jaga flash news

Thursday 20 September 2012


பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துவது

.

பொதுவாக குழந்தைகள் மிகவும் சுலபமாக நட்பை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பார்கள் , ஆனால் அது எல்லாக் குழந்தைகளாலும் முடியாது .இவ்வாறான குழந்தைகளை பெற்ற பெற்றோர், “என் பிள்ளை ஒரு மூடி டைப் யாரிடமும் பேச மாட்டான்என்று பெருமையாகக்கூட கூறிக் கொள்வது வழக்கம் . ஆனால் அது அவர்களுக்குஅப்போதைக்கு சரியாய் இருக்கலாமே தவிர அவன் /அவள் வளர்ந்து பெரியவனாகும் பொது அந்த பழக்கமே அவனுக்கு /அவளுக்கு எதிராளியாகியிருக்கும் . அவன் நினைத்ததைக் கூட வெளிப்படுத்த இயலாமல் எல்லாவற்றுக்கும் தடையாய் அமைந்து விடும் சிலநேரத்தில் யாரிடம் எப்படி பழகுவது என்றுக் கூட தெரியாமல் தங்களை குழப்பிக் கொள்ளவும் நேரிடும்.
நல்ல சாப்பாடு , வசதியான வீடு , உயர்தரக் கல்வி என்று மட்டும் முடிவதில்லை பெற்றோரின் கடமை, அவர்களின் குழந்தைகள் வருங்காலத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்கும் மனப் பக்குவத்துடனும், தனிமையில் இருந்தாலும்கூட எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றும், குறிப்பாக மனரீதியாக எந்த வித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படவிடாமல் வளர்ப்பதிலும் பெற்றோரின் கடமையுள்ளது.
சில குழந்தைகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள,அதில் பெற்றோரின் பங்கும் இருக்கின்றது . ஏனெனில் வேலை நிமித்தம் பல பெற்றோர்கள் தொடர்ந்து இட மாற்றங்களை மேற்கொள்வது,அவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தைகளால் அவ்வளவு சுலபமாக இந்த இட மாற்றங்களுக் கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாவார்கள் . அவ்வாறான சூழ்நிலையில் தாங்கள் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்து அதையே பழக்கமாக்கிக் கொண்டும் வளருவார்கள். ஆகவே பெற்றோர் இதை உணர்ந்து குழந்தைகளிடம் நிறைய பேச வேண்டும் . அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும் மேலும்
1. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனித்து அதிலிருந்து அவர்களின் குறைகளை பக்குவமாய் பேசி தீர்க்க வேண்டும்
2. குழந்தைகளின் இயலாமையை கேலி பேசுவதோ பிறரிடம் கிண்டல் செய்வதோ கூடாது, மாறாக அவர்களுக்கு நடப்பை பெற எளிய வழிகளை சொல்லித் தரவேண்டும்.
3. சில குழந்தைகள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு தைரியத்தையும் ,மற்றம் குழந்தைகளுடன் பழகும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
4. அவர்களுக்கிருக்கும் நட்பு வட்டாரத்தில் மேலும் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி விட வேண்டும்.
5. தான் ஒரு நல்ல மனம் படைத்த பெண் /ஆண் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோரின் அணுகுமுறை இருக்க வேண்டும் .அந்த உணர்வை மற்றவர்களும் அறியும் வண்ணம் அவர்கள் நடத்தை இருக்க வேண்டும் என்று எடுத்து சொல்ல வேண்டும் .
6. மற்றவர்களோடு நாம் அன்போடு பழகினால் அவர்களும் நம்மிடம் அன்பு செலுத்துவார்கள் என்ற எளிய வழியைச் சொல்லி தர வேண்டும்.
7. பிறர் எதிர் பார்க்கும் முன்னரே மற்றவர்களுக்கு உதவி செய்யும் உயர்ந்த மனப்பான்மையுடன் வளர வேண்டும் என்று சொல்லவேண்டும்.
8. குழந்தைகள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசினால் அதில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்க வேண்டும் , மேலும் அந்த பழக்கம் தேவையற்றது என்றும் அந்த பழக்கம் நட்புறவுகளை துண்டித்து விடும் என்று சுட்டிக் காட்ட வேண்டும் .
9. மற்றவர்களின் கருத்தையும் மதிக்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்லுவதை பொறுமையுடன் கேட்க வேண்டும் என்றும் இவ்வாறன குணம் இருந்தால் நிச்சயம் நட்பு வளரும் என்று வலியுறுத்த வேண்டும்.
10. தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தில் இருந்தால்,நட்புறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சிறு பிராயத்திலிருந்தே அவர்களுக்கு சகிப்புத் தன்மை, பொறுமை போன்ற குணங்களை பழக்க வேண்டும்
11. மற்றவர்களோடு அன்போடு பழகவும் யுத்திகளை கற்றுத் தர வேண்டும் அதற்கு மூலக்கூறாக, பிறருடன் பேசும் போது எப்போதும் புன்சிரிப்போடு பேச வேண்டும் என்று பழக்க வேண்டும்
12 முக்கியமாக முன்பே குறிப்பிட்டது போல், அடிக்கடி ஏற்படுத்தும் இட மாற்றங்கள் குழந்தைகளின் மன நிலையை பெரிதும் பாதிக்கும் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும் காலங்கடந்து உணர்வதால் பயனில்லை ஏனெனில் அவர்கள் உணரும் போது அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டிருப்பார்கள் .ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை சிறு பிராயத்திலேயே இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய உற்சாகத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நட்பில்லா வாழ்க்கை உப்பில்லா பண்டத்தைப் போன்று சுவையற்ரதாகிவிடும் என்று நட்பின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு பெற்றோரும் உற்றத்துணையாய் இருந்து வருவதும் பெற்றோரின் கடமையே

No comments:

Post a Comment