jaga flash news

Tuesday 30 June 2015

தியானத்தின் நோக்கம்

தியானத்தின் நோக்கம்

மனிதனை புற உலகோடு இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை ஐம்புலன்களாகும்.மெய்,வாய்,கண்,மூக்கு,காது ஆகியவை ஐம்புலன்களாகும்.மெய்யானது தொடுதலை அறிகிறது,வாய் சுவையை அறிகிறது,கண் காட்சிகளை காண்கிறது,மூக்கு காற்றில் மிதந்து வரும் வாசனையை அறிகிறது, காது ஒலியைக்கேட்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனிதனைக்கவனித்துப்பாருங்கள் இந்த ஐம்புலன்களும் அவனில் அடங்கியிருக்கும்.அதாவது உறக்கத்தில் அவன் தொடுதலை அறியமாட்டன்,சுவையை அறியமாட்டன்,காட்சிகளை காணமாட்டான்,வாசனையை அறியமாட்டான்.ஒலிகளை கேட்கமாட்டான்.இந்த நிலையில் மனமும் அடங்கிவிடுகிறது.உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது ஐம்புலன்களும் விழித்துக்கொள்கிறது,அவைகளோடு சேர்ந்து மனமும் விழித்துக்கொள்கிறது. விழித்துக்கொள்ளும் மனம் ஓயாமல் இயங்கிக்கொண்டேயிருக்கிறது.

மனிதனைப்பொறுத்தவரை உறக்கம் என்பது இயற்கை வழங்கும் சிகிச்சையாகும்.அதாவது களைப்போடு இருக்கும் உடலுக்கும்,மனதிற்கும் இயற்கை வழங்கும் சிகிச்சையே உறக்கமாகும்.இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால்,ஐம்புலன்களின் இயக்கத்தினாலேயே மனம் சஞ்சலமடைகிறது.ஐம்புலன்களும் அடங்கும்போது மனமும் அடங்குகிறது.எனவே மனக்கட்டுப்பாட்டிற்கு புலனடக்கம் இன்றியமையாததாகும்.இதன் காரணத்தினாலேயே தியானம் பயில்பவர்களுக்கு உணவு,உடை,உடல் உறவு,கேட்பது, பார்ப்பது போன்ற விசயங்களில் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தியானம் பழகுபவர்கள் தனிமையை தேடிச்செல்வதன் நோக்கமும் இதுதான்.

தியானத்தின் ஓர் முதிர்ந்த நிலையை துரியம் என்று கூறுவார்கள்.துரியம் என்றால் ஆழ்ந்த தூக்கம் என்று பொருள்படுகிறது.இதன் மூலம் தியானத்தின் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். உணவு,உடை,உடல் உறவு இவைகளில் காட்டுப்பாடோடு இருந்தால் மெய்,வாய்,மூக்கு இவை கட்டுப்படும்.தனிமையை ஏற்படுத்திக்கொண்டால் கண்ணும், காதும் கட்டுப்படும்.எனவே தியானம் என்பது உடலுக்கும்,மனதுக்கும் நாம் அளிக்கும் சிகிச்சையாகும்.மனோவிகாரங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மார்கமே தியானமாகும்.உறக்கத்தில் மனிதனுக்கு எந்தவித செயல்பாடும் இருப்பதில்லை.அதாவது வினை செயல்படுவதில்லை.மனம் இயங்குவதில்லை.மனம் அடங்கினால் வினை செயல்படாது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.வினை அறுக்கும் நோக்கத்தில்தான் முனிவர்கள் எப்போதும் தியானத்தில் இருக்க முயற்சிக்கி றார்கள். முற்றிலுமாக வினை அறுப்பது இப்பிறப்பில் இயலாவிடினும்,தொடர்ந்து தியானம் பழகிவந்தால்,இனி வரும் பிறப்பிலாவது வினை அறுக்கும் பேற்றை அடையலாம் என்ற நம்பிக்கையில் பலர் தியானித்து வருகிறார்கள்.

எவனொருவன் இயற்கையாக ஆழ்ந்து உறங்குகிறானோ,அவன் நல்ல உடல் நலத்தோடும்,மன நலத்தோடும் இருப்பான்.உறக்கமில்லாதவனுக்கு உடல் நலமும்,மன நலமும் கெடும்.தியானத்தின் மூலம் ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்து தூங்கினாலே உடலும், மனமும் புத்துணர்ச்சியடையும்.தியானம் செய்பவர்களை சோம்பேறிகளாகக் கருத முடியாது.ஏனென்றால் சோம்பேறிகளிடம்தான் மனோவிகாரங்கள் அதிகமாக காணமுடிகிறது. தான் சும்மா இருந்துகொண்டே பொருள் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தன்னையும் குழப்பி, பிறரையும் குழப்பிக்கொண்டிறுப்பவர்கள் சோம்பேறிகள். இந்த சோம்பேறிகள் யாரும் தியானத்தில் ஈடுபட்டதாகத்தெரியவில்லை.

தனக்கென்று எந்த தேவைகளும் இல்லாமல்,விருப்புடன் எந்த செயலிலும் ஈடுபடாமல்,தன்னைச்சுற்றி நடக்கும் செயல்பாடுகளுக்கு சாட்சியாக மட்டும் இருந்துகொண்டு,மனதை கட்டுப்படுத்தி சும்மா இருப்பதே தியானமாகும்.

No comments:

Post a Comment