jaga flash news

Sunday 16 August 2020

மரணப்படுக்கையில் இருந்த கர்ணனுக்கு கொடுத்த வாக்கை தவறிய அர்ஜுனன்



மகாபாரதத்தில் அனைவரும் விரும்பும் மற்றும் மதிக்கும் ஒருவர் என்றால் அது கர்ணன்தான். தன் நண்பன் மேல் கொண்ட அன்புக்காகவும், விசுவாசத்திற்காகவும் தன் சகோதரர்களையே எதிர்த்து போரிட்டு இறுதியில் தன் சகோதரன் அர்ஜுனன் கையாலேயே மாண்டான் கர்ணன். கர்ணனின் இழப்பு பாண்டவர்களை எந்த அளவு பாதித்ததோ அதே அளவு துரியோதனனையும் பாதித்தது.




வாழும் வரை தன் திறமைக்கான அங்கீகாரத்திற்காக போராடிய கர்ணனுக்கு இறக்கும் தருவாயில் மட்டுமே அது கிடைத்தது. அதுவரை வாழ்வில் துன்பங்களையும், அவமானங்களையும் மட்டுமே அனுபவித்து வந்த கர்ணனுக்கு அர்ஜுனன் சாகும் தருவாயில் இரண்டு வாக்குகள் கொடுத்தான். ஆனால் அவற்றில் ஒன்றை மட்டுமே அர்ஜுனனால் காப்பாற்ற முடிந்தது.


கர்ணனின் குடும்பம்
கர்ணனுக்கு ஒரு மனைவி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கர்ணனுக்கு இரண்டு மனைவிகள். விருஷாலி மற்றும் சுப்ரியா என்னும் இரண்டு பெண்களை மணந்து கொண்ட கர்ணனுக்கு மொத்தம் பத்து புதல்வர்கள். விரிஷேசன், சுதாமா, விரிஷகேது, சித்ரசேனா, சத்யசேனா, சுசேனா, சத்ருஞ்சய, திவிபாதா, பனசேனா மற்றும் பிரசேனா. இதில் விரிஷகேதுவை தவிர மற்ற அனைவரும் போரில் இறந்தனர்.


போரில் கர்ணன்
துரியோதனனுக்காக குருஷேத்திர போரில் பங்கேற்ற கர்ணன் தன் தாய் குந்திக்கு கொடுத்த வாக்கிற்காக அர்ஜுனனை தவிர்த்து மற்ற பாண்டவர்களை கொல்லாமல் விட்டுவிட்டார். அர்ஜுனனை கொல்லும் திறமை கர்ணனுக்கு இருந்தாலும் அர்ஜுனனுடன் கிருஷ்ணர் இருந்ததால் கர்ணனால் அர்ஜுனனை வதைக்க இயலாமல் போனது.



மரணப்படுக்கையில் கர்ணன்
கர்ணனுக்கு பரசுராமர் மற்றும் ஒரு முதியவர் அளித்த சாபங்களின் விளைவால் கர்ணனின் திறமையும் மறந்து ரதமும் தேரில் சிக்கிக்கொண்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிருஷ்ணரின் தூண்டுதலின் பேரில் அர்ஜுனன் கர்ணனை கணையால் தாக்கி மண்ணில் சாய்த்தான். கர்ணன் மண்ணில் சாய்ந்தவுடன் பாண்டவர்களின் தாய் குந்தி போர்க்களம் வந்து கர்ணனை மடியில் ஏந்தி கதறி அழுதார்.


குந்திக்கு சாபம்
குந்தி கர்ணனை மகன் என்று கூறி அவருக்காக அழுவதை கண்டு பாண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தான் மூத்த சகோதரனை தான் கையாலேயே வதைக்க நேர்ந்ததை எண்ணி நரக வேதனை அடைந்தான் அர்ஜுனன். பாண்டவர்களின் மூத்தவரான தர்மன் தன் தாய் குந்தி செய்தது மாபெரும் பாவமென கூறினான். தாங்கள் மறைத்த இந்த ரகசியம்தான் இந்த போருக்கே காரணமாகிவிட்டது என்று கூறிய தர்மன் இனி பெண்களால் எந்தவித ரகசியத்தையும் பாதுகாக்க இயலாமல் போகட்டும் என்று சாபமளித்தார்.





அர்ஜுனனின் வாக்கு
மரணப்படுக்கையில் இருந்த கர்ணன் தன் சகோதரன் அர்ஜுனிடம் ஒரு உதவிக்கு கேட்டான். தன் மகனுக்கான வித்தைகளை அர்ஜுனன்தான் பயிற்றுவிக்க வேண்டும் என்பதுதான் அது. அர்ஜுனன் கண்ணீருடன் அதற்கு சம்மதித்ததுடன் அஸ்தினாபுரத்தின் அரியணை தங்கள் மகனுக்கு உரியது என்று வாக்களித்தான். அர்ஜுனனின் கூற்றை கேட்டு மகிழ்ச்சியுடன் விண்ணுலகம் சென்றார் கர்ணன்.


விரிஷகேது
கர்ணனின் மரணத்திற்கு பின் விரிஷகேது முழுக்க முழுக்க அர்ஜுனன் அரவணைப்பில் வளர்க்கப்பட்டான். அவனுக்கான வில்வித்தைகள் மற்றும் போர்பயிற்சிகளை அர்ஜுனனே பயிற்றுவித்தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? அதைப்போலவே மாவீரன் கர்ணனின் மகன் அவனை போலவே அனைத்து கலைகளையும் கற்று வில்வித்தையில் அகிலம் போற்றும்படி சிறந்து விளங்கினான். அதேசமயம் பாண்டவர்கள் அரவணைப்பில் வளர்ந்ததால் தர்மத்தை கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கினான்.


அர்ஜுனன் வாக்கு தவறுதல்
கர்ணனுக்கு கொடுத்த இரண்டு வாக்குகளில் ஒரு வாக்கின்படி கர்ணனின் புதல்வனுக்கு வில்வித்தையை கற்றுக்கொடுத்து மாவீரனாய் உருவாக்கினான் அர்ஜுனன். ஆனால் அவன் கூறிய வாக்குப்படி விரிஷகேதுவை அர்ஜுனனால் அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர வைக்க முடியவில்லை. அதற்கு காரணம் கிருஷ்ணர்தான்.


காரணம்
அபிமன்யுவின் மகனான பரீக்ஷித்தை அஸ்தினாபுரத்தின் அரசனாக அவன் பிறந்தபோதே அறிவித்தார். அதுமட்டுமின்றி விரிஷகேதுவின் தாயான விருஷாலி சத்ரிய வம்சத்தில் பிறக்காததால் விருஷகேதுவிற்கு அரியணை மறுக்கப்பட்டது. கர்ணன் சந்தித்த அதே சூழ்நிலையை கர்ணனின் மகன் விருஷகேதுவும் சந்தித்தான். அரியணை மறுக்கப்பட்டாலும் அஸ்தினாபுரத்தின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டான் விரிஷகேது. அர்ஜுனனுடன் போரில் பங்கேற்று அஸ்தினாபுரதத்தின் எல்லையை விரிவாக்குவதிலேயே அவன் மகிழ்ச்சியடைந்தான்.




விரிஷிகேது மரணம்
அர்ஜுனனுடன் பல போர்களில் பங்கேற்ற விரிஷிகேது நாக உலகத்திற்கு சென்ற போது அங்கு அர்ஜுனனின் மற்றொரு மகனான இரவான் என்னும் வீரன் கையால் வதைக்கப்பட்டான். குலத்தை வைத்து திறமையை புறக்கணிக்கும் செயலால் கர்ணன் மட்டுமின்றி கர்ணனின் மகனும் பாதிக்கப்பட்டான்.


No comments:

Post a Comment