமுறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.
தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவபெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்தப் பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
மூன்றாம் பிறை பிறந்த கதை:
ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்கச் சென்றார். சந்திரன் ஒரு முழு நிலவாக இருக்கும் நிலையில் தன் அழகின் மீது கொண்ட கர்வத்தால் விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான். இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் 'உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்" என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். மூன்றாம் பிறை நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.
இந்த மூன்றாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டுத் தேடிக்கண்டுபிடித்து தரிசிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.
சந்திர தரிசனம்:
சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் “ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம!” அல்லது “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி” என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலதிலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ வராது.
செல்வச் செழிப்பு சேரும்:
சந்திரனை ராஜ கிரஹம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மஹா லக்ஷ்மியை சந்திரசகோதரி எனக் கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திர சகோதரியான மகாலட்சுமியின் அருள் கிட்டி அனைத்து செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.
சந்திராஷ்டம தோஷம் போக்கும்:
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6,8,12 ஆகிய இடங்களில் கோசாரக சந்திரன் வரும்போது பலவித தீமைகளை ஏற்படுத்துகிறது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். இது போன்ற அமைப்புடையவர்கள் சந்திரதரிசனம் செய்து வர சந்திராஷ்டமம் மற்றும் சந்திரனின் மறைவுத்தன்மையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
பார்வை தரும் மூன்றாம் பிறை:
ஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும் சூரியனை வலது கண்ணிற்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாகக் கொண்ட கால புருஷ ராசிக்கு லக்னம் மற்றும் முகத்தைக் குறிக்கும் மேஷத்தில் சந்திரன் உச்ச சூரியனோடு நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். பார்வை மற்றும் லென்ஸை குறிக்கும் சுக்கிரனின் இணைவும், குருவின் பார்வையும் எந்தவிதமான பார்வை கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும் என்பது நிதர்சனம்.
ஜோதிடத்தில் சந்திர தரிசனம்:
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே மாலை
6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
ஒருவரின் மன நிலையைத் தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது, ஜாதகரின் மனநிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது, சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது, ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும், ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும், உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும்.
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி எனச் சொல்லப்படுகிறது. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். .
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
சந்திர தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்:
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், மனோ காரகனான சந்திரனை அமாவாசையிலிருந்து மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். மேலும் சந்திர பகவான் இடது கண்ணிற்கு காரகர் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு இடது கண்ணில் பார்வை கோளாறுகள் இருந்தால் நிவர்த்தியாவதோடு கண் பார்வை தெளிவடையும்.
திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது. அதிலும் ஆயுள் காரகரான சனி பகவானின் நாளில் சந்திர தரிசனம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படுவதோடு புணர்ப்பு தோஷம் போக்கும்.
மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிற போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மிஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.
புத்திகாரகனான புதனின் நாளில் சந்திர தரிசனம் செய்வது மனது மற்றும் மூளை சம்மந்தப்பட்ட பிரச்னைகளை போக்கும். மன நோயாளிகளுக்கும் நோயின் தீவிரத்தை குறைத்து நிம்மதி அளிக்கும். மேலும் ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் முறையே கால புருஷ ராசிக்கு கர்ம ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் பயணம் செய்வதோடு மட்டுமல்லாமல் கர்ம காரகன் வீட்டில் பயணம் செய்து சனைச்சர பகவான் பார்வையும் பெறும் நிலையில் சந்திர தரிசனம் செய்வது தொழில் மற்றும் வேலையில் உள்ள பிரச்னைகள் எல்லாம் நீங்கி நாம் விரும்பும் விதத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நிதர்சனம்.
அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:
ஒவ்வொரு மாதமும் சந்திர தரிசனம் வரத்தானே செய்கிறது? அதில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது என சிலர் மனதில் சந்தேகம் எழலாம். சந்திரனும் பிறையும் இந்துக்கள் மட்டுமல்லாது அனேக மதங்களில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளன. அதாவது இஸ்லாம் மதம், ஜைனம், கிறித்தவம், இந்து மதம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது எனத் தெரிவிக்கிறது.அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.
No comments:
Post a Comment