jaga flash news

Tuesday 19 January 2016

ஸ்ரீஹயக்ரீவர்

ஸ்ரீஹயக்ரீவர் திருத்தலங்கள்:
திருவஹீந்திரபுரம்: சென்னையில் இருந்து கடலூர் சென்றால் அங்கிருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஒளஷத கிரி மலையில் ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஒளஷத கிரி சிறிய குன்று என்றபோதிலும் மேலே விஸ்தாரமான சந்நிதி. மூலவர் லட்சுமி ஹயக்ரீவராக காட்சி தர, அருகே ஸ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீ நரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் தாங்கி கீழ் வலக்கை அபய ஹஸ்தமும் கீழ் இடக் கை ஸ்ரீ கோசத்துடன் திகழ்கிறது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில் ஸ்ரீ தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர் காட்சி அளிக்கிறார்.
திருஇந்தளூர்: மாயவரம்- திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருக்கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
புன்னைநல்லூர்: தஞ்சை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராம ஸ்வாமி கோயிலின் தேர் மண்டபத்தில் ஹயக்ரீவருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
பாண்டிச்சேரி: திண்டிவனம்- பாண்டிச்சேரி செல்லும் சாலையில் உள்ள மொரட்டாண்டி கிராமத்தில் மகா பிரத்யங்கரா ஆலயத்தில் ஹயக்ரீவர் சந்நிதி உண்டு. திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து இந்த இடத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. மேலும் பாண்டிச்சேரி அருகே ராமகிருஷ்ண நகர் எனும் இடத்திலும் ஹயக்ரீவர் சந்நிதியை தரிசிக்கலாம்.
சென்னை-மேடவாக்கம்: சைதாப் பேட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் வேளச்சேரி, பள்ளிக்கரணையை அடுத்து உள்ளது மேடவாக்கம். இங்கு சிறிய குன்றின் மேல் உள்ள ஸ்ரீநிவாசர் கோயிலில் ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.
சென்னை- வில்லிவாக்கம்: இங்குள்ள சௌமிய தாமோதர பெருமாள் கோயில் அருகில் ஹயக்ரீவர் மணி மண்டபம் அமைந்துள்ளது. வைணவத்தில் ஸ்வாமி தேசிகன் மீது அளவில்லா பற்றுக் கொண்ட ‘ஸேவா ஸ்வாமி’ என்ற மஹனீயரால் கட்டப்பட்ட ஹயக்ரீவருக்கான தனிக் கோயில் இது.
சென்னை-திருமயிலை: சித்ர குளம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாஸர் திருக்கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
சென்னை- மேற்கு மாம்பலம்: அயோத்தியா மண்டபம் அருகே உள்ள அருள்மிகு சத்ய நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
மேற்கு மாம்பலத்திலேயே கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகேசவர் ஸ்ரீபாஷ்யகாரர் தேவஸ்தான கோயிலிலும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
சென்னை-நந்தம்பாக்கம்: அருள் மிகு கோதண்டராம ஸ்வாமி மற்றும் ஸ்ரீனிவாசர் திருக்கோயில்களில் ஸ்ரீஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
செட்டிப்புண்ணியம்: சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் சென்று அங்கிருந்து 6 கி.மீ. பயணித்தால் செட்டிப்புண்ணியத்தை அடையலாம்.
இந்த ஊரில் உள்ள தேவநாத ஸ்வாமி திருக்கோயிலில் யோக ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
இந்த ஹயக்ரீவர், தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர் என்றும் திருவஹீந்திபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள். சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், ஆடிசன்பேட்டை-ரங்கசாமி குளம் அருகில், தீபப்பிரகாசர் கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில், லட்சுமி ஹயக்ரீவர் காட்சி தருகிறார். அதே திருக்கோயிலில் உள்ள பரகால மடத்திலும் லட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
காஞ்சி வரதராஜர் சந்நிதியில் அமைந்துள்ள அண்ணா கோயிலிலும் ஹயக்ரீவர் தரிசனம்.

No comments:

Post a Comment