jaga flash news

Sunday, 1 December 2013

பழைய நகையை அணியலாமா?

ழைய நகையை அணியலாமா?

எனது கணவர் நகை அடகுக்கடை நடத்துகிறார். அவர் கடையில் ஒரு முறை விற்பனை செய்வதற்காக வந்த நகை ஒன்று எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. அதை என் சொந்த உபயோகத்திற்கு வைத்து கொண்டேன். ஆனால் அது பழைய நகை என்பதை அறிந்த என் உறவினர் ஒருவர் எப்போதுமே பழைய நகையை பயன்படுத்தக்கூடாது பயன்படுத்தினால் பலவித கஷ்டங்கள் வரும் என்கிறார் அவர் கூறுவது சரியா? தப்பா? என்று எனக்கு தெரியவில்லை. தயவு செய்து நீங்கள் விளக்கம் தருமாறு அன்போடு வேண்டுகிறேன். 

நகை செய்வது என்பது ஒரு அற்புதமான கலை. கண்ணில் தெரிகிற காட்சிகள் அனைத்தையும் பொன்னை உருக்கி செய்கின்ற போது கண்ணையும், கருத்தையும் கவர்ந்து மனித மனதை மயங்கச்செய்துவிடுகிறது. செம்பினால், இரும்பினால், மண்ணால் கூட ஆபரணங்களை செய்து அணிந்து பழகிய நமது பாட்டன் பாட்டிகளும் தங்கத்தால் நகை செய்து அணிய ஆரம்பித்த பிறகு வெள்ளி, பித்தளை நகைகளை விரும்புவதை விட்டு விட்டார்கள். அந்த அளவு நகையின் மீது மனிதனது காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இது எப்போது குறையுமென்று தெரியவில்லை.

ஒருவேளை தங்க நகைகளை அணிவதில் அலங்காரம் மட்டுமில்லை பொருளாதாரமும், சேமிப்பும், நிதி ஆதாரமும், அடங்கி இருக்கிறது என்பதற்காக அவைகளின் மீது மனிதன் அளவற்ற பற்றை வைத்திருக்கிறானோ என்று எண்ணவும் தோன்றுகிறது. இந்த எண்ணம் சரியாகவே இருக்க வேண்டும் காரணம் ஆரம்ப காலங்களில் மலர்களையும் ஓலைகளையும் அணிகலன்களாக தினசரி புத்தம் புதிதாக அணிந்து பழக்கப்பட்ட மனிதன் பல வருடங்கள் ஆனாலும் கூட ஒரே உருவத்தில் இருக்கும் நகைகளை சலிப்புத்தட்டாமல் அணிவதிலிருந்தே அதில் அலங்காரம் மட்டுமல்ல ஆஸ்தியும் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

எனக்கும் எதுவும் தெரியாத பிள்ளைப்பருவத்தில் பெண்கள் மட்டும் ஏன் நகை அணிகிறார்கள். ஆண்களைப்போல அவர்களும் நகை அணியாமல் இருந்தால் கல்யாணம் செய்து வைப்பதற்கு பெற்றவர்கள் கஷ்டப்பட வேண்டாமே என்று தோன்றும். இதை எனது தந்தையாரிடம் கேட்ட போது அவர் தான் சொன்னார் பெண்களை திருமணம் முடித்து கொடுத்த பிறகு வேறு வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம் அவர்கள் அங்கு சென்ற பிறகு ஆத்திரம், அவசரம் என்றால் கைசெலவுக்கு பணம் வேண்டாமா? அதனால் தான் பணமாக கொடுக்காமல் நகையாக கொடுத்து அனுப்புகிறோம். தேவைப்படும் போது நகைகளை பணமாக்கி கொள்ளலாம் என்றார். ஓரளவு விஷயம் அப்போது புரிந்தது. இந்த வயதில் நகையின் அத்தியாவசியம் தெளிவாகவே தெரிகிறது. 

ஒரு பெண் தனது குழந்தை கணவன் இவர்களுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக நேசிப்பது நகை என்று சொன்னால் அது மிகையில்லை. சில பெண்கள் தங்க நகைகளை தங்கள் உயிரை விட அதிகமாக நேசிக்கிறார்கள் நகையை காப்பாற்ற போராடி உயிர்விட்ட பெண்களைப்பற்றி செய்தித்தாள்களில் நிறையவே படிக்கிறோம். அந்த அளவு பெண்களின் மனதில் நகையின் மீது மோகம் வெறியாகவே மண்டிக்கிடக்கிறது நகையின் மீது இத்தனை ஈர்ப்புள்ள பெண்கள் அதை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக மகிழ்ச்சியோடு செய்யமாட்டார்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகளின் கொந்தளிப்புடனே தான் விற்க கொடுப்பார்கள். 

அப்படி விற்கப்பட்ட பழைய நகைகளை வாங்கி உபயோகப்படுத்தும் போது விற்றவர்களின் எண்ணப்பதிவுகள் மிக கண்டிப்பாக பயன்படுத்துபவர்களை தாக்கும். அதில் சந்தேகம் இல்லை. அதனால் கூடியமான வரையில் பழைய நகைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆனால் இது எல்லா நேரத்திலும் ஒத்து வராது சந்தர்ப்ப சூழல் பழைய நகைகளை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளலாம். அந்த சூழல் வந்தால் வாங்கிய நகைகளை காளி தேவியின் சன்னதியில் வைத்து பூஜை செய்த பிறகு அணியலாம் காரணம் காளி தேவி எந்த விதமான எதிர்மறை சிந்தனைகளையும் சம்காரம் செய்பவளாக இருக்கிறாள்

1 comment: