jaga flash news

Thursday 3 December 2020

தர்மகர்மாதிபதி யோகம்



மகர லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு செயல்படும் என்பதை இப்போது பார்ப்போம்....

மகரம் :

மகர லக்னக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகள் புதனும் சுக்கிரனும் ஆவார்கள். இருவருமே லக்னாதிபதி சனிக்கு நண்பர்கள் என்பதால் யோகம் சிறப்பாகச் செயல்படும்.

மேலும் புதனுக்கு ஆறாமிட ஆதிபத்தியம் இருந்தாலும் அவரின் மூலத் திரிகோண ஸ்தானம் கன்னி என்பதால் அவருக்கு பாக்கிய ஸ்தானத்தின் காரகத்துவமே மேலோங்கி நிற்கும்.

மகரலக்னத்தவர்களுக்கு சூரியன் அஷ்டமாதிபதி என்பதால் சுக்கிரனும் புதனும் அவருடன் இணைவதோ, அஸ்தங்கம் அடைவதோ யோகத்தைக் குறைக்கும்.

சுக்கிரனும் புதனும் லக்னம் மற்றும் இரண்டாமிடத்தில் இணைவது மிகவும் நல்லது. இந்த இரண்டு இடங்களும் லக்னாதிபதி சனியின் வீடுகள் என்பதால் இருவரும் நட்பு பெறுவார்கள். இவ்விடங்களில் சனியும் இவர்களுடன் இணைந்திருப்பது யோகத்திற்கு வலுச் சேர்க்கும் அமைப்புத்தான்.

மூன்றாமிடமான மீனத்தில் புதன் நீசம் பெறுவார். சுக்ரன் அங்கு உச்சம் அடைவதால் புதன் நீசபங்கம் அடைவார் என்றாலும் யோகம் முழுமையாக பலன் தராது.

நான்காம் இடமான மேஷம், சுக்கிரனுக்கும் புதனுக்கும் நட்பு இடம் அல்ல. என்றாலும் இங்கு சுக்கிரன் திக்பலம் பெறுவார் என்பதால் இவர்கள் இங்கு இணைவது நல்லதே. லக்னாதிபதி சனியும் பத்தாமிடமான துலாத்தில் உச்சம் பெற்று இவர்கள் இருவரையும் பார்த்தார் என்றால் மிகவும் சிறப்பான யோகம் கிடைக்கும்.

ஐந்தாமிடமான ரிஷபத்தில் இருவரும் இணைவது மிகவும் நல்லது. சுக்கிரன் இங்கு ஆட்சி பெறுவார். இயற்கைச் சுபரான அவர் ஒரு திரிகோணத்தில் ஆட்சி பெறுவது மிகவும் சிறப்பான யோகம்.

மேலும் மகர லக்னத்திற்கு அவர் பத்தாமிடத்திற்கும் அதிபதி ஆகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதால் தனது கேந்திரவீடான பத்திற்கு எட்டில் மறைந்து, ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் கேந்திராதிபத்திய தோஷமும் நிவர்த்தி அடையும்.

ஆறு ஏழு எட்டாமிடங்களில் இருவரும் இணைவது யோகம் அல்ல. ஆறாமிடம் சுக்கிரனுக்கு நட்பு, புதனுக்கு ஆட்சி என்றாலும் எந்த ஒரு சுப யோகமும் மறைவிடங்களில் அமைந்தால் பலனளிக்காது.

ஏழாமிடம் சந்திரனின் வீடு என்பதால் புதனுக்கு ஆகாது. எட்டாமிடமான சிம்மம் சுக்கிரனுக்கு கொடும்பகை வீடு. ஒன்பதாமிடமான கன்னியில் சுக்கிரன் நீசபங்கம் அடைந்தாலும் சுக்கிர தசையில் பிற்பகுதிதான் நன்மைகள் நடக்கும் என்பதால் அதுவும் நல்ல நிலை அல்ல.

பத்தாம் இடமான துலாமில் சுக்கிரனும் புதனும் இணைவது சுக்கிரனுக்கு கேந்திராதிபத்ய தோஷத்தை கொடுத்தாலும் சுக்கிரன் இங்கே திக்பலத்தையும் இழப்பார். லக்னாதிபதி சனியும் இங்கே இணைந்து மூவரும் எட்டு டிகிரி இடைவெளியில் சேர்ந்து இருந்தால் மட்டுமே தர்மகர்மாதிபதி யோகம் பலனைத் தரும்.

பதினொன்று பதிரெண்டாமிடங்களில் இருவரும் இணைவது சிறப்பானது அல்ல.

மேலும் தர்மகர்மாதிபதிகளான சுக்கிரனும் புதனும் அருகருகே பயணிப்பவர்கள் என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லை.

அதோடு மகர லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதியான சனியே இரண்டாமிடமான கும்பத்திற்கும் நாயகனாகி தனாதிபதியுமாவதால் சனிபகவான் நல்ல இடங்களில் அமர்ந்து சூட்சும வலுப்பெற்று, கேது மூன்றாமிடமான தனுசிலோ, ஆறாமிடமான மிதுனத்திலோ பதினோராமிடமான விருச்சிகத்திலோ சுப பலம் பெற்று இருப்பது நல்லது.

இதனால், சனி தசை பத்தொன்பது வருடங்கள், அடுத்து புதன் பதினேழு, அதன்பின் கேது ஏழு, நிறைவாக சுக்கிர தசை இருபது வருடங்கள் என மொத்தம் அறுபத்து மூன்று வருடங்கள் மகர லக்னக்காரர்கள் உன்னதமான வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.

மகரம் சர லக்னம் என்பதாலும் இந்த யோகங்கள் முழுமையாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment