jaga flash news

Monday 24 September 2012

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியிவன் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக்கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் (இறைவன்) பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மீறிச் செல்பவர்கள் ஏதோ கோயிலுக்குள் போய் வந்ததாக கணக்கில் கொள்ளப்படுமே தவிர, இறைவனின் அருள் அவர்களுக்கு கிட்டாது. அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.
இளமை, செல்வம், சுகபோகங்கள் யாவும் நிலையற்றவை. நாம் செய்த நற்செயல்களின் பலன் மட்டுமே என்றும் நம்முடன் வரும். ஒருவனுக்கு தர்மமே உற்ற துணை என்பதை மணிமேகலை காப்பியம் அறமே மிக்க விழுத்துணையாவது என சிறப்பித்துக் கூறுகிறது. திருவள்ளுவரும் அறத்தால் வருவதே இன்பம் என்று உண்மையான இன்பம் தர்மத்தாலேயே உண்டாகும் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, வாழ்நாளை வீணாக கழிக்காமல், தர்மம் செய்து பயனுள்ளதாக கழிக்க வேண்டும். சிவபெருமானை தாங்கும் நந்திதேவர், தர்மத்தின் அம்சம் என்பதால் அதற்கு அறவிடை என்றும் பெயருண்டு. விடை என்றால் காளை. ஆக கடவுளையே தாங்கும் பேறு தர்மத்திற்கு மட்டுமே உண்டு. ஒருவன் தர்மத்தை காப்பானேயானால் தர்மம் அவனைக் காக்கும். இதனை தர்மோ ரக்ஷதி: தர்மம் ரக்ஷித: என்பார்கள். இதிலிருந்து தர்மத்தை பாதுகாப்பவர்கள் தன்னையே காத்தவர்களாகிறார்கள்

No comments:

Post a Comment