jaga flash news

Monday 11 January 2016

கண் திருஷ்டி

கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது, அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் ஓரளவு கணிக்க முடியும். ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் கணித்துக் கூற முடியாது.
மனிதன் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின் பலனையே இப்பிறவியில் நோய்களாகவும், விபத்துக்களாகவும், கடன் தொல்லைகளாகவும் அனுபவித்து வருகிறான் என்று சொல்கிறோம் அல்லவா? அது போல மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும் அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில் ஐயமில்லை.
கண் திருஷ்டியைக் களையும்
சஹஸ்ர தீப தரிசனம்
நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால் முற்றிலும் தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும் அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
திருஷ்டிகள் சூழும் வாயில்கள்
ஒருவர் அழகான புது கார் ஒன்றை வாங்கி அதில் பயணம் செய்கிறார் என்றால் அப்போது அந்தக் காரையும் அதில் பயணம் செய்பவரையும் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. அந்தக் காரின் சொந்தக்காரருக்கும் அவருடைய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் போன்றோருக்கும் கார் மூலம் மிகவும் சந்தோஷம் கிடைக்கலாம். அவருடைய சகோதர, சகோதரிகள் அந்த அளவிற்கு ஆனந்தத்துடன் அந்தப் புதுக் காரை வரவேற்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அவருடைய நண்பர்கள், மற்ற உறவினர்கள் பலவித கேள்விக் குறிகளுடன் அந்தக் காரை எதிர் கொள்வார்கள். அவருடைய எதிரிகளுக்கும், தினமும் மைல் கணக்கில் நடந்தோ, சைக்கிள் போன்ற வாகனங்களிலோ பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அந்தப் புதுக் காரைப் பார்க்கும்போது தங்களையும் அறியாமல் ஒரு பொறாமை எண்ணத்தை மனத்தில் வளர்த்து விடுவார்கள்.
இவ்வாறு அந்தக் காரைப் பார்த்து சந்தோஷம் அடைபவர்களின் புண்ணிய சக்திகளும், பொறாமை கொள்பவர்களின் புண்ணிய சக்திகளும் ஒன்றையொன்று எதிர் கொள்ளும்போது இந்த சக்திகளில் பொறாமை சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையையே நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம்.
இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், காரின் சில பாகங்கள் பழுதடைதல், தீப்பிடித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன.
அதனால்தான்,
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
அதாவது, அழுக்காறு என்னும் பொறாமைத் தீ அறத்தைப் பாழக்கி விடும் என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.
எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால் திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம். கண்களால் தூண்டப்பட்ட மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது.
இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள் கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின் புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
இவ்வாறு மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

No comments:

Post a Comment