jaga flash news

Monday, 2 November 2020

அலர்ஜி_அறிகுறிகள் #காரணங்கள் #தீர்வுகள்

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
#அலர்ஜி_அறிகுறிகள் #காரணங்கள் #தீர்வுகள்
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

`தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்றொரு பழமொழி உண்டு. தலைவலி, காய்ச்சல் வரிசையில் ஒவ்வாமையையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒவ்வாமை மனிதர்களைப் படுத்தியெடுக்கிறது. சிலருக்குப் புகை ஒவ்வாமை; சிலருக்குத் தாளிக்கும் வாசனை ஒவ்வாமை; இன்னும் சிலருக்கு அதிகாலைக் காற்று ஒவ்வாமை. தும்மல், அரிப்பு, தடிப்பு... என ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவுகள் எரிச்சலூட்டுபவை.

உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருள் உணவாகவோ, மருந்தாகவோ, தூசியாகவோ உள்ளே நுழையும்போது உடல் தனது எதிர்ப்பைக் காட்டும். ஒவ்வாமை எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் வரலாம். ஒவ்வாமையைச் சரியாகப் புரிந்துகொண்டு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

#ஒவ்வாமை_எப்படி_வெளிப்படும்?

தலைவலிக்காக மாத்திரை சாப்பிடுகிறோம். தலைவலி சரியானால் அது சாதாரண விளைவு. அந்த மாத்திரை தலைவலியைப் போக்காமல், உடலில்  வேறு சில பிரச்னைகளை உருவாக்கலாம். உதட்டில் வீக்கம், சருமத்தில் தடிப்புகள், வீக்கம் ஏற்படலாம். சிலருக்கு சருமத்தில் மாற்றங்கள், தொண்டையின் உள்பகுதியில் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற விளைவுகளும் ஏற்படலாம். இப்படி அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தினால், அதை ஒவ்வாமை  என்று புரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில், ஒவ்வாமை உயிரைக்கூடப் பறிக்கக்கூடும்.

#ஒவ்வாமையின்_வகைகள்

ஒவ்வாமையால் ஏற்படும் விளைவுகளின் அடிப்படையில் அதை வகைப்படுத்தலாம். சாதாரணமாக சருமத்திலோ, தொண்டையிலோ சிறு பாதிப்புகளைக் கொடுப்பது மிதமான ஒவ்வாமை. உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதத்தை உண்டாக்குவது தீவிர ஒவ்வாமை. இதை, ‘அனாபிலாக்‌சிஸ்' (Anaphylaxis) என்பார்கள்.

உணவு, சுவாசிக்கும் காற்று ஆகியவற்றால் ஏற்படுவது  ‘இன்ஹேலன்ட் ஒவ்வாமை’ (Inhalant Allergy). பணியாற்றும் இடத்தில் உள்ள மரத்துகள்கள், வேதிப்பொருள்கள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் உள்ள சிமென்ட் போன்றவற்றால் ஏற்படுவது ‘ஆக்குபேஷனல் ஒவ்வாமை’ (Occupational Allergy).

வீட்டிலிருக்கும் தூசுகள், பூஞ்சைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.  அதை,  ‘இண்டோர் அலர்ஜி’ (Indoor Allergy) என்கிறோம். வாகனப்புகை, சிகரெட் புகை, மகரந்தத்துகள், நுண்ணணுக்கள்  போன்றவையும் அலர்ஜிக்குக் காரணமாகலாம். அதை, ‘அவுட்டோர் அலர்ஜி’ (Outdoor Allergy) என்கிறோம்.

#யாருக்கெல்லாம்_ஒவ்வாமை_ஏற்படும்?

உடலிலிருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாகச் செயல்படாமல் போகும்பட்சத்தில் விஷத்தன்மை இல்லாத ஒன்று உடலில் நுழைந்தாலும், அது எதிர்ப்பைக் காட்டும். ‘ஒவ்வாமை இவர்களுக்கு மட்டும்தான் வரும்' என்று வகைப்படுத்த முடியாது. ஒவ்வாமை என்ற உணர்வு பாரம்பர்யமாக வருவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

#ஊசி, #மருந்து #ஒவ்வாமை

ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது, அது எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். உதாரணமாக, ஒருவருக்கு பெனிசிலின் (Penicillin) ஊசி ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர் மருத்துவரிடம் போகும்போது, அவருக்கிருக்கும் பெனிசிலின் ஒவ்வாமை பற்றித் தெரியாமல் மருத்துவர் அதே ஊசியைச் செலுத்திவிட்டால் சருமத்தில் ஒவ்வாமை வெளிப்படலாம்.  தடிப்புகள், தொண்டையில் வறட்சி போன்ற பாதிப்புகள் உருவாகலாம். அதுவே, தீவிரமான விளைவை ஏற்படுத்தும் ஒவ்வாமையாக இருந்தால், ஊசி போட்ட அடுத்த நிமிடமே இறப்பு நிகழவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் சிகிச்சையின்போது அது குறித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டியது அவசியம்.

#மருந்து_ஒவ்வாமைக்கான_சிகிச்சை

சிகிச்சை தொடங்கியதும், நோயாளியிடம் என்னென்ன மருந்துகள் அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தவிர்ப்பது ஒரு முயற்சி. இரண்டாவது, விளைவுகள் என்று வந்துவிட்டால், உடனடியாக ‘அட்ரினலின்' (Adrenaline) ஊசி போட வேண்டும். ஒவ்வாமையைப் போக்கும் சில வேதியியல் பொருள்களைக் கொடுப்பது, மாற்று ஊசி போடுவது, பிராணவாயு கொடுப்பது, தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாகச் சேர்த்து ரத்த அழுத்தம், ஆக்சிஜன், சுவாசத்தைச் சீராக்கும் உபகரணங்களைப் பயன்படுத்துவது என மருந்து ஒவ்வாமையால் ஏற்படும் பின்விளைவுகளை யோசித்து விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

#உணவு_ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை பலருக்கும் ஏற்படுவது. காய்கறிகள்கூட பல நேரங்களில் ஒவ்வாமையை உண்டாக்கலாம். உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய், பால், டீ, காபி போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒவ்வாமை உள்ள உணவை உண்டால் சுவாசப் பிரச்னையும் மூச்சுத்திணறலும் ஏற்படலாம். எனவே, ஏதேனும் ஓர் உணவு இது போன்ற பிரச்னையை ஏற்படுத்தினால் கண்டிப்பாக அதைத் தவிர்க்க வேண்டும்.

#வளர்ப்புப்_பிராணிகளால்_ஒவ்வாமை

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஏற்கெனவே  சுவாசம் தொடர்பான ஒவ்வாமை இருப்பவர்களுக்கு, செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, சுவாச ஒவ்வாமை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், பிராணிகள் ஒவ்வாமை உள்ளவர்கள் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து எப்போதும்  விலகியிருக்க வேண்டும்.

#ஒவ்வாமை_எப்படி_ஏற்படுகிறது?

காற்று, நீர், உணவுப் பொருள்கள், ஊசி மருந்துகள், பிராணிகள் மூலம் ஒவ்வாமை ஏற்படும்.

#ஒவ்வாமை #வெளிப்படும்_விதம்

நோய் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பல்கிப் பெருகி அதற்கு எதிராகச் செயல்படும். ஒவ்வாமைப் பொருள்கள் உடலில் நுழைந்ததும், ஹிஸ்டமின் (Histamine) செரட்டோனின் (Serotonin) போன்ற ஹார்மோன்கள் சுரந்து, உடலைத் தூண்டி எதிர்ப்பாற்றலை உண்டாக்கும். இதன் விளைவாக ரத்தம் மற்றும் திசுக்களில் ஈசினோபில்கள் (Eosinophils) பெருக்கம் அடையும். அப்போது ரத்தக்குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூக்கில் உள்ள சளிச் சுரப்பிகள் அதிகமாகச் சுரந்து மூக்கின் உள்பகுதியும் தொண்டையும் வீக்கமடையும். இருபக்க மூக்கிலும் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். சிலருக்குத் தொடர் தும்மல் ஏற்பட்டு சுவாசப் பிரச்னை ஏற்படலாம். இதற்கு ஒவ்வாமையே காரணம்.

#சரும_ஒவ்வாமை

சருமத்திலும் ஒவ்வாமை வெளிப்படலாம். உடலில் மிக விரைவாக ஒவ்வாமையை வெளிப்படுத்துவது சருமமே. அதில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் உண்டாவது, அரிப்பு ஏற்படுவது, டெர்மடைட்டிஸ் (Dermatitis) எனப்படும் தொற்று, நீர்வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உணவு ஒவ்வாமை வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், வாய்வு பிரிதல், கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல், காது அடைப்பு, காதில் அரிப்பு, மூக்கில் அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறலாக வெளிப்படலாம்.

#ஒவ்வாமையைக்_கண்டறிவது_எப்படி?

ஒவ்வாமையின்போது அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தவிர்ப்பதே முக்கியம். ஒவ்வாமை எதனால் உருவாகிறது என்பதைக் கண்டறிய இரண்டு வழிகளைப் பின்பற்றலாம். ட்ரையல் அண்டு எரர் (Trial  and Error) முறையில் ஒவ்வாமைக்கான காரணத்தைக் கண்டறிய முயலலாம். ஓர் உணவு அலர்ஜியாக இருந்தால், அதைத் தொடர்ந்து சாப்பிடாமல் இருந்து ஒவ்வாமையைக் கண்டறிய வேண்டும். பிறகு மீண்டும் அந்த உணவைச் சாப்பிட்டுப் பார்த்து அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும்.

#ரத்தப்_பரிசோதனையும்_செய்யலாம்!

நாம் பயன்படுத்தும் பொருள்களை ஒவ்வொன்றாக நீக்கிப் பார்ப்பதன் மூலம் எந்தப் பொருளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைக் கண்டறியலாம். இண்டோர், அவுட்டோர், பணியிடங்களில் என உங்களுக்கு ஏற்றுக்கொள்ளாத விஷயம் எது என்பதை ஆழ்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் சில வாரங்களில் கண்டுபிடித்துவிடலாம். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் துன்பத்தில் இருந்து தப்பிக்கலாம். ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள், சிறு ஊசியை உடலில் செலுத்திப் பரிசோதனை செய்தும் கண்டுபிடிக்கப்படுகிறது. குறிப்பாக, ரத்தப் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

#ஒவ்வாமையைக்_கண்டுகொள்ளாமல் #விடலாமா?

ஒவ்வாமைப் பிரச்னைகளை எதிர்கொண்டாலும் பலர் அவற்றுக்கு சிகிச்சை பெறுவதில்லை. பிரச்னை ஏற்படும்போது மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சுயமருத்துவம் செய்துகொள்கின்றனர். நீண்ட நாள் ஒவ்வாமையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் கண்டிப்பாக அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். சுவாசம் சார்ந்த ஒவ்வாமையைக் கண்டுகொள்ளாமல்விட்டால் அது ஆஸ்துமாவாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வாமைக்கு ஆரம்பத்திலேயே அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகி,  சிகிச்சை பெற வேண்டும்.

#வேறு_நோய்களின்_அறிகுறியா? 

பிரசவத்துக்குப் பிறகு சருமத்தில் வீக்கம், எரிச்சல் ஏற்பட்டு திரும்பத் திரும்ப சருமப் பிரச்னை ஏற்படும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு தைராய்டு சுரப்பதில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தத்திலும் இயல்புக்கு மாறான நிலையை ஏற்படுத்தும். இதனால் தைராய்டு ஆன்டிபாடீஸ் (Thyroid Antibodies) எனும் நிலை ஏற்படும். புரதம் சுரக்க ஆரம்பித்து, தைராய்டைச் செயலிழக்கச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி நல்ல முறையில் செயல்படாமல் போனால் ரத்த நாளங்களுக்கு எதிராக, உடலிலிருக்கும் திசுக்களைக் கொல்ல ஆரம்பிக்கும். இது, உடலில் விபரீதமான சூழலை உருவாக்கும். `ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்' (Rheumatoid Arthritis), `தைராய்டைட்டிஸ்' (Thyroiditis) போன்ற பிரச்னைகளுக்கும் ஒவ்வாமை காரணமாகிறது. ஒவ்வாமை எப்போதுமே வேறு ஒரு நோயின் அறிகுறி என்று சொல்ல முடியாது. ஆனால்,  சில நேரங்களில் வேறு ஒரு நோயின் அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

#ஒவ்வாமையை #முழுமையாகக் #குணப்படுத்தலாமா?

 ஒவ்வாமைக்கான மருந்து கொடுத்து அதை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அலர்ஜி எதனால் உருவாகிறது என்பதைக் கண்டுபிடித்து நீக்க முடிந்தால், ஒவ்வாமையின் பாதிப்பிலிருந்து வெளியே வர முடியும்.  உணவுக் கட்டுப்பாடு,  மருந்துக் கட்டுப்பாடு, வாழ்க்கைமுறை மாற்றம் மூலம் நிச்சயம் அது சாத்தியம்தான். உதாரணமாக, சிகரெட் புகை அலர்ஜி என்றால், சிகரெட் புகைப்பவர்களுக்கு அருகில் போகக் கூடாது.

#ஒவ்வாமைக்கு #அறுவை_சிகிச்சை #தேவையா?

ஒருவருக்கு சைனஸ் பிரச்னை இருந்தால், அது நாள்பட்ட சைனஸ் நோயாக உருவாகலாம். ஒரு கட்டத்தில்  அது மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மற்ற வழிமுறைகளுக்குக் கட்டுப்படாமல் பாதிப்புகளைக் கொடுக்கும்போது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஒவ்வாமையைக் கட்டுக்குள் வைத்திருக்காமல், ஒவ்வாமைக்கான சிகிச்சை எதுவும் செய்யாமல், அறுவை சிகிச்சை செய்வது சரியான அணுகுமுறை அல்ல. அது அறிவுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையும் அல்ல. ஒவ்வாமையின் தன்மையைப் புரிந்துகொண்டு, கட்டுப்படுத்த முடியாத சூழலில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

#வாழ்நாள்_முழுவதும் #மருந்து #எடுத்துக்கொள்ள_வேண்டுமா?

சிலருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜி (Seasonal Allergy), வேறு சிலருக்கு தீராத அலர்ஜி (Perennial Allergy) என்று ஆண்டு முழுவதும் ஒவ்வாமை இருக்கும். அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய்போல வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த நீண்டகாலம் மருந்து எடுக்க வேண்டும்.

ஒவ்வாமையைத்_தடுக்கும்_வழிமுறைகள்
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

ஒவ்வாமையைத் தடுக்கச் சில பிரத்யேக வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். இவற்றில் ஒரு வகை, தூசி வண்டு (Dust Mite). இது படுக்கை விரிப்பு, சோபா கவர், ஜன்னல் திரைச்சீலைகளில் இருக்கும். கண்களுக்குத் தெரியாத இது ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளை உருவாக்கும். இதைத் தடுக்க, பிரத்யேகமான தலையணை உறைகள், படுக்கை உறைகள் இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஒவ்வாமையின் தன்மைக்கேற்ப அதற்கான தடுப்பு வழிமுறைகள் குறித்து, ஒவ்வாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

ஒவ்வாமை_உள்ளவர்களுக்கு சிறப்பு_உணவுகள்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

