கானா வாழையின் மருத்துவ பயன்கள்
வாழை மரத்தைப் போன்ற இலைகள் கொண்டவை என்பதாலும், அடிக்கன்றுகள் ஈன்று தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதனாலும் ‘கானா வாழை’ என்று பெயர் பெற்றுள்ளது. சிறிய நீல நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் கானா வாழையை கீரைபோல சமைத்து உண்பது வழக்கம். இதன் இலைகளை மாவில் துவைத்து பஜ்ஜி செய்து உண்பதும் உண்டு.
கானா வாழையின் Commelina beghalensis தாவரப் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் Benghal dayflower என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தில் ‘கர்ணமோரட்டா’ என்று குறிப்பது வழக்கம்.
இதன் இலைகள் வழவழப்புத்தன்மை கொண்டு சற்று தடிப்புடையதாகவும், தண்டுகள் வாழையைப் போல மிக்க நீர்ச் சத்து உடையதாகவும் இருக்கும்.
ஒரு முறை வேர் ஊன்றிவிட்டால் பல ஆண்டுகளுக்கு கூட தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டது கானா வாழை. ஒரு செடி சுமார் 1600 விதைகளை உற்பத்தி செய்து அபிவிருத்தி செய்து கொள்ளும் என்று தாவரவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கானா வாழை கண்களுக்கு அழகான தாவரமாகவும், நாவிற்கு ருசியான உணவாக மட்டுமே அல்லாமல் உன்னதமான மருந்தாகவும் நமக்குப் பயன்படக் கூடியது.
கானா வாழையின் மருத்துவ குணங்கள்
- நாட்டு மருத்துவத்தில் கானா வாழை புத்துணர்வு தரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் நோய் உண்டாக்கும் நுண் கிருமிகளை ஒழித்துப் புண்களை விரைவில் ஆற்றும் சக்தி படைத்தது.
- கானா வாழையின் தண்டுகள் மாவுச்சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் மிகுதியாகக் கொண்ட ஒன்று. புரதச்சத்தின் கருவூலமாகவும் இது திகழ்வதால் கால்நடைகளுக்கும் பிரியமான தாவரமாக விளங்குகிறது.
- கன்றுக்குட்டிகள் கானா வாழைப் புல்லை விரும்பி உண்பதால் ‘கன்னுக்குட்டி புல்’ என்றே இதற்குப் பெயரும் உண்டு. இளங்கன்றுக் குட்டிகள் தாய்ப்பாலை மறக்க வேண்டியும், அதிகளவு பாலைக் கொள்முதல் செய்ய வேண்டியும் கன்றுக் குட்டிகளுக்கு கானா வாழையை நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- கானா வாழை காய்ச்சலைப் போக்கக் கூடிய ஓர் அற்புத மூலிகை, இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது.
- சிறுநீர் பெருக்கியாகவும் உடலினுள் தேங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளனாகவும் பயன்படுகிறது.
- சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல் இரையறை ஆகியவற்றுக்கு பலம் தருவதோடு, அவற்றின் கோளாறுகளை சீர் செய்வதாகவும் விளங்குகிறது.
- தொழு நோய்கள் உட்பட பல சரும நோய்களுக்கு சிறந்த மருந்துதாகிறது. கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் செய்கிற வாத நோயில் கானா வாழை கை வந்த மருந்தாக நோயைத் தணிக்கிறது.
- கானா வாழையை கீரையாக உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் கானா வாழைச்சாற்றை மேலுக்கு பூசி வைப்பதாலும் வீக்கமும் வலியும் கரைந்து போகும்.
- கானா வாழையை வாந்தியுண்டாக்கியாகவும், மாதவிலக்குத் தூண்டியாகவும் நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியதாகவும், காய்ச்சல் தணிப்பானாகவும், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையும் கொண்டது.
- தாய்மார்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டிகள், எரிச்சல், வலி, வீக்கம், புண் ஆகிய பிரச்சனைகளுக்கு கானாவாழை அரு மருந்தாகும்.
- கானா வாழையை சமூலமாக எடுத்து (இலை, வேர், தண்டு. பூக்கள் அனைத்தும் சேர்ந்தது) நன்றாக அரைத்து பற்றாகப் போட்டுக்கொள்வதன் மூலமோ அல்லது கட்டி வைப்பதானாலோ, வேதனையிலிருந்து விடிவு ஏற்படும்.
- தாம்பத்திய உறவில் உணர்வை தூண்டி உற்சாகம் தரும். மேலும் உடலின் வெப்பத்தைச் சீர் செய்து தணிக்க கூடியது. ரத்த போக்கு, ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை மிக்கது.
கானா வாழையின் மருத்துவ பயன்கள்
- கானா வாழையைச் சாறு எடுத்து அல்லது நீரில் இட்டு தேநீர் ஆக்கி வாய் கொப்பளிப்பதால் வாயில் பற்றித் துன்பம் தருகிற நோய்க் கிருமிகள் விலகும். இதனால், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல், தொண்டை அழற்சி, குரல்வளை தொடர்பான தொல்லைகள் அகன்று போகும்.
- கானா வாழை இலையை 20மி.லி அளவு உள்ளுக்குக் குடிப்பதாலோ அல்லது தீநீர் இட்டுக் குடிப்பதாலோ இரத்தக் கழிச்சல் வயிற்றுப் புண்ணால் வயிற்றில் ஏற்படும் இரத்தக்கசிவு ஆகியன கட்டுப்படுவதோடு அதற்கான நோயும் குணப்படும்.
- கானா வாழை இலையுடன் சம அளவுக்கு கீழா நெல்லியை புதிய தயிரில் கலந்து தினம் மூன்று வேளை உள்ளுக்குக் கொடுப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும்.
- கானா வாழை இலையை கசக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மேல் பூசி வர விரைவில் பருக்கள் உடைந்து காயம் ஆறிப் போகும்.
- கானா வாழை அடிக்கடி உண்டு வந்தால் புற்றுநோய் நெறிக்கட்டி நோய் தடுக்கப்படும்.
கானா வாழையை உணவில் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வோம்
No comments:
Post a Comment