jaga flash news

Saturday 27 September 2014

கொங்குநாடு

பண்டை காலத்தில் நிர்வாக வசதியை முன்னிட்டு கொங்கு நாட்டை, பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொன்கலூர் நாடு, ஆறைநாடு, வாரக்க நாடு, திருவாவினன்குடி நாடு, மணநாடு, தலை நாடு, தட்டய நாடு, பூவாணிய நாடு, அரைய நாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கா நாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கா நாடு, ஆனைமலை நாடு, இராசிபுர நாடு, காஞ்சிக் கோயில் நாடு, குறுப்பு நாடு என்று 24 சிறு உள் நாடுகளாகப் பிரித்துள்ளார்கள்.

இதில் பூந்துறை நாடு மிகச் சுவாரசியமான தகவல்கள் உடையது பாருங்கள்.

இந்த பூந்துறை நாடு காவிரியை மையமாக வைத்து மேல்கரைப் பூந்துறை நாடு, கீழ்க்கரைப் பூந்துறை நாடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 24 கொங்கு நாடுகளிலும், வரலாற்று சிறப்பு மிக்கதும், தொன்மையானதும் இந்த பூந்துறை நாடுதான். அண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழக கல்வெட்டியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பிடாரியூர் திருப்பிராட்டியம்மன் கோயில் அர்த்த மண்டப நிலைகால் கல்வெட்டு, இப்பூந்துறை நாட்டைப் ‘பழம் பூந்துறை நாடு’ என்று சிறப்பித்துக் கூறுகிறது. பூந்துறை நாடு சங்க காலம் தொடங்கி மிகச் சிறப்புடன் திகழ்வது என்கிறார்கள். மக்கள் முதலில் புகுந்து உறைந்த நாடு இந்த பூந்துறை நாடுதான் என்கின்றனர்.

பூந்துறை நாட்டின் புகழ்மிக்க பெரு நகரமாக விளங்குவது ஈரோடு. இந்ந்கரப் பகுதிகளில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே மக்கள் வாழ்ந்த பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன. சங்க காலத்திலிருந்து தொடர்ந்த வரலாற்றுப் பெருமையும் சிறப்பும் உண்டு என்கிறார், கல்வெட்டு அறிஞரும், புலவருமான திரு இராசு அவர்கள்.

பூந்துறை நாட்டில் நான்கு ஊர்கள் ஓடைகள் எனப்பட்டும் பள்ளங்களால் பெயர் ஏற்பட்டவை என்று காளியண்ணப் புலவர் தாம் பாடிய பூந்துறைப் புராணத்தில் கூறுகிறார். அவ்வூர்கள் சிற்றோடை, பேரோடை, வெள்ளோடை மற்றும் ஈரோடை என்பனவாம். ஈரோட்டிலிருந்து பிராமணப் பெரிய அக்கிரகாரம் செல்லும் வழியில் ‘பிச்சைக்காரன் பள்ளம்’ என்ற ஓடையும், இரயில் நிலையம் செல்லும் வழியில் ‘பெரும் பள்ளம்’ என்னும் ஓர் ஓடையும் உள்ளது. இந்த இரண்டு ஓடைகளுக்கு உட்பட்ட பகுதியே ஈரோடை - ஈரோடு ஆயிற்று என்கிறார்கள்.

சோழ நாட்டில் வைணவர்களால் கோயில் எனப் பாராட்டி அழைக்கப் பெறும் திருவரங்கம், காவிரி, கொள்ளிடம் என்ற இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ளது. கொள்ளீடமும் காவிரியாற்றின் ஒரு பிரிவே என்பதால்,

‘ஆறு இரண்டும் காவிரி அதன் நடுவே சீரங்கம்’

என்று நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது. அரங்கம் என்பதற்கு இரண்டும் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி என்று தமிழ் அகராதிகளும், நிகண்டுகளும் பொருள் கூறுகின்றன. ‘அரங்கம் என்பது ஆற்றிடைக் குறை’ என்பர். திருவரங்கம் போல அதே அமைப்பில் ஈரோடு இருப்பதால் , ‘இந்த நகரே திருவரங்கம்’ என்று ஒரு புலவர் ஈரோட்டைக் குறிப்பிடுகிறார். திருவரங்கம் போலவே கல்வெட்டுகளில் ‘பள்ளி கொண்ட பெருமான்’ என்று ஈரோட்டுப் பெருமாள் பெயர் பெற்று விளங்குவது மேற்கண்ட செய்திகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது!!

ஆகா, எத்துனைப் பெருமை பெற்ற ஊர் எங்கள் ஈரோடு! ஊரைச் சுற்றி பலப்பல கோவில்கள், புராதனச் சின்னங்கள்! எல்லைக் காவல் தெய்வங்கள், கல்வெட்டுகள் என்று அனைத்தும் அரிய பொக்கிசங்கள்!!

ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது. இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் ‘மூவேந்த சோழன் சதுர்வேத மங்கலம்’ என்று ஈரோட்டிற்கு பெயர் வைத்து நான்கு வேதங்கள் ஓதக்கூடிய அந்தணர்களை குடியேற்றினார்களாம். வேறு சிலர் ஈரோடை என்பதற்கு மாறாக ‘ஈர ஓடு’ என்பதே ஈரோடு ஆயிற்று என்பர். சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருக்கின்ற காரணத்தினால், எப்பொழுதும் ஐயனின் தலை ஈரமாகவே இருக்குமாம். ஈரமான தலை ஓட்டுக்கு ‘ஆர்த்திர கபாலம்’ என்பது பெயர். எனவே ஈரோடு கோட்டை சிவபெருமானுக்கு, ஆர்த்திரகபாலீசுவரர் என்றும், ஈரோட்டுக்கு ஆர்த்திரகபாலபுரி என்றும் பெயர்க்காரணம் கூறுவர். சிலர், “காபாலிக சைவம்” இங்கு இருந்தது எனச் சான்றாக இப்பெயரைக் கூறுவர்.

வேறு சிலர் காளிதேவி பிரம்மன் தலையைத் துண்டாக்கிய பொழுது ஈரமான ஓட்டுப்பகுதி விழுந்த இடம் பேரோடு என்றும், சிறிய பகுதி விழுந்த இடம் சிற்றோடு என்றும், வெண்மையான பகுதி விழுந்த இடம் வெள்ளோடு எனவும் ஆயிற்று என்கிறார்கள்.

No comments:

Post a Comment