jaga flash news

Saturday 9 February 2013

கல்யாணமுருங்கை.

அழிந்துபோன கிராமத்துநினைவுகள்..!

கல்யாணமுருங்கை.
(எங்க ஊர்ல கண்ணாலமுருங்கை)

இம்மரங்களைப்பற்றி கேள்வியுற்றிருப்பீர்களென நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் வீட்டுக்குவீடு வாசற்படி
இருக்கிறதோ இல்லையோ
எல்லா வீடுகளிலும் மதிற்சுவர்கள் இருக்கின்றன.

ஒருகாலத்தில் திரைப்படங்களில் மட்டுமே
அதுவும் பெரியபெரிய நகரங்களிலுள்ள
வீடுகளைக்காட்டுகையில் மட்டுமே இந்த மதிற்சுவர்களைக்காணவியலும்.

அன்றைக்கெல்லாம் கிராமத்து வீடுகளின்
மதிற்சுவர்கள் முள்வேலிகள்தான்.

காசிருப்பவர்கள் மூங்கில்முட்களாலான வேலிகளாலும்
காசில்லாதவர்கள் சொந்தமாகவே கருவேலங்குச்சிகளால் வேலிகளை கட்டிக்கொண்டும்
தத்தமது வீடுகளுக்கான மதில்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

வீட்டின் வாசற்பகுதிக்காக
கொஞ்சம் வடிவுடனும்
திறந்துமூடக்கூடிய வசதியுடனும் சிறியதான வேலிகளுமிருந்தன

(வேலிகளுக்கு 'படல்கள்' என்ற பெயருமிருந்தது.
படர்->படல்)

இப்படி,
வசதிக்குத்தகுந்தவாறு வேலிகளிருந்தாலும்
அவைகளை நிறுத்திவைப்பதற்காய்
நடப்படக்கூடிய கால்கள் பெரும்பாலும்
பூவரசம்போத்தாகவோ
ஒதியம்போத்தாகவோ இருக்கும்.

அரிதாக இந்த கல்யாணமுருங்கைப்போத்துகள் நிற்கும்.

வேலிக்கால்களுக்கு போத்துகள் என்றுபெயர்.

அப்போதே அரிதாகக்காணப்பட்டதாலோ என்னவோ
இப்போது இம்மரங்கள் காணமற்போனவைகளின் பட்டியலில்
சேர்க்கப்பட்டுவிட்டன/
சேர்ந்துகொண்டன.

இம்மரங்களின் சிறப்பென்னவென்றால்
போத்துநட்ட மறுநாளே இவை துளிர்த்துக்கொள்ளும்.

இதில் நம்மை சோதனைக்குள்ளாக்குவது பூவரசு.
எளிதாய் துளிர்விடாது.

ஒதியன் பெருத்தாலும்
உத்திரத்திற்கு ஆகாதென்பது எப்படி உண்மையோ
அப்படியேதான் இந்த கல்யாணமுருங்கையும்.

ஓர் உதைவிட்டால்
பொத்தென்று விழக்கூடிய வலிவுடன் நிற்கும்.

ஆனால் பாருங்கள்..

இம்மரங்களில் கால்படுவது பாவம் என சொல்லிவைத்தார்கள்.

அப்படியே நீங்கள் இம்மரங்களில் ஏற நினைத்தாலும்
முடியாது.

ஏனா?

இம்மரங்களுக்கு அரணாய் விளங்கியது இவைகளின் கருத்தமுட்கள்தான்.


இம்மரங்களின் பூவோ
கொள்ளையழகு.

சிவப்புநிறத்திற்கு மிகச்சிறந்தவோர் எடுத்துக்காட்டு
கல்யாணமுருங்கைப்பூக்களே.

எனக்குத்தெரிந்தவரையில்
மலர்களை உண்ணக்கூடிய பறவைகளின்
முதற்றெரிவு (முதல்+தெரிவு)
இவைகளாய்தானிருக்கும்.

இவை பூக்கத்தொடங்கிவிட்டால்
இம்மரங்களின்மீது
செம்போத்து, நாரத்தம்பிள்ளைகளின் ஆட்சிதான்.

காலைநேரங்களில்
பள்ளிக்குச்செல்கையில்
இப்பறவைகள் இம்மரங்களில்
அமர்ந்துகொண்டும்
விளையாடிக்கொண்டுமிருப்பதைக்காண்கையில்
நம் மனமோ மகிழ்ந்தாடும்.
தெருவெல்லாம்
இப்பூக்கள் வழிந்தோடும்.

இம்மரத்தின் காய்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

'சூட்டுக்காய்'

கொடிபுளியங்காய்போல வடிவொத்த
இக்காய்களைப்பொறுக்குவதற்கு
எமது கிராமத்துச்சிறுமிகளும் பெண்களும் விரைந்தோடுவார்கள்.

காயினுள்ளிருக்கும் எல்லா விதைகளும் வடிவம் மாறாதிருப்பவையென்பதால்
பல்லாங்குழிக்கும் இன்னபிற விளையாட்டுகளுக்கும்
அவர்களின் தெரிவில் முதலிடம் இந்த சூட்டுக்காய்களே.
அடுத்ததுதான் புளியங்கொட்டைகளும் கூழாங்கற்களும்.

இக்காய்களின் விதைகளை
தரையில் சூடுபறக்கத்தேய்த்துக்கொண்ட
பக்கத்திலிருப்பவனின் தொடையில் வைத்து
அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்க
இக்காய்களையே பயன்படுத்துவோம்.
அதனால்தான் சூட்டுக்காய்.

[பார்த்துக்கோங்க..
எங்களுக்கும் அடிதடி அரசியல் தெரியும்.
ஆனா காட்டமாட்டோம்.
காட்டத்தெரியாது எங்களுக்கு.
என்னா சூடு..!]

இதையெல்லாஞ்சொல்லிவிட்டு
அதைச்சொல்லாவிட்டால் எப்படி?

கல்யாணமுருங்கைத்தோசை.

இன்றைய கிராமத்துக்குழந்தைகள் இழந்துவிட்ட
பிரண்டைத்துவையலையும்,
மொடக்கத்தான் தோசையையும்போலவேதான்
இதுவும்.

சுவையென்றால் இதுவல்லவோ சுவை.

அடடா இதை எழுதுகையிலேயே
கை, தோசையைப்பிய்க்கநினைக்கிறதே.

தொட்டுக்கொள்வதற்கு சட்னியோ துவையலோ தேவையில்லை.

சிற்றகவையில் நமக்கு நோயெதிர்ப்புத்தன்மை குறைவாயிருக்குமல்லவா..!

அதனை சரிசெய்வதற்கே
நமக்கெல்லாம் உணவே மருந்தானது.

அவ்வகையில்
இந்த கல்யாணமுருங்கைத்தோசைகள்
'சளித்தொல்லைக்கு' நல்லது.

நாள்முழுவதும்
வாய்க்காலிலும் குளத்திலும்
எருமைகள்போல ஊறிக்கொண்டிருந்தால்
சளித்தொல்லை வரமாலிருக்குமா..?

இப்படியெல்லாம்
எமது வாழ்வுடன் வேரூன்றியிருந்த
கல்யாணமுருங்கைகள்
போனயிடந்தெரியாமல் புதையுண்டுவிட்டன.

தமிழகத்தின் குக்கிராமங்களில்
எங்கேனும் இம்மரங்கள் தென்பட்டால்
அவைகளைக்காக்கவும்,
தமது பெருமைகளை
தாமே அழித்துக்கொண்ட
நம்மவர்களது இன்றைய சமுதாயத்தினுள்
போத்தாக நட்டுவைக்கவுமே
இத்தொகுப்பு. 

1 comment: