jaga flash news

Thursday 27 November 2014

ஞாபக சக்தியை வளர்ப்பது எப்படி?

நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன். ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன். படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை. நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கியுள்ளேன். இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம். ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த மனிதனுக்கும் குறைந்த அளவு ஞாபக சக்தி, அதிக அளவு ஞாபக சக்தி என்பதை வகுத்துக் கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது. நம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை தெரிந்து கொள்வோம்.
  
இடைவிட்டு கற்றலும், மொத்தமாக கற்றலும் Spaced and massed learning)
ஒரு பாடத்தைப் படிக்கும்போது அவற்றில் உள்ள வினா விடைகளை தனித்தனிப் பிரிவாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பிரிவாகப் படித்து முடித்த பின்பும் சிறிது நேரம் இடைவெளி விட்டு பின்பு படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகப் படித்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும். உடனடித் தேவைக்கு மட்டும் மொத்தமாகப் படிக்கலாம். ஆனால் இவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் நிற்காது. ஆனால் இடைவெளிவிட்டுப் படித்தால் நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் பதிந்து இருக்கும்.
முழுமையாகக் கற்றலும், பகுதியாக கற்றலும் (Whole and part learning)
அதாவது நாம் சிறிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடையையோ முழுமையாகக் கற்க இதுவே சிறந்ததாகும். மனப்பாடம் செய்வதற்கு இவ்விரு முறைகள் பயன்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடைகளையோ பகுதி, பகுதியாகக் கற்றால் நன்றாக நினைவில் பதியும். மேலும் இவ்விரு முறைகளையும் சேர்த்துப் படித்தால் அதாவது முதலில் பகுதி, பகுதியாகப் படித்து விட்டுப் பிறகு முழுமையாகப் படித்தால் நன்றாக மனப்பாடம் செய்ய இயலும். அதாவது நன்றாக நம் நினைவில் நிற்கும். ஒப்பித்தல் முறை (Recitation method)
இம்முறையில் நாம் கற்றவற்றை நாமே தொடர்ந்து பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பிழைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தனக்குத்தானே ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளும் பொழுது கடினமானப் பகுதிகளை முதலிலேயே தெரிந்து கொண்டு அதற்குத் தனிக் கவனம் செலுத்திப் படித்துக் கொள்ளலாம்.
நினைவுக்குறிப்புகள் (Mnemonic Devices)
கற்பவற்றை நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் கற்கும் செய்திகளுக்கு அல்லது விடைகளுக்கு அவற்றோடு தொடர்புடைய ஒரு பொருளையோ அல்லது எண்களையோ நினைவுக்குறிப்புகளாக எடுத்துக் கொண்டு படித்தால் நன்றாக நினைவில் இருக்கும். உதாரணமாக Vibgyor என்ற சொல் தெரிந்தால் போதும் நிறமாலை (வானவில் நிறங்கள்) நமக்குத் தெரிந்துவிடும்.
நினைவு என்பது நம்மிடம் உள்ள தனிச்சிறப்புத் தகுதியாகும். இதைச் சரியாக கைகொள்ளும்போது நம் குறையாய்த் தென்பட்ட பல விஷயங்கள் திருத்தப்பட்டு நினைவுத்திறன் சிறப்பாய் இருக்கும்.

No comments:

Post a Comment