jaga flash news

Wednesday, 9 January 2013

தீபத் திருநாள் திருக்கார்த்திகை


தீபத் திருநாள் திருக்கார்த்திகை
கார்த்திகை மாதம் தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய மாதம். இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து வழிபாடு செய்து அதனைக் கொண்டாடுவர். அதனைத் தொடர்ந்து கார்த்திகைத் தீபமும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையென்றால் அது வியப்பில்லை. இந்தத் தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவது தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வரும் தமிழர்களின் மரபு.



குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு போன்றவற்றுக்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றிவைத்து கோயில்களில் தொண்டு செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை,யோகம், ஞானம் ஆகும். இந்த அறவொளியையே தீபமாக, தீப சக்தியாக நாம் வணங்குகிறோம்.



கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணம் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியைத் திருப்தி செய்வதுதான் இப்பண்டிகையின் நோக்கமாகும். அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது. அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது.
Anonymous Dec 1, 2009
ஹோமத்தில் எழுகின்ற அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது நல்லெண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
Anonymous Dec 1, 2009
திருவண்ணாமலை
தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான்.

இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.



திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.



வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.



ருக்வேகத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார்.


கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.



திருமூலர் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில்:

”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
– என்று சிறப்பித்துக் கூறுகிறார்.



”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.



நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.



"உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக

மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி

இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற்

கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே."



"ஆடிப்பாடி அண்னாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ளவினைகளே" என்கின்றார் அப்பர் சுவாமிகள்.



‘கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்றார் பொங்கையாழ்வார்.
Anonymous Dec 1, 2009
தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.



”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.



திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில், 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.



தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது. பிரம்மாவும் விஷ்ணும் தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டியில் உலகையே அழிக்கும் வண்ணம் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது பரமசிவன் அவர்கள் முன் எல்லையில்லாமல் நீண்டு விரிந்த அக்னிஸ்தம்பமாகக் காட்சியளித்து, இந்த அக்னியின் அடிமுடியை யார் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்றறிவித்தார். அடிமுடி காண முடியாத அனற்பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது. அனற்பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார் எம் பெருமான். அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுர்முகப் பிரம்மன் அம்பலவாணரைத் தேடி விண்ணுலகம் சுற்றினார். திருமால், வராஹ அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார். அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான்.

ஒவ்வொரு சிவன் கோவிலின் பின்புற பிரகாரத்திலும் இந்த தத்துவத்தை விளக்கும் சிவனின் தோற்றத்தை சித்திர வடிவத்தில் காணலாம். ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது. சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.
Anonymous Dec 1, 2009
மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத்தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம். அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாக்ஷத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள்.

இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர். சிவ பெருமானை ஜோதி வடிவாகக் காண்பது தான் சொக்கப்பனை கொளுத்துவதின் முக்கியமான ஐதீகம்.



இதன் பின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடக்கும். அப்போது நடராஜருக்கு கார்த்திகை தீப மை சாத்தப்பட்டு, அதன்பின் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விநியோகிக்கப்படும்.
Anonymous Dec 1, 2009
கார்த்திகை மைந்தன் கந்தன்
தாமரையில் பூத்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் சாறெடுத்து வார்த்தமுகம் ஒன்று
பால்மணமும் பூமுகமும் படிந்தமுகம் ஒன்று
பாவலர்க்குப் பாடம்தரும் பளிங்குமுகம் ஒன்று
வேல்வடிவில் கண்ணிரண்டும் விளங்குமுகம் ஒன்று
வெள்ளிரதம் போலவரும் பிள்ளைமுகம் ஒன்று !
Anonymous Dec 1, 2009
கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய், ஆறுமுகக்குழந்தையாய், தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர். சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
Anonymous Dec 1, 2009
சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை
சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது. இதில் திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும், மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.



இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமையை மகாபலி சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.



முற்பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தான். தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.



அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.



இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது. எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனதுமறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.



ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
Anonymous Dec 1, 2009
இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள்.வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:



கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா

ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:

பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.



இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம். தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.



மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
Anonymous Dec 1, 2009
கார்த்திகை மாத மகிமை
கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.

கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணுபதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது

1 comment:

  1. அய்யா..வெ.சாமி அவர்களுக்கு(என் அன்பு ஞான தந்தைக்கு) திருக்கார்த்திகை வாழ்த்துகள். தங்களின் ஆசீர்வாதத்தையும் ஜான்ஸி கண்ணன் எதிர் நோக்குகிறாள்.

    ReplyDelete