ஆஸ்துமா நோயாளிகள் குளிர்ச்சியான காய்கறிகளைத் தவிர்க்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆங்கில மருத்துவத்தில் இப்படியோர் அணுகுமுறை கிடையாது. அடுப்பில் சமைத்த உணவைச் சூடானது என்றும், குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பயன்படுத்தும் உணவைக் குளிர்ச்சியானது என்றும்  நினைக்கிறோம். ஒருவருக்குக் குறிப்பிட்ட காயோ, உணவோ ஒவ்வாமைத் தொந்தரவு அளித்தால், அந்த உணவைத் தவிர்ப்பது அவசியம். காரணமே இல்லாமல் பலவித உணவுப் பொருள்களை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்பது சரியான கருத்தல்ல.

ஆஸ்துமா_ஒவ்வாமையால்_ஏற்படுவதா?
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

ஆஸ்துமாவுக்கு ஒவ்வாமையும் ஒரு காரணம். ஆனால், ஒவ்வாமை மட்டுமே காரணமல்ல. ஆஸ்துமா வருவதற்கு 50 சதவிகிதம் பரம்பரைக் காரணங்களும் உள்ளன. சுவாசத்தில் ஒவ்வாமை, சைனஸ் பிரச்னை, மாசு பிரச்னை காரணமாகவும் ஆஸ்துமா நோய் வர வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்துமாவுக்கான_சிகிச்சை_முறைகள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நாள்பட்ட ஆஸ்துமா தொந்தரவில் இருந்து தப்பிக்க, இன்ஹேலர் வடிவத்தில் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்படும். இன்ஹேலரில் மருந்து உட்கொள்வதால் அது ரத்தத்தில் கலந்து பிரச்னை எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பைத் தடுக்க இன்ஹேலரே சிறந்த தீர்வு. மாத்திரை மற்றும் சிரப் வகைகளும் அளிக்கப்படுகின்றன. சத்தான உணவு உண்ணவேண்டியது அவசியம். சுவாசப் பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க உதவும். ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

தட்பவெப்பத்தால்_ஏற்படும்_ஒவ்வாமை
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

சைனஸ் தொந்தரவு, ஒவ்வாமையால் ஏற்படுவது. இதை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அலர்ஜி, தீராத அலர்ஜி என இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். அதீத வெப்பம் அல்லது அதிகக் குளிர் இருக்கும்போது ஒவ்வாமைத் தொந்தரவு இருக்கும். சிலருக்கு பனிக்கால ஒவ்வாமை இருக்கும். வெயில் காலத்தில் அதிகமாகக் குளிர்சாதனங்களை பயன்படுத்தும்போது தட்பவெப்ப மாற்றத்தால்  ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் இருக்காது. வீட்டிலும் வெளிப்புறத்திலும் ஒரே மாதிரியான சூழல் நிலவுவதால், பெரிய அளவில் ஒவ்வாமைத் தொந்தரவுகள் இருக்காது. ஆனால், வெயில்காலத்தில் குளிர்சாதனங்களால் ஒவ்வாமைத் தொந்தரவு ஏற்படும். வெப்பத்தால் உடலில் வியர்வை அதிகமாகி, உடல் குளிர்கிறது. இந்தச் சூழலிலும் சைனஸ் தொந்தரவு ஏற்படும். குளிர்க்காற்றில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். காற்றிலிருக்கும் பூஞ்சைகளால் ஆஸ்துமா பாதிப்பும் இருக்கும்.  பனிக்காலத்தில் காற்றில் உள்ள குளிரால் மூச்சுக்குழாய், மூக்கு போன்ற பகுதிகளில் பிரச்னைகள் உருவாகும். ஆண்டு முழுவதும் ஒவ்வாமை  ஏற்படுபவர்களுக்கு தீராத அலர்ஜி இருக்கும். இந்த அலர்ஜி உள்ளவர்களுக்கு முழுமையான சிகிச்சை கொடுத்து ஒவ்வாமையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

ஒவ்வாமைக்கான_காரணம்... 
எப்படித் தெரிந்து கொள்வது?
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

ஒவ்வாமைப் பிரச்னையை ஒருவரைச் சுற்றியிருக்கும் பொருள்கள் மூலம் கண்டறியலாம். அந்தப் பொருள்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துபவற்றை வகைப்படுத்த வேண்டும். ஒவ்வாமைக்கு ஒரு பொருள் மட்டுமே காரணமாக இருக்காது. ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் சொல்லும் அறிகுறிகளை முழுமையாகக் கேட்கவேண்டியது அவசியம். அதேபோல அவரது பரம்பரை நோய்கள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது தொழில் பற்றியும் தெரிந்துகொண்டு ஒவ்வாமைக்கான காரணத்தை முடிவு செய்யலாம்.

ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவருக்கான பரிசோதனைகள்
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

ஒவ்வாமைப் பிரச்னை உள்ளவர்களை உச்சி முதல் பாதம் வரை கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். கண்கள், காதின் நுனி, மூக்கின்மேல் கோடு, மூக்குத்தண்டு வளைவு, சொத்தைப்பல், மூக்கில் உண்டாகும் பிரச்னைகள், சரும நோய்கள், மூச்சுவிடுவதில் உள்ள பிரச்னைகள் இருந்தால், அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும். ரத்தத்தில் ஒவ்வாமை தொடர்பான சோதனைகளும் தேவைப்படலாம். சரும பாதிப்பு உள்ளவர்களுக்கு, தேவைக்கேற்ப சருமத்திசு ஆய்வு தேவைப்படலாம். சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, சுவாச இயக்கப் பரிசோதனை செய்யப்படும். ஒவ்வாமைப் பொருள்களைக் கொண்டும் பரிசோதனை செய்யப்படும்.

#டிரக்_அலர்ஜி (#Drug_Allergy)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சிலருக்கு காய்ச்சல் அல்லது  நோய்த் தொற்றுக்கு சிகிச்சை எடுக்கும்போது, மருந்து மாத்திரை உட்கொண்டால் உடலில் கொப்புளங்கள், அரிப்பு ஏற்படலாம். அது மருந்தால் ஏற்பட்டால் நோயாளி உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல் மருந்து கொடுக்கும்போதே இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாகச் சொல்ல வேண்டும் என்பதை மருத்துவர் நோயாளிக்கு அறிவுறுத்த வேண்டும். மருந்தால் உண்டாகும் அலர்ஜியை உணராவிட்டால், அந்த அலர்ஜி மிகவும் அதிகமாகிவிடும். தொடர்ந்து அவர்கள் அந்த மருந்தை உட்கொண்டால், ‘ஸ்டீபன் ஜான்ஸன் சிண்ட்ரோம்’ (Stevens-Johnson Syndrome) என்ற நோய்க்கு ஆளாக நேரிடலாம். உயிரையே போக்கும் அளவுக்கு இது தீவிரமாகலாம். சிறுநீரகத்தை பாதிக்கலாம். மருந்து அலர்ஜியை உடனடியாக மருத்துவரிடம் தெரிவித்து, அதற்கான சிகிச்சையை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம்.

#டை_அலர்ஜி
💢💢💢💢💢💢💢

சிலர் தலை முடி வெள்ளையாக இருக்கும்போது டை அடித்து, கறுப்பாக மாற்றிக்கொள்வார்கள். இது நிறைய பேருக்கு அலர்ஜியை உண்டாக்கும். அடிக்கடி தும்மல், ஜலதோஷம் போன்ற அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் ஹேர் டை போட்டுக்கொள்ளும் போதும் அலர்ஜி பாதிப்புக்கு உள்ளாகலாம். மிகவும் பாதுகாப்பாக இருப்பதுடன், இதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க ஹேர் டை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்தும் முடிவெடுக்கலாம்.

#பொல்யூஷன்_மாஸ்க்!
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

அலர்ஜி பாதிப்பிருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தூசு அதிகம் உள்ள இடம், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்கள், புகை அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது பொல்யூஷன் மாஸ்க் போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். இந்த மாஸ்க், நிறைய இடங்களில் எளிதாகக் கிடைக்கிறது. அலர்ஜிக்குக் காரணமான தூசு துகள்கள், மகரந்தம், இவற்றையெல்லாம் இது வடிகட்டிவிடுகிறது. அதோடு, சுவாசத்தின் வழியாக ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். துப்பட்டாவை மூக்கை சுற்றிக் கட்டிக்கொள்வதாலோ, கைக்குட்டையைக் கட்டிக் கொள்வதாலோ, ஹெல்மெட் போட்டுக்கொள்வதாலோ பொல்யூஷன் மாஸ்க் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். கைக்குட்டையிலிருக்கும் துளைகளின் வழியாக தூசு உள்ளே சென்றுவிடும். ஆனால், பொல்யூஷன் மாஸ்க் வழியாக தூசு மூக்கினுள் செல்லாது. இது பாதுகாப்பு அரணாக அமைந்து அலர்ஜி தொந்தரவைத் தடுக்கும்.

#அடினாய்டு_அலர்ஜி
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு அடினாய்டு என்று ஒரு பாதிப்பு ஏற்படும். இது மூக்கின் பின்புறம் உள்ள ஒரு சதை. நிறைய குழந்தைகளுக்கு இந்த அடினாய்டு பெரிதாகிவிடும். அப்போது மூச்சுக்குழலுக்குள் அழுத்தம் கொடுத்து குழந்தைகள் மூக்கால் மூச்சுவிட முடியாமல், வாயாலும்  மூச்சுவிடுவார்கள். சரியாகத் தூங்க மாட்டார்கள். இவர்களால் சரியாகச் சாப்பிட முடியாது. அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அடினாய்டு இருப்பதை உறுதி செய்துவிட முடியும். பாதிக்கப்பட்ட குழந்தையின் எடை குறைவாக இருக்கும். அவர்களுக்கு மேல் தாடை துருத்திக் கொண்டிருக்கும். நிறைய குழந்தைகளுக்கு மூச்சு நின்றுவிடும் அளவுக்குத் தொந்தரவை ஏற்படுத்தும். ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் இதற்குத் தீர்வு காணலாம்.

#அறுவை_சிகிச்சையும்_அலர்ஜியும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது அதை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அனஸ்தீசியா கொடுக்கும் மருத்துவர்கள் அலர்ஜி நோய் இருக்கிறதா என்பதை நோயாளியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அல்ர்ஜி நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மயக்க மருந்து கொடுக்கும்போது உயிரை இழக்கும் அளவுக்குப் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

#அலர்ஜியால்_உண்டாகும்_அமிலச்_சுரப்பு
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

அலர்ஜி ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆசிட் ரிஃப்ளெக்‌ஷனால் ரத்தத்தில் ஹிஸ்டமின் என்கிற வேதிப்பொருள் அதிகமாகச் சுரக்கும். வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி, அமிலம் மேல் நோக்கி வந்து தொடர் இருமலை ஏற்படுத்தும், பேச்சின் தன்மை மாறும். ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கச் செய்யும். உடலில் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும். அதற்கான சிகிச்சையையும்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

#அலர்ஜிக் #பிரான்கோபல்மனரி #ஆஸ்பர்கிலோசிஸ்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

‘அலர்ஜி பிரான்கோபல்மனரி ஆஸ்பர்கிலோசிஸ்’ என்பது ஒருவிதமான காளானால் உண்டாகும் பிரச்னை. இந்த அலர்ஜி, நுரையீரலில் ஏற்பட்டு சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். இதைக் கண்டறிய பிரத்யேகப் பரிசோதனை செய்யப்படும். இது ஆஸ்துமா நோய் மாதிரியே இருக்கும். ஆனால்,  இந்த பாதிப்புதானா என்பதைப் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை எடுத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும்.

🔷🌀💢🌹🔷🌀💢🌹🔷🌀💢🌹🔷🌀💢🌹

No comments:

Post a Comment