jaga flash news

Tuesday 12 August 2014

தில ஹோமம்

தில ஹோமம் 

தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் - ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.

ராமேஸ்வரம் - நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.

திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்வி ?.

நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.

திலா ஹோமம் முடித்தவுடன் - சோளிங்கர் சென்று யோக நரசிம்ஹர் ஆலயம் வந்து , தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது. சோளிங்கர் - திருத்தணி , அரக்கோணம் அருகில் இருக்கும் ஸ்தலம். யோக நரசிம்ஹர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் சின்ன மலையிலும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.

எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து -

அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.

ஜாதகப்படி - யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?

எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் " ல" என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் - 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.

இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் - நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
இதை செய்த ஆறு மாதங்களில் - நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.

கிட்டத்தட்ட ஐந்து - ஆறு மணி நேரம் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் இடுப்பளவு தண்ணீரில் நிற்க வேண்டும். ஆதலால் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நாளில் இதை செய்வது நல்லது. உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 11 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.

யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து - 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் - யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் - குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை - உங்களுக்கு யோகமான நாள்.
ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் - ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் - திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.

ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் - வாழ்வில் ஒரே ஒரு முறை - திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment