jaga flash news

Saturday, 28 December 2024

அஷ்டவர்க்க சக்கரம்





அஷ்டவர்க்க சக்கரத்தைக் கொண்டு பலன் காணும் முறைகள்:

கீழ்க்கண்ட இரண்டு விதிமுறைகளின்படி அஷ்டகவர்க்கப் பலன்களை நிர்ணயிக்கலாம். அவை..

1. சூரியன் முதல் ஏழு அஷ்டகவர்க்கங்களில் உள்ள பரல்களினால் ஜாதகருக்கு ஏற்படும் விதிப் பலன்கள்.

2. ஒவ்வொரு கிரக அஷ்டகவர்க்கத்திலும் ஒரு ராசியில் அதே கிரகம் சஞ்சரிக்கும் போது ஏற்படும் கோச்சாரம் எனும் மதிப் பலன்கள் ஆகும். பொதுவாக அஷ்டகவர்க்கப் பலன்களை அறியும்போதும், கீழ்க்கண்டவற்றை நினைவில் வைத்துக்கொள்வது அவசியமாகும்.

பலன் காணும் பொழுது கவனிக்க வேண்டியவை

1. ஒரு கிரகத்தின் அஷ்டகவர்கத்தில் ஒரு இராசியில் 8 முதல் 5 வரை பரல்களிருந்தால் சுபப்பலன் தரும் ராசி எனவும் 4 பரல்களிருந்தால் அதற்கு சுப - அசுபங்களுடன் கூடிய சமபலன் தரும் ராசி எனவும் 3 மற்றும் அதற்குக் குறைவான பரலிருந்தால் பூரண அசுப பலன் தரும் ராசி எனவும் கணக்கில் கொண்டு பலனறிய வேண்டும்.

2. உச்ச வீட்டில் ஒரு கிரகம் பரல் குறைவாகப் பெற்றே நின்றிருந்தாலும் அந்தக் கிரகம் பலமுள்ளதாகவே கருதவேண்டும்.

3. அதே போல் நீச்ச வீட்டில் ஒரு கிரகம் அதிகப் பரல்களைப் பெற்றிருந்தாலும் அக்கிரகம் பலம் குறைந்துள்ளதாகவே கருத வேண்டும்.

சூரியன் அஷ்டகவர்க்கப் பலன்கள்

சூரியன் அதிகப் பரல்களைக் கொண்ட உச்ச, ஆட்சி ஸ்தானத்தில் நின்றால் மக்களிடம் சிறந்த செல்வாக்கைப் பெறுவார். அதிகப் பரல்களைக் கொண்ட ராசி எந்த மாதத்திற்குரியதோ அந்த மாதத்தில் திருமணம், வீடு கட்டுதல், நிலம், வாகனம் வாங்குதல், தொழில் தொடங்குதல் ஆகியவை சிறப்பாக நடக்கும்.

சூரியனின் அஷ்டவர்க்க சக்கரத்தில் அதிகப் பரல்கள் கொண்ட ராசி எந்த திசைக்குரியதோ அந்தத் திசையில் ஜாதகர் தொழில் தொடங்குவார் அல்லது உத்தியோக சிறப்பினை பெறுவார்.

சூரியனின் அஷ்டகவர்க்க சக்கரத்தில் சூரியன் நின்ற ராசியிலிருந்து 9-வது ராசியில் உள்ள பரல்களின் எண்ணிக்கை ஜாதகருடைய தந்தையாரின் சகோதரர்களையும், பெண் கிரஹங்களின் எண்ணிக்கை சகோதரிகளையும் குறிக்கும். அலி கிரகங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சூரியனின் அஷ்டகவர்க்கச் சக்கரத்தில் அதிகமான பரல்கள் கொண்ட ராசியாதிபதி யாரோ அவர் சூரிய திசையில் சிறப்பான, உயர்ந்த சுப யோகப் பலன்களைக் கொடுப்பார்.

சந்திரன் அஷ்டகவர்க்கப் பலன்கள்

சந்திரனின் அஷ்டகவர்க்கத்தில், சந்திரன் நின்ற ராசிக்கு 4-ம் இடத்தில் எத்தனைப் பரல்கள் உள்ளனவோ அத்தனை சகோதரர்களை இந்த ஜாதகரின் தாயார் பெற்றிருப்பார். ஆண் கிரஹங்களின் எண்ணிக்கை சகோதரர்களையும், பெண் கிரஹங்களின் எண்ணிக்கை சகோதரிகளையும் குறிக்கும். அலி கிரகங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சந்திரனின் அஷ்ட வர்க்கச் சக்கரத்தில் அதிகமான பரல்கள் கொண்ட ராசியாதிபதி யாரோ அவர் சந்திர திசையில் சிறந்த சுப பலன்களைப் பெறுவார்.

செவ்வாய் அஷ்டகவர்க்கப் பலன்கள்

செவ்வாய் அஷ்டகவர்க்கத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 3 - வது ராசியில் இருக்கும் பரல்களின் எண்ணிக்கை தான் இந்த ஜாதகரின் இளைய உடன் பிறந்தோர் எண்ணிக்கை ஆகும் . 11 - வது ராசியில் இருக்கும் பரல்களின் எண்ணிக்கை மூத்த சகோதரர் எண்ணிக்கை ஆகும். ஆண் கிரகங்கள் கொடுத்தப் பரல்கள் சகோதரர்களையும் பெண் கிரகங்கள் கொடுத்தப் பரல்கள் சகோதரிகளையும் குறிப்பிடும். அலி கிரகங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

செவ்வாய் திசையில் செவ்வாய் அஷ்டகவர்கத்தின் அதிகப் பரல்கள் கொண்ட ராசியாதிபதி புத்தியில் ஜாதகர் யோகங்கள் பெறுவார்.

செவ்வாய் சஞ்சார பலன்கள்

பரல்கள் இல்லாத ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜாதகருக்குக் கால், கை, வலிப்பு, வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

புதன் அஷ்டகவர்க்கப் பலன்கள்

புதன் அஷ்ட வர்க்கத்தில் 1 ,2, 3 பரல்களுள்ள ராசிகளில் புதன் இருந்தால் வீண் வார்த்தை பேசுவதில் கெட்டிக்காரர்.

புதன், பரல்களே இல்லாத 2-ம் இடத்தில் நின்றால் ஊமை ஆவார். புதன் 3 பரல்களுடன் பகை, நீச்ச வீடுகளில் இருந்தால் ஜாதகர் கலவியும், குறைந்த தாய்மாமன் விருத்தியையும் உடையவர்.

புதன் அஷ்டகவர்க்கத்தில் எந்த ராசியில் அதிகப் பரல்கள் உள்ளனவோ அந்த இராசிக்குரிய மாதத்தில் வித்யாரம்பம் செய்தல் நல்லது.

லக்னத்திற்கு 4-ஆம் இடத்திற்கு 3-ஆம் இடத்திலும், 4-ஆம் இடத்திற்கு 11-ஆம் இடத்திலும் உள்ள கூட்டி வந்த பரல்களிலிருந்து இந்த 3, 11-ஆம் இடங்களில் அஷ்டகவர்க்கத்திலுள்ள பகைக் கிரகங்களையும் அலி கிரகங்களையும் கழித்து வந்த மீதி தான் தாயார் உடன் பிறந்தோர். இதில் ஆண், பெண் கிரகங்களைப் பிரித்தறிந்து கொள்ள வேண்டும்.

புதன் திசையில் அஷ்டகவர்க்கத்தின் அதிகப் பரல்கள் கொண்ட ராசியாதிபதி புத்தியில் ஜாதகர் யோகங்கள் பல அடைவார் .

புதன் சஞ்சாரப் பலன்கள்

பரல்கள் இல்லாத ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜாதகருக்குப் பகைவரால் பயம், நோய் ஏற்படும்.

குரு அஷ்டகவர்க்கப் பலன்கள்

குரு அஷ்டகவர்க்கத்தில் பரல்களே இல்லாத ராசி வலுவிழந்த ராசி என்றும் அவ்வாறு வலுவிழந்த ராசியில் குரு இருந்தால், புத்திர தோஷத்தையும் இந்த ஜாதகர் பெறுவார்.

குரு நின்ற  ராசிக்கு 5 - ஆம் இடத்தில் அஷ்ட வர்க்கத்தில் எத்தனைப் பரல்கள் உள்ளனவோ அத்தனை புத்திரர்களை ஜாதகர் பெறுவார். இதில் அலி கிரகங்களைத் தவிர்த்து மீதியுள்ளதில் ஆண், பெண் புத்திரர்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

குரு திசையில் குரு அஷ்டகவர்க்கத்தின் அதிகப் பரல்கள் கொண்ட ராசியாதிபதி புத்தியில் ஜாதகர் சுப பலன்களை அனுபவிப்பார்.

குரு சஞ்சாரப் பலன்கள்

பரல்கள் இல்லாத ராசியில் குரு  சஞ்சாரம் செய்யும் பொழுது ஜாதகர் தன் சொத்துக்களை விரயம் செய்து விடுவார். மேலும் இக்காலத்தில் தன்னுடைய கௌரவத்தையும் இழந்து விடுவார்.

சுக்கிரன் அஷ்டக வர்க்கப் பலன்கள்

சுக்கிரன் அஷ்டகவர்க்கத்தில் பரல்களே இல்லாத ராசியில் சுக்கிரன் நின்றால் சுக்கிரன் வலுவிழந்து நிற்கிறார் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சுக்கிரன் அஷ்டகவர்க்கத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 7-ஆம் இடத்தில் உள்ள பரல்கள் எண்ணிக்கையை அசுவினி முதலாக ஒரு நக்ஷத்திரத்திற்கு ஒரு பரல் வீதம் கொடுத்து வருகையில் கடைசிப் பரல் எந்த நக்ஷ்த்திரத்தில் முடிகிறதோ அந்த நக்ஷத்திரத்தில் குருவின், சஞ்சாரம் தொடங்கும் பொழுது ஜாதகருக்குத் திருமணம் நடைபெறும். இது போலவே  சுக்கிரன் அஷ்டக வர்க்கத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 7-வது இடத்தில் உள்ள பரல்களின் எண்ணிக்கையை மேஷம் முதலாக ஒரு ராசிக்கு ஒரு பரல் வீதம் கொடுத்து வருகையில் கடைசிப் பரல் எந்த ராசியில்  முடிகிறதோ அந்த ராசியில்  சூரியன் சஞ்சாரம்  செய்யும் மாதத்தில் ஜாதகருக்குத் திருமண வாய்ப்பு ஏற்படும்.

சுக்கிரன் அஷ்ட வர்க்கத்தில் அதிக  பரல்கள் கொண்ட ராசியின் திசையிலிருந்து  திருமண சம்பந்தம் செய்து கொண்டால் தம்பதியினர் ஸுக வாழ்க்கையைப் பெறுவர். சுக்கிரன் திசையில்  சுக்கிரன் அஷ்டகவர்க்கத்தில் அதிகப் பரல்கள் கொண்ட ராசியாதிபதி புத்தி நல்ல பலன்களைக் கொடுக்கும்.
                             
சுக்கிரன் சஞ்சார பலன்கள்

சுக்கிரன் அஷ்டகவர்க்கத்தில்  , பரல்கள் இல்லாத ராசியில்  சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் பொழுது ஜாதகருக்கு ஜலதோஷம் நுரையீரல் நோய், கப சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

சனி அஷ்டகவர்க்கப் பலன்கள்

சனி அஷ்டகவர்க்கத்தில் பரல்கள் இல்லாத ராசியில், சனி நின்றால் அந்த பாவகத்தின் காரகத்துவத்தைப் பொல்லாததாக மாற்றிவிடுவார்.

சனி அஷ்டகவர்க்கத்தில் சனி இருந்த ராசி முதல் லக்னம்  முடிய உள்ள ராசிகளின் மொத்தப் பரல்கள் எத்தனையோ அத்தனை  எண்ணுள்ள  வயதில் ஜாதகருக்கு துன்பங்களும், பிரிவுகளும், கர்ம கண்டங்களும்  நிகழும்.

சனி அஷ்டகவர்க்கத்தில் சனி நின்ற ராசியிலும், சனி நின்ற ராசிக்கு 7-வது ராசியிலும் பரல்களே இல்லையென்றால் இந்த ஜாதகருக்கு இயற்கையான மரணம் இல்லை . விபத்தினால் அல்லது பகைவரால்  வஞ்சிக்கப்பட்டுத்தான்  இந்த ஜாதகர் மரணமடைவார்.

சனி திசையில், சனியின் அஷ்டகவர்க்கத்தில் அதிக பரல்கள் கொண்ட ராசியாதிபதி புத்தி சுப பலன்களைக் கொடுக்க வேண்டுமென்றால் அதிகப் பரல்கள் கொண்ட அந்த இடத்தில் சுப கிரகமொன்று இருத்தல் வேண்டும்.

சனி சஞ்சாரப்  பலன்கள்

சனி அஷ்டகவர்க்கத்தில், பரல்களே இல்லாத ராசியில் சனி சஞ்சாரம் செய்யும் பொழுது ஒரு ஜாதகர் தன் உடைமைகளை இழந்து விடுவார்.


by Quintype

No comments:

Post a Comment