புதிய
பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்
பைக் ஆடம்பர லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இன்று ஒவ்வொரு
இந்தியர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாசிய பொருளாகிவிட்டது. எனவே, பைக்
வாங்கும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் பைக் வாங்கிய பின் அவஸ்தை பட
வேண்டியிருக்காது.
பட்ஜெட்:
புதிய பைக் வாங்குபவர்களும், பழைய பைக்கை மாற்ற நினைப்பவர்களும் முதலில்
உங்களது பட்ஜெட்டை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு சில ஆயிரங்கள் கூடுதலானால்
பரவாயில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு மீறி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 30 சதவீத முன்பணத்தை செலுத்தவேண்டும்.
18 மாதங்களுக்கு மிகாமல் மாதத் தவணையை போட்டுக் கொள்வது சிறந்தது. அதற்கு மேல்
செல்லும்போது கடன் தொகையில் பாதி அளவுக்கு வட்டி வந்துவிடும். குறைந்தது 3
ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அந்த பைக் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதால்,
கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.
சீட்டிங் பொஷிசன்:
முதலில் மார்க்கெட்டில் உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்த பைக் மாடல்களை
வரிசைப்படுத்துங்கள். அதில், உங்களது உயரம் மற்றும் எடைக்கு தகுந்த பைக்குகளை
தேர்வு செய்யுங்கள். சில சமயம் குறைவான உயரம் கொண்டவர்கள் அதிக உயரம் கொண்ட
பைக்குகளை வாங்கிக் கொண்டு ஓட்டும்போது அவஸ்தைபடுவர். தவிர, சீட்டிங் பொஷிசனும்
அவர்களுக்கு சரியாக இருக்காது.
அதுபோன்று வாங்க நினைத்தால் அந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு
திருப்திபட்டால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். 45 வயதை கடந்தவர்கள் நிச்சயம்
சரியான சீட்டிங் பொஷிசன் கொண்ட பைக்குகளை பார்த்து வாங்குவது நல்லது.
மேலும், மனைவியையும் அலுவலகத்திற்கு தினசரி அழைத்துச் செல்பவர்கள் ஸ்போர்ட்ஸ்
பைக் மற்றும் சில பைக் மாடல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதில் பின்
இருக்கைகள் சிறியதாக இருக்கும். சில பைக்குகளில் சரிவாக இருக்கும்.
மேலும், பின்னால் ஒருவர் உட்கார்ந்துவிட்டால் ஓட்டுபவருக்கு போதிய
இடமிருக்காது. இதனால், சரியான பேலன்சில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாது. மேலும்,
குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பவர்கள் எரிபொருள் டேங்க் பெரிதாக உள்ள
பைக்குகளை வாங்க வேண்டாம்.
டீலர் மற்றும் சர்வீஸ் வசதி:
சிறந்த சேவை மற்றும் சர்வீஸ் வசதியை வழங்கும் டீலர்களை தேர்வு செய்து பைக்
வாங்குங்கள். இதற்காக, ஒரு சிறு விசாரணை போடுவதும் நல்லது. மேலும், ஒரே நகரத்தில்
உள்ள வேறு வேறு டீலர்களில் விலை வித்தியாசம் இருக்கும். சில டீலர்களில் 5,000 வரை
கூட கூடதல் விலை வைத்திருப்பர். இரண்டு மூன்று ஷோரூம்களுக்கு சென்று ஆக்சஸெரீஸ்
உள்பட ஆன்ரோடு விலையை கேட்டு தெரிந்துகொண்டு ஒப்பிட்டு பார்த்து வாங்குவது
உசிதம்.
வீட்டிற்கு அருகிலோ அல்லது அலுவலகத்திற்கு அருகிலோ, சர்வீஸ் சென்டர்
இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம். மார்க்கெட்டில் அதிகம்
விற்பனையாகும் மாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நடுவழியில் ஏதெனும்
பழுது ஏற்பட்டால் கூட எந்தவொரு மெக்கானிக் கடைகளிலும் எளிதாக பழுது நீக்கிக்
கொள்ளலாம்.
மைலேஜ் நெக்ஸ்ட்:
பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், அதிக மைலேஜ் கொடுக்கும்
பைக்குகளை தேர்வு செய்வது நல்லதுதான். இருந்தாலும் மைலேஜை மட்டும் அடிப்படையாக
வைத்து தேர்வு செய்வது புத்திசாலித்தனம் அன்று.
மைலேஜ் குறைவாக கொடுத்தாலும் திரும்ப விற்பனை செய்யும்போது சில பைக்குகள்
நல்ல விலைக்கு போகும். மேலும், தரமான கட்டுமானம் கொண்டதாகவும் இருக்கும். எனவே,
மைலேஜை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்.
இதுதவிர, பைக்கை தேர்வு செய்தவுடன் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்
சிறு விசாரணை போடுங்கள். அவர்களது ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு புதிய பைக்கை
தேர்வு செய்யுங்கள். பைக் வாங்கிய பின்னர் புலம்ப வேண்டியிருக்காது அல்லவா?
No comments:
Post a Comment