jaga flash news

Saturday 16 January 2021

அரசனாக பிறக்கும் வாய்ப்பு தரும் 'அமலாகீ' ஏகாதசி...

அமலாகீ' ஏகாதசி விரத மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'பல்குண' மாதம், (February/March)  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "அமலாகீ ஏகாதசி"   (Amalaki  Ekadasi) என்று   அழைக்கப் படுகின்றது. 

அமலாகீ  ஏகாதசி பற்றி 'ப்ரம்மாண்ட புராண' விளக்கம்: 
மந்ததா எனும் அரசன் வசிஷ்ட முனிவரிடம், ஓ முனிவர்களில் சிறந்தவரே, பல்குண  மாதத்தில் வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் மகிமை பற்றி விவரியுங்கள் என்று கேட்கிறார். 

வசிஷ்ட முனி  கூறுகிறார், அரசர்களில் சிறந்தவனே, 
'அமலாகீ ஏகாதசி' என்று அழைக்கப்படும் இந்த ஏகாதசி விரதத்தினை  முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும் அனைத்து செல்வ வளங்களையும் பெறுவர், அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர், அதனைப் பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று வசிஷ்ட முனி கூறியதை, நாம் இங்கு விவரிக்கின்றோம்.

முன்பு, 'வைதிஷா' எனும் ராஜ்யத்தை, சந்திர குலத்தில் வந்த 'பாஷபிந்துகா'  எனும் அரசன் ஆண்டு வந்தான். அவருக்கு  'சித்ரரதா'  என்ற ஒரு பெயரும் உண்டு. 'வைதிஷா' ராஜ்யத்தில் நான்கு குல மக்களும், அதாவது, ப்ராஹ்மண, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் சூத்ர குல மக்கள் அனைவரும் வேத மந்திரங்களில் சிறந்து விளங்கினர். ('வர்ணாஸ்ர தர்மம்' என்று அன்று கூறியதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது போலிப் போராளிகள் கூறுவது போல் அது ஒரு உயர்குலம், தாழ்ந்த குலம் என்ற ஜாதி முறை அல்ல...நமது வாழ்க்கை முறை அவ்வாறு இருந்ததும் இல்லை. ஒவ்வொரு யுகத்திலும் வேத கோஷம் குறையக், குறைய தர்மமும் குறைந்து அதற்கேற்ப கலியுகத்தின் பொய்களும், போலி கருத்துக்களும் தலை தூக்கி நிற்கிறது, அவ்வளவே...)
ராஜ்யத்தின் எல்லா இடங்களிலும், ஒவ்வொருவர் இல்லங்களிலும் வேத கோஷம் ஒலித்து கொண்டே இருந்தது. ஒரு நபர் கூட வேத மந்திரம் அறியாமலோ அல்லது வேதத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பவராகவோ  
(நாத்தீகர்) இல்லை. அந்த காரணத்தினால், ராஜ்யத்தில் அனைவரும் மிகவும் செல்வ செழிப்புடனும் உடல் ஆரோக்யத்துடனும் இருந்தனர். மன்னர் 'சித்ரரதாவும்' சிறப்பான ஆட்சியை கொடுத்து வந்தார்.  மேலும், அவர் பகவான் சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் சிறப்பாக ஆராதித்து வந்தார். 

இவ்வாறு இருக்கையில், பல்குண மாத சுக்ல பட்ச ஏகாதசி விரதத்தினை அரசரும் மற்றும் மக்கள் அனைவரும் சேர்ந்து கடைபிடித்தனர். அனைவரும் முழு நாளும் உண்ணாமல் இருந்து 'நெல்லி' மரத்திற்கு பூஜை செய்து, தண்ணீர் ஊற்றி, புஷ்பங்கள் சாற்றி, வழிபட்டனர். அதன் பின்னர், மாலை வேளைக்கு பிறகு விஷ்ணு பூஜையில் அரசரும்  மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
'அமலாகீ ஏகாதசி' என்ற பெயருக்கேற்ப (ஆம்லா என்றால் நெல்லிக்காய் என்று நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்) இந்த ஏகாதசி அன்று நெல்லி மரத்திற்கு பூஜை செய்வதை மிகவும் உயர்வாக கூறியுள்ளதால், அரசர் மற்றும் மக்கள் அனைவரும் நெல்லி மரங்கள் நிறைந்த இடத்தில் தீப ஜோதிகள் ஏற்றி ஸ்ரீ விஷ்ணுவை வழிபட்டு பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். 

இந்த சூழ்நிலையில் 'வைதீஷா' ராஜ்யத்திற்கு வெளியில் உள்ள ஊரில் ஒரு வேட்டைக்காரன்  ஒருவன் (விலங்குகளை கொன்று அதன் மூலம் உணவு உண்டு வாழும் வழக்கத்தை கொண்ட ஒருவன்) அன்று முழுவதும் காடுகளில் அலைந்து விலங்குகள் எதுவும் கிடைக்காமல், அதனால் எதுவும் உண்ணாமல் மிகவும் சோர்வுற்று, கால் போன போக்கிலே நடந்து வழி தவறி 'வைதீஷா' ராஜ்யத்திற்கு உள்ளே வந்தான். அங்கு ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது போல் இருந்து மன்னர் முதல் மக்கள் வரை அனைவரும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவை பல பஜனை பாடல்கள் பாடியும், ஆடல் ஆடியும் இருப்பதை கண்டு ஆச்சரியமுற்றான். இருப்பினும், அந்த பூஜை மற்றும் பஜனைப்பாடல்களில் மனம் ஈர்க்கப்பட்டு அந்த வேடுவனும் அந்த பூஜையில் மனம் ஒன்றி, தான் இதுவரை செய்துவந்த விலங்குகளை கொன்று அதன் மூலம் உண்ணும் வழக்கம் இருப்பினும் அன்று ஒருநாள் முழுவதும் எதுவும் உண்ணாமல், நீர் கூட அருந்தாமல் இருந்த காரணத்தினால் அவனது சிந்தை தெளிவாகி பகவான் ஸ்ரீ விஷ்ணுவை மனதார பூஜிக்கும் அளவுக்கு சிந்தை தெளிவாகியது.

அன்று இரவு முழுவதும் பூஜை மற்றும் பஜனை நடந்து முடிந்து மறுநாள் துவாதசி திதி அன்று அனைவரும் காலையில் குளித்து முடித்து தீர்த்தம் அருந்தி அதன் பின்னர் உண்டு விரதத்தை பூர்த்தி செய்தனர். 

வேடுவனும் தனது இருப்பிடம் வந்து சேர்ந்தான். அவனது கர்ம பலன் காரணமாக அன்று இறந்தும் விட்டான்.  ஆனால், அவனை அறியாமல் அவன் இருந்த 'அமலாகீ ஏகாதசி' விரதம் காரணமாக அவனது அடுத்த ஜென்மாவில், 'ஜெயந்தி' எனும் ராஜ்யத்தின் மன்னரான 'விதுரதா' வின் புதல்வனாக பிறந்தான். அவனுக்கு 'வசுரதா' என்று  பெயர் சூட்டப்பட்டது. 

'வசுரதா' அந்த ஜென்மாவில் மிகுந்த பக்திமானாகவும், நாட்டு மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்பவனாகவும் விளங்கி, பல போர்களில் வென்று மிக சிறந்த பக்தி சாதனா  செய்து புண்ணியவான் ஆக விளங்கினான். 

இவை அனைத்திற்கும், 
வேடுவனாக இருந்து தான் அறியாமலே உண்ணாமல் இருந்து அன்று முழுவதும் உறங்காமல் இருந்த 'அமலாகீ ஏகாதசி' விரதம் மட்டுமே காரணம் ஆகும்.

'வசிஷ்ட மஹரிஷி',  மேலும், கூறுகையில், ஒருவேளை 'நெல்லி' மரம் இல்லாத இடங்களில் 'துளசி' செடிக்கு பூஜை செய்யலாம் என்றும், 'அமலாகீ ஏகாதசி' விரத மகிமை பற்றி மந்ததா அரசனிடம் விவரித்ததாக ப்ரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் 'கோ' தானம் செய்த பலனைப் பெறுவார்கள் என்று கூறுகிறார்.   

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், தடைகளை நீக்கவும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'அமலாகீ ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோவில் சென்று பெருமாளை ஸேவிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று 'நெல்லிக்காய்' மரத்திற்கு பூஜைகள் செய்யலாம்.  
  • 'நெல்லிக்காய்' மரம் இல்லாத இடங்களில் 'துளசி' செடி வைத்தும் வழி படலாம். 
  • இவை எல்லாவற்றையுமோ அல்லது முடிந்த ஏதேனும் ஒன்றையோ செய்யலாம். இதில் எதுவுமே முடியவில்லை என்றால், இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்

No comments:

Post a Comment