jaga flash news

Monday, 12 November 2012

மீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்


மீன ராசியும் வாழ்க்கை அமைப்பும்


மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.

உடலமைப்பு,

மீனராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்துடன் சாதாரண உயரத்தை விட சற்று உயரம் குறைந்தவர்களாகவும், ஏர் நெற்றியுடனும் இருப்பார்கள். நீண்ட மூக்கும், சிறிய குவிந்த உதடுகளும், வரிசையான பற்களும் காணப்படும். மாநிறமும், மிருதுவான கைகளும் அமைந்திருக்கும். கண்கள் மீன் போன்று புருவங்கள் வில் போன்றும் அழகாக இருக்கும். கனிந்த பார்வையுடனும் மலர்ந்த கனிந்த பார்வையுடனும் மலர்ந்த முகத்துடனும் மற்றவர்களை எளிதில் வசப்படுத்தி விடுவார்கள். பேசுவது கூட மெல்லிய குரலில் தானிருக்கும். நடக்கும் போது கைகள் இரண்டையும் வீசி உடல் குலுங்கும்படி நடப்பார்கள்.

குண அமைப்பு,

மீனராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் என்று சொன்னால் அது மிகயாகாது. மனத் தெளிவுடன் இருக்கும்போது தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்களின் சுக துக்கங்களையும் தம்முடைய சுக துக்கங்களாக நினைப்பார்கள். தன்னிடமுள்ள எந்த ரகசியத்தையும் மறைக்க தெரியாது. சமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாதலால் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஓருவரிடம் அன்பாக பழகுகிறார்களோ அவ்வளவு சீக்கிரத்தில் விலகி விடவும் செய்வார்கள். பயந்த சுபாவம் கொண்டவர்களாதலால் இவர்களை நம்பி எந்த காரித்திலுமே இறங்க முடியாது. மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இதனால் இவர்கள் வசிக்கும் இருப்பிடத்தை கூட அடிக்கடி மாற்றிவிடுவார்கள். தங்களுடைய தேவைகள் பூர்த்தியடைய காலம் நேரம் பார்க்காமல் பிறரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். சமயம் பார்த்து காலை வாரிவிடுவார்கள்.

மண வாழ்க்கை

மீன ராசியில் பிறந்தவர்கள் சுக வாழ்க்கையையே விரும்புவார்கள். இவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே மணவாழ்க்கையும் அமையும். திருமணம் நடைபெற சற்று தாமதமாகும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணமும் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணையின் உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது. வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அமைதியும் குறையும். இவர்களுக்கு தெய்வ பக்தியும், பெரியவர்களிடம் மரியாதையுடன் பழகும் குணமும் இருப்பதால் ஆன்மீக, தெய்வீக காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

பொருளாதாரநிலை,

மீனராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவர்களாகவே இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் பண வரவில் தட்டுப்பாடு இருக்காது. பண வரவுகள் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்தான் செல்வத்தை சேர்ப்பார்கள். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் பூமி, வீடு, மனை, வண்டி, வாகனங்களை அமைத்துக் கொள்வார்கள். புகழ்ச்சிக்கு இவர்கள் அடி பணிவதால் இவரை புகழ்ந்தால் போதும். மற்றவர்களுக்கு அள்ளி கொடுத்துவிடுவார்கள். எத்தகைய துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தம் வாழ்வின் வசதிகளை மட்டும் குறைத்துக் கொள்ளாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வார்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களையே விரும்பி அணிவார்கள். நடனம், நாடகம், லாட்டரி, ரேஸ் முலம் லாபம் கிட்டும். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகவே எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்றாலும் கடன்களாலும் அடிக்கடி தொல்லைகளை எதிர்கொள்வார்கள்.

புத்திர பாக்கியம்,

மீன ராசியில் பிறந்த அனேகருக்கு புத்திர பாக்கியம் இருப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். வரக்கூடிய வாழ்க்கை துணையால் சர்புத்திர பாக்கியமான ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கொரு ஆண் என பிறக்கும். அவர்களால் பேரும், புகழும், செல்வம், செல்வாக்கும், மீன ராசிக்காரர்கள் பெற்றிடுவார்கள். சிலர் பிள்ளையே பிறக்காத நிலையால் தத்து பிள்ளைகளை எடுத்து வளர்ப்பதும் உண்டு.

தொழில்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஜல சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்யும் வாய்ப்பு கிட்டும். உதாரணமாக கப்பல், படகு, தோணி, போன்றவற்றில் அடிக்கடி பிராணயம் செய்பவர்களாகவும, மீன்பிடி தொழிலில் வல்லவராகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்கலாம். தெய்வீக, ஆன்மீக காரியங்களில் ஈடுபாட்டுடன் செயல்படுவதால் அதன் மூலமும் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். பேங்க், வட்டிக்கடை, நகை வியாபாரம், அரசு அரசு சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும். பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களாலும் லாபம் உண்டாகும். எத்தொழிலில் ஈடுபட்டாலும் அத்தொழில் முதன்மை வகிக்கும் ஆற்றலை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

உணவு வகைகள்,

மீன ராசியில் பிறந்தவர்கள் நேரம் தவறாமல் சூடான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிடுவதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது நல்லது. பசலைகீரை, கீரை வகைகள், முட்டை கோஸ், வெள்ளரிக்காய், பச்சை பட்டாணி, கேரட், முழு கோதுமை ரொட்டி, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை,

எண் -1,2,3,9,10,11,12
கிழமை -வியாழன், ஞாயிறு
திசை - வடகிழக்கு
நிறம் - மஞ்சல், சிவப்பு
கல் - புஷ்ப ராகம்
தெய்வம் - தட்சிணாமூர்த்தி

No comments:

Post a Comment