jaga flash news

Monday 9 December 2013

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது: மகனே, மகளே! உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையை, மதிப்பை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே உங்களது நன்மைக்காகச் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.
* ஆடி ஓடி விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுவோம். பொறுத்துக் கொள்ளுங்கள்!
* செய், சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது என்று வருவதெல்லாம் இயல்புதான். பெரிதுபடுத்தாதீர்கள்.
* எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே!
*நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாங்கள் பக்கத்தில் துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு.
*நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகளான உங்கள் மீதுதான்.
*மொபைலில் நீங்கள் நீண்ட நேரம் பேசுவது தவறல்லதான். ஆனால் காலத்தின், பணத்தின் அருமையை யோசியுங்கள்.
*நல்ல பொருளைத் தொலைத்து விட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான். பாசமில்லாத கொடியவர்கள் அல்லவே நாங்கள்?
* உங்களுக்குப் பிடித்தமான உடைகளை வாங்கித் தருகிறோம். ஆனால் அது நம் குடும்ப கவுரவத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்று யோசியுங்கள்.
* உங்களை அரவணைப்பதைவிட, உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் உள்ளது? அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.
*நீங்கள் சினிமாவில் வரும் ஆரவார இசையை ரசிக்கலாம். அதே நேரம் பெரியவர்களான நாங்கள் ரசிக்கும் பக்திப் பாடல்களையும் கேட்க மறுக்காதீர்கள். கேலி செய்யாதீர்கள்.
*உங்களுக்கு உயர்ந்த லட்சியம் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
* கண்மணிகளே! டி.வி. பாருங்கள். தடுக்கவில்லை. மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடக் கூடாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா டி.வி பார்க்காதே என எச்சரிக்கிறோம், நச்சரிக்கவில்லை.
*உங்கள் நன்மைக்காக உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுகாதாரமான பழக்கங்கள் இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?
* நாங்கள் வேலையாக இருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை வெட்டித்தரவா, அதைக் கொண்டு போய் அங்கு வைக்கவா என்று கேட்டு சிறு உதவி செய்து உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாமே!
* உங்கள் ஆற்றலைப் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என எங்களிடம் கூறுங்கள்.
* வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். சாதனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!
* படிப்பின் சுமை, வீட்டுச்சுமை அதிகம் உள்ளதால் உங்களை நாங்கள் வீட்டு வேலை செய்ய அதிகம் ஏவுவதில்லை. உங்களைப் புறக்கணிக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.
* நீங்கள் பெரியவர்களான எங்களைக் கேலி செய்வதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தோன்றும்படிகூட நடந்து விடாதீர்கள். எங்களால் அவற்றைக் தாங்கிக் கொள்ள முடியாது.
*எங்கள் கவலைகளை எல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்னை, கவலை என்று திணித்து வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது : * அம்மா அப்பாக்களே, உங்கள் பிள்ளையாகிய நான் சொல்லும் சில நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நான் ஏதாவது நல்ல வேலையைச் செய்தால் என்னைத் தவறாமல் பாராட்டுங்கள்; மனம் திறந்து ஊக்குவியுங்கள்.
* உங்களுக்குச் சிலவற்றைக் கற்றுத் தர என்னையும் அனுமதியுங்கள். நீங்களே என்றும் கற்றுத் தருபவராக இருக்காதீர்கள்.
* பொது இடங்களில் என் மீது உங்களின் அதிகப் பாசத்தைக் கொட்டி வெளிப்படுத்தாதீர்கள். அப்போது நான் நெளிவேன்.
* உங்கள் இளம்வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.
* நான் அதிகம் விரும்பும் விளையாட்டுக்கள், கொஞ்சம் ஊர் சுற்றுவது போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.
* என் தனிமைக்கும் சிறிது மதிப்பளியுங்கள்.
* நான் ஏதாவது கேட்டுவிட்டால் உடனே, இல்லை அல்லது உனக்கு அது வேண்டாம் என்பதைவிட, சரி, செய், நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற வார்த்தைகளை அதிகம் கூறுங்கள்.
* சிறிய காரியங்களுக்காக நீங்கள் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். எனக்கும் அவற்றைக் கற்றுக் கொடுங்கள்.
* நான் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிர்ணயத்துச் சொல்லுங்கள். ஒரேடியாக டி.வி.யைப் பார்க்காதே என்று சொல்லிவிடாதீர்கள்.
* வாழ்நாள் முழுவதற்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.
* அம்மாவே, என்னிடம் உங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறி, என் வளர்ச்சியில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குடும்ப வேலைகள் முன்னிட்டு நான் எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.
* நல்ல விஷயங்களை எனக்கு விளக்கிக் கூற நேரம் ஒதுக்குங்கள். விளக்கினால் மட்டும் போதாது, நான் அதைப் புரிந்து கொண்டேனா என என்னை விசாரியுங்கள்.
* சிறிது வளர்ந்ததும் சில சமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை மனதில் கொள்ளாதீர்கள்.
* சில நேரங்களில் என்னை விட்டு விலகியிருங்கள். எப்போதும் என்னைப் பொத்திப் பொத்தி வைக்காதீர்கள்.
* சில சமயங்களில் நான் நடந்து கொள்வது உங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.
* குடும்பப் பிரச்னைகள் அல்லது மற்ற பிரச்னைகள் பற்றியும், பணப் பிரச்னை, வீட்டுப் பிரச்னை போன்றவற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் கூறாமல் தவிர்த்தால் பிறகு தானாகத் தெரியவரும்போது என் மனம் மிகவும் புண்படும்.
* பல விளையாட்டுகளைக் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
* நீங்கள் என்னிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
* நான் தவறு செய்யும்போது, தவறைப் புரிய வைத்து மன்னிப்பு கேட்கப் பழக்குங்கள்.
* உணவு விஷயத்தில் நான் கேட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து கொடுக்காதீர்கள்.
* நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.
* என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.
* எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

No comments:

Post a Comment