jaga flash news

Friday, 4 January 2013

தாலி


தாலி என்பது திருமணத்தின் போது மணமகன், மணமகளை தன் உரிமை மனைவியாக அடையாளப்படுத்த அணிகின்ற ஒரு ஆபரணமே “மாங்கல்யம்” எனும் தாலியாகும்.

தாலி அணிந்த பெண்ணானவள் விவாகமாகியவள் என்பதையும், கணவன் உயிருடன் இருப்பதையும் உறுதி செய்வதோடு அவள் ஒரு சுமங்கலி என்பதையும் காட்டி நிற்கின்றது, ஒரு ஆடவன் தாலி அணிந்த பெண்ணைக் காணும்போது இவள் திருமணமான ஒரு பெண் என்று தன்னை விலத்திக் கொள்வான். இதனால் போலும் “தாலி பெண்ணுக்கு வேலி” எனும் முதுமொழி தோன்றியது எனவும் கூறலாம்.

முற்காலத்தில்  வேட்டையாடிய புலியை கொன்ற ஆடவன் அதன் பல்லை எடுத்து தன் கழுத்தில் மாலையாக அணிவது வழக்கமாக இருந்தது. அப் புலிப்பல் மாலையை அவன் தன்னுடைய திருமணத்தின்போது தனது மணமகளுக்கு அணிவித்தான் என்றும் அறியப்படுகின்றது.

பிற்காலத்தில் புலிப்பல் மாலை வழக்கம் மாறி புலிப்பல் போன்ற தோற்றமுடைய மஞ்சள் கட்டிய கயிறு அணியும் வழக்கம் தோன்றியது. அதாவது ஒரு விரலி மஞ்சளை எடுத்து ஒன்பது இளைகளாலான மஞ்சள் நூலினில் கட்டி கழுத்தில் முடிச்சுப் போட்டுக் கட்டுவது. (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் பூசுவார்கள்.).

தற்பொழுது பெரும்பான்மையானோர் தாலியை பொன்னினாலே செய்து பாவிக்கின்றார்கள். அதுவும் புலிப் பல்லின் தோற்றமுள்ளதாகவே செய்வது வழக்கத்தில் உள்ளது. அத்துடன் தாலியை இணைத்து கழுத்தில் அணிவதற்கு பொன்னாலான (தாலி+கொடி) சங்கிலியையே பாவிக்கின்றார்கள். அதுவும் தற்காலத்தில் தங்களின் செல்வச் செழிப்பை பிரதிபலித்துக் காட்டி பெருமை பெறக்கூடியதாக 5 தொடக்கம் 100 பவுண்வரை நிறையுடையதாக அமைக்கின்றார்கள்.

இதனால் எப்போழுதும் பெண்ணின் கழுத்தில் இருக்க வேண்டிய தாலி பாரம் தாங்கமுடியாமலும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் வீட்டு அலுமாரிகளிலும் பாங்கு லொக்கர்களிலும் அடைபட்டுக் கிடைக்கின்றன,

அத்துடன் பெண்ணிய பார்வையில் ஆண்கள் தாம் திருமணமானவர் என்பதை வெளிப்படுத்த எந்தவொரு குறியீடும் இல்லாமல் பெண்ணிடம் தாலி, குங்குமம், மெட்டி என்று குறியீடுகளைத் திணிப்பது ஒர் ஆண் ஆதிக்க செயற்பாடாக பார்க்கப்படுகிறது

நாகரிகம் படைத்த நங்கையர்கள் தாலிக்கொடியை அணிவதால் தாம் விவாகமானவர்கள் என்று ஆண்கள் தம்மை பார்க்காது அல்லது நேசிக்காது விட்டுவிடுவார்கள் எனக் கருதி அணியாது விடுவதோடு குங்குமப் பொட்டு அணிவதையும் நிறுத்தி விடுகின்றார்கள்.

கணவன் வாழும்வரை மனைவி மார்பில் எப்பொழுதும் மாங்கல்யம்-தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தான் தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு அணியப்பெற்ற தாலி  தற்பொழுது நிலைமை மாறி அழகுசாதனப் பொருளாக பாவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் கலாச்சார சின்னத்துள் ஒன்றாக கருதப்படும் இவ் தாலிக்கு ஒரு மகத்துவம் உண்டு. பெண்களின் மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இவ் தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபன்சர் முறைபோல் தொழில்ப்பட்டு உடலுக்கு வலிமையைத் தருகின்றது. எனவே தாலி என்பது பெண்ணிக்கு வேலி மட்டுமல்ல வலிமையையும் தருகின்றது என்றும் கூறலாம்.

மெட்டி என்னும் ஒரு அணிகலன் முற்காலத்தில் ஆண்கள் கால்களில் அணியப்பெற்றது. தலை குனிந்து வரும் பெண்கள் மெட்டி அணிந்த ஆண்களைக் கண்டு விலகிச் செல்வார்கள். ஆனால் அதில் இன்னுமொரு உண்மைக் காரணமும் உண்டு. மெட்டியிலுள்ள உலோகம் விஷத்தை நீக்ககூடியத் தன்மையுள்ளது.

ஆனால் இம் மெட்டியானது தற்பொழுது திருமணநாளன்று பெண்களுக்கே அணியப்படுகின்றது. காரணம் மெட்டி அணியும் கால்விரலுக்கும், கர்ப்பப்பைக்கும் இடையே தொடர்பு இருப்பதனால் இம் மெட்டியானது கர்ப்பப்பைக்கு வலிமையைக் கொடுக்கின்றது என்று அறியப்படுகின்றது

சங்க காலத்தில் தாலி

மகளிர் அணிந்த தாலி வேப்பம்பழம் போல இருந்தது. இந்தத் தாலியைப் ‘புதுநாண்‘ என்றனர். (அள்ளூர் நன்முல்லையார் – குறுந்தொகை 67)
தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் ‘வாலிழை மகளிர்’ என்று குறிப்பிடுகிறார். – குறுந்தொகை 386
முற்காலத்தில் இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும்.
தாலி கட்டுதல் - இந்து முறை
கூறை உடுத்தி வந்த மணமகள், மணமகனின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்வார். குறித்த சுபமுகூர்த்ததில் மணமகன் எழுந்து மணமகளின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதிதுக் கொடுக்கும் மாங்கல்யத்தை இரு கரங்களால் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து குருக்கள் ஆசிர்வதித்து கொடுக்கும் மாங்கல்யத்தை (தாலி) இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார்.
அப்போது சொல்லப்படும் மந்திரம்  “மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்” ஓம்! பாக்கியவதியே’ யான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக என்று குருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட்டு தனது இடத்தில் இருக்க வேண்டும். மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தில் திலகமிட வேண்டும். அப்போது அவளில் இலச்சுமி குடிகொள்கின்றாள் என்பது ஐதீகம்.
“தாலியின் மகிமை”
மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.
தெய்வீகக் குணம்,
தூய்மைக் குணம்,
மேன்மை,
தொண்டு,
தன்னடக்கம்,
ஆற்றல்,
விவேகம்,
உண்மை,
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது
கலாச்சார விழுமியங்கள் காராணமில்லாமல் தோன்றவில்லை. அதை கால சூழலுக்கேற்ப கட்டிக் காக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

No comments:

Post a Comment