jaga flash news

Monday, 10 November 2014

சந்திராஷ்டமம் பற்றிய தகவல்

சந்திராஷ்டமம் பற்றிய தகவல்

     .  சந்திராஷ்டமம் பற்றிய தகவல்களை கொண்ட பதிவு இது.  சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது.  இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.  நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் என்றைய தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும்.  அஷ்டமம் என்றால் எட்டு.  சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டில் இருப்பதாகும்.  இது அடிப்படை ஜோதிட இலக்கண விதியாகும்.  நமது முன்னோர்கள் ராசியை கருத்தில் கொண்டு சந்திராஷ்டமம் [ எட்டாவது ராசி ] என்று பெயரிட்டனர்.  எனவே சந்திராஷ்டமத்தை ராசி ரீதியாக பார்ப்பதே சிறந்ததாகும்.  தற்காலத்தில் பெரும்பாலான நாள்காட்டிகளில் நக்ஷத்திர ரீதியாக சந்திராஷ்டமத்தை கணக்கிட்டு கொடுத்துள்ளனர். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.  அதில் பிழைகள் உள்ளன.  சந்திராஷ்டமம் பற்றிய விதி முறைகளை நாட்காட்டிகள் முழுமையாக ஆராயவில்லை.  அவைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

     1.  சந்திரன் இருக்கும் ராசியை குரு பார்த்தால் சந்திராஷ்டமம் கிடையாது.  இதில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை ஆகாது.  மற்ற ஐந்து, ஒன்பது ஆகிய பார்வைகள் தோஷத்தை நீக்கும்.  இந்த குரு பார்வை கணிதம் கோசரத்திற்கு மட்டும் பொருந்துவதாகும்.

     2.  சந்திராஷ்டம தினத்தன்று அமாவாசையாக இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

     3.  தான் பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து 16, 18 வதாக வரும் நக்ஷத்திரத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.  16 வதாக வருவதை மைத்திர தாரை, அதாவது நட்பு நக்ஷத்திரம் என்றும் 18 வதாக வருவதை பரமமைத்திரம், அதாவது நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  17 வது நக்ஷத்திரத்திற்கு சந்திராஷ்டம தோஷம் உண்டு, என்பதால் நாள்காட்டிகள் அந்த 17 வது நக்ஷத்திரத்தை மட்டும் சந்திராஷ்டமமாக கூறியுள்ளன.  15, 19 வது நக்ஷத்திரங்களில் சந்திரன் இருக்குபோது அது அஷ்டம ராசியாக அமைந்தால் சந்திராஷ்டமமாகிவிடும்.  இதை கணக்கிட்டு சொல்லவேண்டுமானால் பாதசாரப்படி கணக்கிட்டு சொல்லவேண்டும். அவைகளை நாட்காட்டிகள் விட்டுவிட்டன.  இது பிழையாகும்.  மேற்கண்ட இரு விதி முறைபடியும் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டும்.  அதுவும் சொல்லப்படவில்லை.

     முடிவாக சந்திராஷ்டம நாட்களான இரண்டே கால் நாட்களிலும் எந்த விதமான சுபகாரியங்களையும், புதிய முயற்சிகளையும் செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது.  அதே நேரம், வேறு வழியில்லாமல் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்னிலை ஏற்படுகிறபோது, மேற்கண்ட விதி விலக்குகளை ஆராய்ந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment