கோயில்களில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் புனிதமான பொருட்களில் கோரோசனையும் ஒன்றாகும். கோரோசனை என்பது பசுவில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். சித்தர்கள் இந்த கோரோசனையை ஆன்மிகம் மற்றும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். முன்பெல்லாம் கோரோசனையை பாலில் சிறிது கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். இதை தீட்டு மற்றும் தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக செய்தனர். இந்த கோரோசனையை கஸ்தூரி என்னும் மானிடமிருந்து கூட எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசு என்பது எத்தகைய தெய்வத்தன்மை பொருந்தியது என்பதை அறிவோம். அத்தகைய பசுவின் பித்தப்பையில் இருந்துதான் இந்த கோரோசனை எடுக்கப்படுகிறது. இதை மாடு இயற்கையாக இறந்த பிறகு அதிலிருந்து எடுத்து காய வைத்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
கோயில்களில் அபிஷேகத்திற்கு கோரோசனையை பயன்படுத்துவார்கள். இதை தானமாகக் கொடுப்பதால் குலவிருத்தி ஏற்படும். கோரோசனையை தினமும் பயன்படுத்துவதால், சர்வமும் வசியமாகும், ஈர்ப்பு சக்தியும் வசீகரத் தோற்றமும் கொடுக்கக்கூடியது கோரோசனையாகும். நேர்மறை எண்ணங்கள் நமக்கு உருவாகும். தோல்விகள், அவமானம் நம்மிடம் நெருங்காது. இதை நெற்றியில் வைத்துக்கொண்டு தொடங்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.
இதை பூஜையறையில் வைத்து தீப தூபம் காட்டி வழிபடுவது சிறந்ததாகும். வியாழக்கிழமையில் பூச நட்சத்திரம் வரும் நாளில் கோரோசனையை வெள்ளி தட்டில் வைத்து தூப தீபம் காட்டுவதால் வீட்டில் செல்வம் பெருகும். மேலும், வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment