jaga flash news

Thursday, 23 October 2014

தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் எண்ணெய் ஸ்நானத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நன்மை உண்டா?

தீபாவளி மட்டுமல்ல. எல்லா நாளுமே விசேஷமான நாள்தான். அதனால் எல்லா நாட்களுமே தலைக்கு குளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுடலில் தலை மிக முக்கியமான ஒரு பாகம். எனவே தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. தினசரி குளியலில் எப்படி தலையை மட்டும் புறக்கணிக்க ஆரம்பித்தனர் என்பதே பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நம் கலாச்சாரத்தில் குளியல் என்றாலே முதல் சொம்பு தண்ணீரை தலையில் ஊற்றிக்கொள்ள வேண்டும், உடல் மேல் ஊற்றிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நம் உடல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் உடல்மீது முதலில் தண்ணீரை ஊற்றினால் உடலுடைய வெப்பம் தலையை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகம். அதனால் முதல் சொம்பு நீர் தலையில்தான் ஊற்ற வேண்டும் என்று வகுத்து வைத்திருந்தார்கள். இந்த வழக்கம் நம் கலாச்சாரத்தில் பல காலமாக நிலவி வந்திருக்கின்றது. ஆனால் இப்போது மக்களுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகிவிட்டது. அதனால் தலைக்கு குளிப்பதை ஒரு சடங்காக மாற்றி வருடத்திற்கு ஒருமுறை என்றாக்கி விட்டார்கள். சிலர் மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்திருக்கின்றனர். ஸ்நானம் என்றாலே அது தலை முதல் கால்விரல் வரை என்றுதான் இருக்க வேண்டும். நம் உடலில் அடிப்படையாக வாதம், பித்தம், கபம் என மூன்று விதமான குணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். இதனை சமனிலைப்படுத்துவதற்கு எண்ணெய் ஸ்நானம் மிக அவசியம். குறிப்பாக வெயிலில் சுற்றுபவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனை கொஞ்சம் அதிகமாகவே ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த எண்ணெய் ஸ்நானம் ஒரு வரம். சூடு பிரச்சனை அதிகமாக இருக்கும்போது தொப்புள் பகுதியில் எண்ணெய் பூசினால் சூடு குறையும். பிறந்த குழந்தைக்கு தலை உச்சியில் ஒரு மென்மையான இடம் இருக்கும், இதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குழந்தையை குளிப்பாட்டும்போது அவ்விடத்தில் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். ஏனெனில், இவ்விடத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்தாலே உடல் உஷ்ணம் குறைவதை நீங்கள் உணரலாம். இதையே தொண்டைக் குழியிலோ அல்லது தொப்புள் பகுதியிலோ கூட வைக்கலாம். அதனால் அவரவர் தேவைக்கு ஏற்ப மாதம் ஒருமுறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மனிதனுடைய உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்துதான் இவ்வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மற்ற நேரங்களில் சாதாரணமாக குளிக்கும்போதும் தலை முதல் கால் வரை குளிப்பது மிக அவசியம். 

No comments:

Post a Comment