jaga flash news

Wednesday 4 December 2013

பெண்களின் மாதவிலக்கு நாட்களில் இறைவனை வழிபடலாமா?

பெண்களின் மாதாந்த இயற்கையைக் காரணம் காட்டி அவர்களை வீட்டில் அடைத்துவைத்ததும், இறைவழிபாட்டை மறுத்ததும் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்க வாதம் என்று இன்றெல்லாம் பெண்ணியவாதிகள் கருத்துப் பேசுகின்றனர். ஆனால், இந்த விலக்கிவைத்தலுக்குக் காரணம் இல்லாமலில்லை!
மாத இயற்கை காலத்தில் பெண்களின் உடல் சற்று வலிதாங்கவேண்டியிருப்பது உண்மைதான். இன்றைய விசேட துணி வசதிகள் இல்லாத பழங்காலத்தில், மாதவிலக்குக்குள்ளான பெண்கள் நடமாடித் திரிவது எத்தனை கடினம் என்பதை குறித்த பெண்களாலேயே ஊகித்துணர முடியும். எனவேதான் பெண்ணை அந்நாட்களில் ஒற்றையாடை அணிவித்து, வீட்டின் ஓரம் விலகியமர்ந்திருக்கச் செய்தனர். அதுதான் மாத + விலக்கு! அவளது உடல்வேதனையைக் கருதி அந்நாட்களில் வீட்டுவேலைகள் செய்வதிலிருந்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதிலிருந்தும் அவளுக்கு விலக்களிக்கப்பட்டது. நீராடித் தூய்மையான பின்னரே அவள் சாதாரண வாழ்வு வாழ அனுமதிக்கப்பட்டாள்.
குழந்தைகளைப் பெறுவதற்காக இயற்கை மாதர்க்கே கொடுத்த வரத்தின் கடுமையான மறுபக்கம் இந்த உபாதை நாட்கள்! என்றாலும், சமயத்தின் பெயரால் அதனை தீட்டென்று ஒதுக்கிவைத்ததும், அந்தக் குருதியை இந்திரனின் பிரம்மகத்தி தோசம் என்று “கப்சா” விட்டதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.
இன்றைக்கு “அந்த” நாட்களிலும் சாதாரண நாட்கள் போல சுதந்திரமாக இயங்குமளவுக்கு பெண்களுக்கு வசதிவாய்ப்புக்கள் உள்ளது. எனினும் அந்நாட்களில் இறைவழிபாடு கூடாதென்ற விதி மட்டும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
சகோதரிகளே! நீங்கள் ஒற்றையாடை அணிந்து இக்கட்டாக அந்த நாட்களைக் கழிக்கவேண்டிய பழங்காலத்தில் வாழவில்லை. மன ஒருமைப்பாடு சாத்தியமாகவுள்ளபோது, தாராளமாக அந்த நாட்களிலும் இறைவழிபாட்டில் ஈடுபடலாம்.
இறைவழிபாடு என்பதே மனதுக்கும் உடலுக்கும் வலுவூட்டத் தானே! மனம் ஒத்துக்கொள்ளாவிட்டால் மட்டும் கோயிலுக்கு செல்லாதீர்கள். மற்றும்படி, இல்லங்களில் பூசனையாற்றுவதிலோ இறைநாமங்களைச் செபிப்பதிலோ வழக்கத்தை மாற்றவேண்டியதில்லை!
உபரித் தகவல்: கேரளாவின் செங்கனூர் பகவதியம்மன், சாதாரண மானிடப்பெண்டிர் போல இன்றைக்கும் மாத இயற்கைக்குள்ளாகிறாள். “திருப்பூத்து” என்று பயபக்தியுடன் அழைக்கப்படும் இவ்வற்புதம் இன்றும் நிகழ்ந்துவருகிறது.
god

4 comments:

  1. ♡♡♡Nanri nanbare ♡♡♡

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete