jaga flash news

Sunday 1 December 2013

பிராணாயாமம்

குண்டலினி தவத்தைப் பொறுத்தவரை, மனதாலும், சாதனை முறைகளின் தீவிரத்தாலும் குண்டலினியைக் கிளப்பி விடத் தாமதமாகும் நிலையைத் தவிர்ப்பதற்கு பிராணாயாமம் உதவும். அதாவது மூன்றாவது நாடியாகிய சுழுமுனை திறப்பது என்பது நிகழும் வரை சாதகர் காத்திருக்க வேண்டும். ஆனால் பிராணாயாமத்தில் பிராண சக்தியை அதிகரித்து, அபாணனோடு கலக்கச் செய்யும் போது சுழு முனைநாடி திறக்கும். சுழுமுனை நாடி திறக்காமல் பிரம்மச்சர்யம் இருப்பவர், அல்லது திருமணம் ஆகாதவர்கள் குண்டலினி தவத்தில் ஈடுபடும் போது விந்து சக்தி அதிகரித்து சாதகருக்கு காம உணர்வைத் தூண்டி விடும். அப்படிப்பட்ட வேளையில் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக அந்த விந்து சக்தியின் வீரியத்தை சமன் செய்யலாம். திருமணமானவர்கள் சம்போகம் மூலம் சமன் செய்து கொள்ளலாம். எனவே இல்வாழ்வில் உள்ளவர்களும் குண்டலினி தவத்தைச் செய்து மேன்மையடையலாம் என்பது திண்ணம். ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும் வரை பிரம்மச்சரியத்தை விரதமாக அனுஷ்டிப்பது அவசியம். 

பிராணாயாமத்தைப் பொறுத்தவரை அது எவ்வாறு குண்டலினி தவத்தில் உதவுகிறது ? என்று பார்த்தால், அதில் உள்ள பந்தங்கள் அபாணனையும், பிராணனையும் இணைத்து நடுநாடி திறக்க உதவி செய்கின்றன. நுரையீரலில் தங்கும் பிராணனையும், அடிவயிற்றில் தங்கும் அபாணனையும் இணைத்தால் குண்டலினி சக்தி வலிமை அடைந்து, வெப்ப சக்தி உண்டாகி அது நடுநாடியை மோதித் திறந்து கொண்டு மேல்கிளம்பும். பிராணனையும் அபாணனையும் இணைக்கும் பயிற்சியாக ஒட்டியாணாவும், ஜலந்திர பந்தமும் உதவி செய்கிறது. அது எவ்வாறெனில் ஜலந்திர பந்தம் செய்வதால் பிராணன் கீழ்நோக்கி வருகிறது, ஒட்டியாணா செய்வதால் அபாணன் மலக்குடலுக்குள் செல்லாமல் மேல் நோக்கி நகர்கிறது. இப்போது இந்த இரண்டும் இணைய வேண்டும் என்றால், அதற்கு மூலபந்தம் போட வேண்டும். 

குதிரை சாணம் போட்டவுடன் ஒரு சில தடவைகள் ஆசனவாயை இறுக்கி, விரித்து, இறுக்கி, விரித்துக் கொண்டே இருக்கும். அது போல நாம் முறைப்படி செய்வதற்குப் பெயர்தான் அஸ்வினி முத்திரை. இந்த அஸ்வினி முத்திரைப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் மூன்று நாடிகளும் இணைந்து செயல்படும். நடுநாடி திறந்து பிராணன் உட்புகும். தாம்பத்ய உறவில் ஈடுபடுபவர்களுக்கு அஸ்வினி முத்திரை ஒரு புதையல்தான். இதனால் அந்தரங்க உறுப்புகள் வலிமையடைகின்றன. விந்து கட்டிப்பட்டு விடுவதால் பீச்சுதல் நிகழும் போது ஒருவிதமான சுகம் கிடைப்பதை உணரலாம். குண்டலினி தவம் செய்பவர்களுக்கு பிராணனை நடுநாடி வழியாக கிளப்பி விட இந்த பயிற்சி மட்டுமே துணை நிற்கிறது. பிராணாயாமத்தின் மூலம் பெறப்பட்ட அதிகபட்ச பிராணனை கும்பகம் செய்து மூன்று பந்தங்களையும் போட்டு அஸ்வினி முத்திரையை இயக்கும் போது பிராணன் கீழே இறங்காமல் மேலே ஏறும். அப்போது சாதகர் அடையும் அனுபவ உணர்வுகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. நாடிநரம்புகள் அனைத்திலும் பிராணன் பிரவாகித்து ஓடும் அழகை உணரலாம். அதிலும் நடுநாடி திறந்து அதில் பிராணன் நுழையும் போது மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். குப்பென்று வியர்த்து விடும். ஒரு விம்மல் ஏற்படும். ஏனென்றால் பிராணசக்தி என்பதுவும் ஒரு மின் சக்தியே. இதை அதிகமாக சேமித்து வைத்தால் எப்படி ஒரு அணு இயக்கக் கலனில் அணுசக்தி இருக்குமோ அது போல குண்டலினி சக்தியானது அதிக பிராண சக்தியின் தூண்டுதலால் செயல்பாட்டிற்கு வரும்.

சிலருக்கு மூன்று பந்தங்களையும் ஒன்று சேர்ந்தார்ப் போல செய்து அஸ்வினி முத்திரை போட முடியாது. அப்படிப்பட்டவர்கள் வேறொரு முறையைப் பின்பற்றி பிராணனையும், அபாணனையும் இணைக்கலாம். பத்மாசனத்திலோ, சித்தாசனத்திலோ நன்கு நிமிர்ந்து அமர்ந்து கொண்டு வாயைச் சற்று திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கின் நுனி மேலண்ணத்தின் கூரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இந்த நிலையில் சுவாசிக்கும் போது இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகக் காற்று புகுந்து தொண்டைக் குழி வழியாகப் பகுதியாக உள்ளே போகும். இப்போது மூலபந்தம் போட்டுக் கொண்டு, ஒருமுறை நன்கு இழுந்து சுவாசித்து விட்டு, ஜலந்திரபந்தத்தைப் போட வேண்டும். இதை எல்லோரும் இயல்பாகவும், எளிமையாகவும் செய்யலாம். அதாவது முதலில் பத்து சுற்று நாடி சுத்தி செய்யவேண்டும். மூலபந்தம் போட வேண்டும். பிறகு மேலண்ணத்தில் நாக்கை ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக சுவாசத்தை உள்ளே இழுக்க வேண்டும். பிறகு ஜலந்திர பந்தம் போட்ட நிலையில் ஐந்து முறை அஸ்வினி முத்திரையைப் போட வேண்டும். பிறகு தலையை உயர்த்தி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து, ஜலந்திர பந்தம் போட்டு விட்டு அஸ்வினி முத்திரை போட வேண்டும். இது போல அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப சுற்றுகளைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். எனினும் பயிற்சியின் துவக்கத்திலிருந்து, இறுதி வரை மூலபந்தத்தை விடாமல் இருக்க வேண்டும்.

இந்த முறையில் பயிற்சி செய்யும் போது, மூலபந்தம் போட்டிருப்பதால் அதிகமான அபாணன் கீழிறங்காது. அஸ்வினி முத்திரை போடுவதால் அது மேலே ஏறும். ஜலந்திர பந்தமும், மூலபந்தமும் போடுவதால் பிராணனும், அபாணனும் செலவழியாமல் ஒன்றாக இணையும். இதனால் மூலாதாரத்தில் மூன்று நாடிகளும் கூடும் இடத்தில் பிராணனின் தாக்குதல் ஏற்படும். பயிற்சியில் தீவிரமடைய அடைய திடீரென்று ஒருநாள் சுழுமுனை திறந்து குண்டலினி மேலே ஏறத்துவங்கும். 

பிராணனையும், அபாணனையும் இணைத்து பயிற்சி செய்து வருபவர்களுக்கு நரை, திரை மறையும். உடல் வலிமை அடைவதோடு, பிராணன் திணிவு பெற்றுத் திகழும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராணனின் ஒரு பகுதி சிறு குடல் மற்றும் பெருங்குடலுக்குள் நுழையும். இதையே அபாணன் என்பார்கள். உணவின் மூலமாகவும் அபாணன் குடலில் சேமிக்கப்படும். மலக்குடலில் அபாணனின் இயக்கம் சரிவர நடைபெறவில்லை என்றாலோ, குறைந்தாலோ, உடல் பலவீனமடையும். உணவுப் பொருள்களை கூழாக்கி, அதன் சத்துக்களை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு பிராணனும், அபாணனும் உதவி செய்கின்றன. தச வாயுக்களில் மிக முக்கியமானவை பிராணனும், அபாணனுமே. சிலர் உணவுப் பழக்கத்தை சரிவர கைகொள்வதில்லை. அவர்களுக்கு குடல் பகுதியில் அபாணன் அதிகரித்து விடும். இதனால் தொந்தி விழுவதுடன், எப்போதும் வாயு அண்டவாயுவாக அடிவயிற்றில் தேங்கி நின்று வியாதியை ஏற்படுத்தும். பிராணனையும் அபாணனையும் இணைக்காத வரை சமநிலை அவசியம். இணைத்த பிறகு அபாணனை அதிகப் படுத்த இருபது நிமிடம் சவாசனம் பயிறன்சி செய்து விட்டு பத்து சுற்று நாடி சுத்தி செய்ய வேண்டும். அல்லது நாவை மேலண்ணத்தில் வைத்து மூலபந்தம் போடாமல் சுவாசிப்பது போன்ற பயிற்சிகளைக் கடைபிடிக்கலாம். பிராணனை அதிகப்படுத்த பிராணாயாமம் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment