jaga flash news

Saturday, 22 December 2012

சபரிமலை ஸ்தல புராணம்


சபரிமலை ஸ்தல புராணம்

சபரிமலை

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.
உதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். “ஐயப்பன்’ என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான்.
பந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந்தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார்.
யோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் “சிறுகூத்தி’ என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார்.
பாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள். தெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.
பந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார்.
தன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும். பின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிறியானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான்.

1 comment:

  1. ஸ்தல புராணம் வெகு அருமை.

    ReplyDelete