jaga flash news

Thursday 23 April 2020

‘தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது? ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது?

நம் முன்னோர்களுக்காக கொடுக்கப்படும் தர்ப்பணமும், திவசமும் ஒன்றா? அல்லது வேறு வேறா? இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ‘தர்பணம்’ என்பது வேறு. ‘திவசம்’ என்பது வேறு. தர்பணம் என்றால் ‘திருப்தி’ செய்வதை குறிப்பதாக பொருள். இதை தினம்தோறும் செய்யலாம். அது ஒரு புண்ணிய காரியம். அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது.
ஆனால் அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே. அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள்.
அடுத்ததாக வருடத்திற்கு வரும் திவசம் என்பது, இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இருந்தார்களோ அந்த மாதம் அந்தத் திதியில் தான் திவசம் கொடுக்கப்படவேண்டும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதாவது அவரவர் பிறந்தநாளை அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் கொண்டாடினால் தான் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
இதேபோல் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு திவசம் கொடுப்பது, அவரது திதியில் தான் கட்டாயம் கொடுக்கப்படவேண்டும். இறந்த தேதியை வைத்து திவசம் கொடுத்தால் அது கட்டாயம் நம் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. (சில பேர் பிறந்த தேதியை பார்த்து திதி கொடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அது தவறு) கட்டாயம் அவர்கள் இறந்த திதி அன்று தான் திவசம் கொடுக்கப்பட வேண்டும்.
ஏனென்றால் இறந்தவர்கள் இறந்த திதியில் தான் பூலோகத்திற்கு நம்மை தேடி வருவார்கள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் அமாவாசை அன்றும் பூலோகத்திற்கு வருகை தருவார்கள். ஆகவே, இந்த இரண்டு நாட்களை விட்டுவிட்டு அவர்கள் பூமிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு உணவளிப்பது எந்த ஒரு பயனும் இல்லை.
இறந்தவர்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாக கருதப்படுகிறது. அந்த ஒரு நாள் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் உணவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
இப்படியாக இறந்தவர்களின் ஆத்மா எப்படி தன்னுடைய யாத்திரையை மேற்கொள்கிறது? அந்த சமயத்தில் இறந்தவர்களுக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கருடபுராணம் விளக்கமாக சொல்லியுள்ளது. ஆனால் இந்த கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது. இறப்பு ஏற்பட்ட வீட்டில் மட்டுமே படிக்க வேண்டும் என்பது ஐதீகம். இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தையும்,  திவசத்தையும் முறையாக செய்யப்படுவதே உத்தமம்.
இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படுகிறது. பித்ரு தோஷம் பித்ரு சாபம் என்றால் அவர்கள் நம்மை சபிப்பது கிடையாது. ஆனால், நமக்காக செய்யப்படும் காரியங்களை சரியாக செய்யவில்லையே, நமக்கான உணவு கிடைக்கவில்லையே என்று, இறந்தவர்களின் ஆத்மா ஒரு பெரு மூச்சு விட்டால்கூட அது நம்முடைய பரம்பரையே தாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment