jaga flash news

Tuesday, 30 June 2015

சுற்று சூழல் வாஸ்து

சுற்று சூழல் வாஸ்து

பூமியானது தன்னைத்தானேயும் சுற்றுகிறது,சூரியனையும் ஒரு வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. பூமியானது சூரியனைச்சுற்றிவருவதால் பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படுகிறது. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதால் பகல்,இரவு என கால மாற்றங்கள் ஏற்படுகிறது. பூமியின் வட துருவமும்,தென் துருவமும் பூமிக்கு அச்சாக அமைந்துள்ளன. பூமியின் அச்சானது செங்குத்தாக அமையாமல்,சில பாகைகள் சாய்வாக அமைந்துள்ளது.
பொதுவாக பார்க்கும்பொழுது,பூமியானது தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதுபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் சூரியன் (ஜோதிட கருத்துக்களின் படி) நம் கண்களுக்கு கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது போல் காட்சியளிக்கிறது.பூமியானது தன் அச்சிலிருந்து சில பாகைகள் விலகி சாய்வாக இருப்பதால்,அது தன்னைத்தானே சுற்றும்போது தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி சுற்றுவது போல் காட்சி தருகிறது.
மண்ணாலும்,நீராலும் ஆனது பூமியாகும். பூமி,தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி சுற்றுவதால்,இயற்கையாக பூமியில் நீரோட்டம் தென்மேற்கிலிருந்து வடகிழக்காகச்செல்கிறது. பொதுவாக நீரோட்டம் உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிச்செல்லும். பூமியின் தற்சுழற்சிப்பாதை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக செல்வதால்,பூமியின் தென்மேற்குப்பகுதி உயர்வான பகுதியாகவும்,வடகிழக்குப்பகுதி தாழ்வானப்பகுதியாகவும் வாஸ்து சாஸ்திரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தெற்கும்,மேற்கும் உயர்ந்திருக்கவேண்டும் என்றும்,வடக்கும்,கிழக்கும் தாழ்ந்திருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பூமியில் வடகிழக்குப்பருவக்காற்று என்றும்,தென்மேற்குப்பருவக்காற்று என்றும் இரு வகையான பருவக்காற்றுகள் வீசுகின்றன. இதில் வடகிழக்குப்பருவக்காற்று உடலுக்கு ஆரோக்கியத்தைத்தருவதாக அமைந்துள்ளது,எனவே வடகிழக்கிலிருந்து வீசும் காற்று தாரளமாக வீட்டிற்க்குள் வரவேண்டுமென்பதற்காக வீட்டின் வடக்கிலும்,கிழக்கிலும் காலியிடம் அதிகமாக விட வேண்டும்,வீட்டிற்கு தலை வாசல் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஜன்னல்கள் வடக்கிலும், கிழக்கிலும் அமைக்கப்படவேண்டுமெனக்கூறப்படுகிறது. தென்மேற்குப்பருவக்காற்றை வாடைக்காற்று எனக்கூறுவர்.இந்தக்காற்று உடலில் பட்டால் ஆரோக்கியம் கெடும் எனக்கருதப்படுவதால் முடிந்தவரை வீட்டிற்கு தெற்கிலும்,மேற்கிலும் காலியிடம் விடக்கூடாது,தலை வாசலோ,ஜன்னலோ அமைக்கக்கூடாது எனக்கூறப்படுகிறது.
அதிகாலை வெயில் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும்,மாலை வெயில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனவும் கருதப்படுவதால்,முடிந்தவரை கிழக்குப்பாகத்தில் தலைவாசல் அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும்,கிழக்கில் அதிக காலியிடம் விடவேண்டுமென்றும் கூறப்படுகிறது.மேலும் மேற்கில் தலைவாசல் வைக்கக்கூடாது,உயரமான மரங்கள்,கட்டிடங்கள்,மலைகள்,கற்குன்றுகள் அமைந்தால் நல்லது எனக்கூறப்படுகிறது.
பூமியின் தற்சுழற்சிப்பாதைக்கு ஒத்திசைவாக நாம் வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டால், பூமியில் இயற்கை சீற்றங்கள் நிகழும்போது பெரிய அளவில் வீட்டிற்கு சேதங்கள் ஏற்படாது எனக்கருதப்படுகிறது. போதிய அளவு வெளிச்சம்,நல்ல காற்றோட்டம்,இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பு இவைகளை கருத்தில்கொண்டு வசிப்பிடத்தை அமைத்துக்கொள்ளவேண்டுமென்பதே சுற்று சூழல் வாஸ்துவின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment