jaga flash news

Thursday, 20 September 2012


பிக்ஸட் டெபாசிட்டின் நன்மைகளும் தீமைகளும்!
இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் தான் மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும் முதலீடு தான் பிக்ஸட் டெபாசிட்.

முதலீட்டின் கால வரம்பு வரை இதன் வட்டி விகிதம் பெரும்பாலும் மாறுவதில்லை. எச்டிஎப்சி போன்ற சில வங்கிகள் இதற்கு மாறும் வட்டி விகிதத்தைத் (floating rate) தருகின்றன. ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த வட்டி விகிதத்தை அந்த வங்கி அறிவிக்கிறது.

சேமிப்புக் கணக்கு என்பது (savings bank account) நாம் விரும்பும்போது பணத்தைப் போட்டு விரும்பும்போது எடுப்பதாகும். சேமிப்புக் கணக்குக்கு இப்போது வட்டி விகிதம் மிக மிகக் குறைவாகக் கிடைப்பதால், பிக்ஸட் டெபாசிட்கள் தான் முதலீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில் கிடைக்கும் வட்டி அதிகம், அதிலும் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு 0.50 சதவீதம் அதிக வட்டியும் கிடைக்கிறது.

பிக்ஸட் டெபாசிட் வகைகள்:

இரு வகையான பிக்ஸட் டெபாசிட்கள் உள்ளன. முதலாவது வங்கிகளில் முதலீடு செய்யப்படுவது. அதிலும் இரு வகை உண்டு. ஒன்று வங்கிகளில் செய்யப்படும் முதலீடு இன்னொன்று வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு.

இந்த இரண்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இந்த இரண்டிலும் ரூ. 1 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவாதம் தருகிறது.

அடுத்த வகையான பிக்ஸட் டெபாசிட் கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யப்படுவது. பொது மக்களிடம் பணம் திரட்ட இந்த நிறுவனங்கள் பிக்ஸட் டெபாசிட்களை பெறுவதுண்டு. இந்த வகை முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டியும் அதிகம். ஆனால், இந்த முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவாதம் கிடையாது.

பொதுவாக பிக்ஸட் டெபாசிட்களில் போடப்படும் முதலீடுக்கு நல்ல வட்டி கிடைக்கும். மேலும் பணத்துக்கு பபாதுகாப்பும் உண்டு. இந்த முதலீடை அடமானமாக வைத்து கடனும் பெறலாம். மொத்த முதலீட்டில் 90 சதவீதம் வரை கடன் தரப்படுகிறது.

மேலும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 10 ஆண்டுகளுக்கும் மேல் வரை கூட பிக்ஸட் டெபாசிட் கால வரம்புகள் உள்ளன.

ஆனால், மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் பிக்ஸட் டெபாசிட்டுக்குக் கிடைக்கும் வட்டி குறைவே. மேலும் பிக்ஸட் டெபாசிட்டில் உள்ள பணத்தை நினைத்தவுடன் எடுக்கவும் முடியாது. காலவரம்பு முடிவதற்குள் பணத்தை எடுத்தால், அதற்கு அபராதமாக நிறைய பணம் வங்கிகளால் பிடித்தமும் செய்யப்படும்.

மேலும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு வருமான வரி சலுகையும் கிடையாது. அதே நேரத்தில் மத்திய அரசின் சேமிப்புப் பத்திரத்திலோ அல்லது அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட பத்திரத்திலோ முதலீடு செய்தால் வருமான வரி சலுகை கிடைக்கும்.

No comments:

Post a Comment