jaga flash news

Thursday 30 April 2015

யார் இந்தச் சித்தர்கள்..?!

யார் இந்தச் சித்தர்கள்..?!
சித்தர்கள் என்றால் சித்தை உடையவர்கள் அதாவது அறிவு படைத்தவர்கள் தான் இந்த சித்தர்கள் எனப்படுவோர். பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். நந்தீசர், அகத்தியர், ருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கிநாதர், பாம்பாட்டிச்சித்தர், தேரையர், குதம்பைச்சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகண்ணிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர், தன்வந்திரி எனப் பதினெட்டு சித்தர்கள் உள்ளனர். இவர்கள் முதன்மைச் சித்தர்கள். இவர்களைவிட எண்ணிலாக் கோடி சித்த, ரிஷி, கணங்கள் உள்ளார்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும் எமது சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள். சித் என்றால் அறிவு அல்லது அழிவில்லாதது என்று பொருள். சித்தர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை கொண்டவர்கள். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன.
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும் சொல்கிறார். "தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!" என்று சொல்கிறார்.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணம், நற்செயல், நற்சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். எல்லோரும் சித்தர்கள் ஆகி விட முடியாது. இப்போதெல்லாம் எல்லா மனிதர்களிடமும் நாம் அன்பையோ , உண்மையையோ , நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் சித்தர்கள் இவ்வளவு பண்புகளை தம்மிடத்தில் கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் . நல்ல சிந்தனைகளை போதித்தார்கள்; செயல்படுத்தினார்கள்.
சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள் தான் இந்தச் சித்தர்கள். சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள், விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வர்ணிக்கின்றன. இறைவனிடத்தில் சித்தியை அடைந்தவர்கள். இறையோடு இரண்டறக் கலந்து ஒன்றித்தவர்கள். இறைவடிவே ஆனவர்கள். தமது இருப்பை, உடம்பை, சிந்தையை, சுற்றத்தைத் தெளிவாகப் புரிந்தவர்கள்; அறிந்தவர்கள் .
இறைவன் என்பவன் யார்? அவனை அடையும் மார்க்கம் என்ன? பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி? பிரம்மம் என்பது என்ன? இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான்? உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது? உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி? இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அட்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம்.
சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம்.
சித்தர்கள் என்போர் யார் , எத்தனை சித்தர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு புரிகிறது . நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் இந்த சித்தர்கள். நாம் எல்லோரும் இவற்றை அறிந்து , தெரிந்து வைத்திருப்பது மிகவும் நன்று.

No comments:

Post a Comment