jaga flash news

Thursday 10 December 2020

பரிவர்த்தனை யோகம்

பரிவர்த்தனை யோகம் என்றால்,  இரண்டு கிரகங்கள் பரஸ்பரம் இடம் மாறி இருப்பதாகும். இரண்டு கிரகங்கள் ராசி மாறி அமர்ந்திருந்தால், அது பரிவர்த்தனை யோகமாகும். உதாரணமாக, மேஷத்துக்குரிய கிரகமான செவ்வாய்  மகரத்திலும்,  மகரத்துக்குரிய கிரகமான சனி மேஷத்திலும் இருந்தால் பரிவர்த்தனை. கன்னி ராசிக்குரிய புதன் சுக்கிரனுக்குரிய வீடான துலாத்தில் இருந்து, துலாத்துக்குரிய கிரகமான சுக்கிரன் கன்னியில் இருந்தால் பரிவர்த்தனை. 

இப்படி கிரகங்கள்  மாறி அமையும்போது,  அவற்றின் சக்தியும் வலிமையும்  கூடும். அப்படி மாறி அமைந்த கிரகங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வலிமை வாய்ந்தவை. சுபகிரகங்கள் பரிவர்த்தனைப் பெற்று இருந்தால் சுபயோகத்தையும், அசுப கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவதால் அசுப பலன்களையும் தரும்.
பரிவர்த்தனை  யோகம் மூன்று வகைப்படும்.

1) சுப பரிவர்த்தனை யோகம்:  1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம் மாறி இருந்தால்,  ஜாதகருக்கு சொந்த வீடு, நிலபுலன்கள் அமையப்பெற்று செல்வாக்கோடு திகழ்வார்.
2) தைன்ய பரிவர்த்தனை: தைன்ய பரிவர்த்தனை என்பது ஜாதகக் கட்டத்தில் மறைவு பிரதேசங்களான 6, 8, 12-ம் இடங்களுக்குரிய ஆட்சி கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால், கிரகம் பாதிப்புக்குள்ளாகி ஜாதகருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் 
 3) கஹல பரிவர்த்தனை: கஹல பரிவர்த்தனை என்பது மூன்றாம் இடத்துக்குடைய கிரகம் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ம் இடத்தில் இருந்து, அந்த இடங்களுக்கு உரிய கிரகம் 3-ம் இடத்தில் இருந்தால், அது சுப பலனாக அமையும். உப ஜெயஸ்தானமான 3-ம் இடத்தின் தைரியம், சம்பந்தப்பட்ட அந்தக் கிரகத்துக்குக் கிடைக்கும். இதனால், ஜாதகர் பல வெற்றிகளை அடைவார்.
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள், ஒன்றை ஒன்று பார்க்கும்போது சுபகிரகங்களான  குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன் ஆகியோர் ஒன்றை ஒன்று பார்க்கும்போது அசுப பலன்களையே தருவார்கள். குறிப்பாக செவ்வாய்,  சனி  ஒன்றையொன்று பார்ப்பது, சூரியன், சனி ஒன்றையொன்று பார்ப்பது ஆகிய தீய கிரகங்கள் பார்க்கும்போது அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் மிகுந்து மனம் தவறான வழிகளில் செல்லும்.

சில வித்தியாசமான பரிவர்த்தனைகளைப் பார்ப்போம்.

2-ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்கு பல வழிகளிலும் பணம். வரும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் செலவழிப்பார். 

6 - ம் இடத்தின் அதிபதியும் 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகர் தனது செல்வத்தையெல்லாம் இழக்கவேண்டிய நிலை வரும்.

2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், ஜாதகரை அதிர்ஷ்டம் தேடி வரும். சகல சௌபாக்கியங்களையும் அனுபவிப்பார். மிகுந்த புத்திசாலியாக இருப்பார். இவருக்கு நிறைய பேர் அபிமானிகளாக இருப்பார்கள்.

லக்னாதிபதியும்  5 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால், ஜாதகருக்குப் பெயரும் புகழும் நிலைத்திருக்கும். 
லக்னாதிபதியும் 10 -ம் இடத்துக்கு உடையவனும் பரிவர்த்தனை பெற்றால்,  அரசியலில் புகழ் பெற்றுத் திகழ்வார்.

9 - ம் இடத்துக்கு உடையவனும் 10 - ம் இடத்துக்கு உடையவனும் பரஸ்பரம் இடம் மாறி இருந்தால், ஜாதகருக்கு அதிகாரம், புகழ் தேடிவரும். கோயில், பள்ளிக்கூடம் ஆகியவற்றைக் கட்டி சிறந்த முறையில் நிர்வகிப்பார்

No comments:

Post a Comment