jaga flash news

Monday, 28 July 2025

கோ தானம்

தானம் கொடுக்கும் வழக்கம், ஆன்மீகத்தில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தீராத இன்னல்களிலும், சிக்கல்களிலும் குடும்பங்கள் சிக்கியிருக்கும்.. மாளாத கடன் பிரச்சினையிலிருந்தும் மீள முடியாமல் இருக்கும்.. இதுபோன்ற பிரச்சனைகள் இருக்குமானால், சில பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பார்கள்.. இதனால் குடும்பத்திலுள்ள தரித்திரங்கள் விலகி நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.. அந்தவகையில், பசுதானம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த பசு தானம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், சில கட்டுப்பாடுகள் உள்ளன.. பசு தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.


கோ தானம் ஆன்மீகத்தில் போற்றப்பட காரணம், பசுவின் கொம்பில் பிரம்மாவும் விஷ்ணுவும் வசிப்பதாக நம்பப்படுகிறது.



பசுவின் தலையில் மகாதேவனும், நெற்றியில் கௌரியும், நாசியில் கார்த்திகேயனும், கண்களில் சூரியன்-சந்திரன், காதில் அஷ்வினி குமாரன், பற்களில் வாசுதேவனும், நாக்கில் வருணன், தொண்டையில் இந்திரன், முடியில் சூரிய கதிர்கள், குளம்புகளில் கந்தர்வன், வயிற்றில் பூமி, 4 மடிகளில் 4 கடல்கள், கோமியத்தில் கங்கையும், சாணத்தில் யமுனையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை
பசுவை சரியாக பராமரிக்கக்கூடிய சக்தி படைத்தவர்கள் மட்டுமே இந்த தானத்தை செய்ய வேண்டும்... தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும்... குறிப்பாக, முதல் கன்றாக இருந்தாலே நல்லது.. பசுவின் கொம்பும், கால், குளம்பு போன்றவை உடையாமலும், நோய் நொடி இல்லாமலும், முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதுபோன்ற பசுவையே தானம் செய்ய வேண்டும்.

பசு தானம் எப்போது செய்யலாம்
பசுவை தானம் செய்ய முடிவெடுத்தால், அதற்குரிய நாள், நட்சத்திரம் தெரிந்து செய்ய வேண்டும். அந்தவகையில், சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து பசுவை தானம் செய்யலாம். இதனால், தானம் செய்பவர் கைலாசத்தில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை பெறுவார்களாம்..


மேலும், பசு கிருஷ்ணருக்கு பிரியமானது என்பதால், இதனை தானம் செய்வதால் கிருஷ்ணரும் திருப்தி கொள்கிறார்.. அவருடைய ஆசியும் பூரணமாக கிடைக்கும்.

அதேபோல, ஒருவருக்கு தாம் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், பசு தானத்தை செய்யலாம்.. இப்படி பசுவை தானம் செய்வதால் எம பயம் விலகும் என்பார்கள்.

எப்படி கோ தானம் செய்யலாம்
பசுவை தானம் செய்பவர்கள், குளித்து முடித்து சூரியனை வணங்கி, தங்களது பிரார்த்தனையை சொல்லி பசுவை தானமாக வழங்கலாம்.. அப்போது அந்த பசு மாட்டிற்கு தேவையான ஒரு வருடத்துக்கான தீவணத்தையும் சேர்த்தே தானம் செய்ய வேண்டும்.

ஒருவேளை தனி நபர்களுக்கு பசுவை தானமாக கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள் கோவில்களுக்கும் பசுவை தரலாம். அப்படி கோவில்களுக்கு தருவதானால், பசுவை பராமரிப்பதற்கான நிதியையும் சேர்த்து தரவேண்டும். எக்காரணம் கொண்டும், வயதான பசு, பால் கறவை அல்லாத பசு, கன்று இல்லாத பசுக்களை தானம் தரக்கூடாது.

வம்சம் தழைக்கும் - பாவம் தீரும்
சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்க வேண்டுமானால், வம்சம் தழைக்க வேண்டுமானால், பாவங்கள் விலகவேண்டுமானால், பசுவை தானம் தரலாம். ஒருவர் கோ தானம் செய்வதால், அறியாமல் செய்யும் அனைத்து பாவங்களும் விலகும்.. அவர் மோட்சத்துக்கு செல்வதுடன், தன்னுடைய 7 தலைமுறையினர் மோட்சத்திற்கு போகவும் வழி செய்கிறார்.

கோ தானம் செய்யும்போது கடன் பிரச்சனை தீரும், நிதிப்பற்றாக்குறை சீராகும்.. பசுவை தானம் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பசு தானம் செய்பவர், தன்னுடைய முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்புவதாகவே கருதப்படுகிறது. எனவே, வாழ்நாளில் ஒருமுறையாவது பசுவை தானம் செய்துவிட வேண்டும்.


No comments:

Post a Comment