jaga flash news

Saturday 16 January 2021

காமதா ஏகாதசி பற்றி 'வராஹ புராண' விளக்கம்..

காமதா ஏகாதசி பற்றி 'வராஹ புராண' விளக்கம்...

'காமதா ஏகாதசி' விரத மகிமை ...

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 


'சைத்ர மாதம்', (March/April)  வளர் பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "காமதா ஏகாதசி" (Kamadha Ekadasi) என்று அழைக்கப்   படுகின்றது. 

காமதா ஏகாதசி பற்றி 'வராஹ புராண' விளக்கம்: 
ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஓ பரந்தாமா, வாஸுதேவா,  சைத்ர மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ அரசர்களில் சிறந்தவனே, 
சைத்ர மாத வளர்பிறையில்  வரும் ஏகாதசி 'காமதா ஏகாதசி' என்று அழைக்கப்படும். முன்னர், 'வசிஷ்ட மகரிஷி',  இராமபிரானின் மூதாதையர்களில் ஒருவரான மன்னர்  திலீபனுக்கு, எடுத்துக் கூறிய பெருமைகளை, இப்பொழுது நான்  உனக்கு கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறியதை நாம் இங்கு விவரிக்கின்றோம்...

இந்த ஏகாதசி விரதத்தினை  முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும், தான் செய்த  அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், இக வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர்.



முன்பொரு காலத்தில், 'ரத்னபுரா' எனும் செல்வச்செழிப்பான நகரை 'புண்டரீகா' எனும் மன்னன் ஆண்டு வந்தார். அந்த நகரம் முழுவதும் கந்தர்வர்களும், கின்னரர்களும், அப்சரஸ்களும், தேவ கன்னிகைகளும் வசித்து வந்தனர். 

இதில், கந்தர்வர்களில் ஒருவரான சிறந்த இசைக் கலைஞரான 'லலித்' மற்றும் அவரது மனைவி 'லலிதா' இருவரும் மிக சிறப்பான அழகையும், திறமையையும் ஒரு சேர கொண்டிருந்தனர். இருவரும், எந்த ஒரு நிமிடமும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமலும் தங்களுக்குள் அதிகமான அன்பையும் பொழிந்து கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், மன்னர் 'புண்டரீகா' முன்னிலையில், 'லலித்' மட்டும் தனியாக, தனது மனைவியை விட்டு பிரிந்து ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், அந்த நிகழ்ச்சி மிக அதிகமான நேரம் நடக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது. 
அதுநாள்வரை, ஒரு நிமிடம் கூட தனது அழகிய மனைவியை பிரியாமல் இருந்த காரணத்தினால், 'லலித்'-க்கு இந்த சிறிய பிரிவு கூட  ஒரு மிகப் பெரிய பிரிவு போல் இருந்தது. அதனால், அவன் சிந்தை  தடுமாறி, எண்ணம் பாடலில் நிலை கொள்ளாமல்  ஸ்ருதி விலகி பாடலில் அடிக்கடி  பிழை இழைத்தான்.   

இதனைக்கண்டு கடும் கோபம் கொண்ட மன்னர் 'புண்டரீகா' அவன் பிழை இழைத்ததற்கான அவனது மன ஓட்டத்தையும் அவன் மனைவி மேலுள்ள மோகத்தால் , தனது பாடல் தொழில் புரியும் பொழுது கவனம் சிதறிய காரணத்தையும் அறிந்து கொண்டார். அதனால், உடனே சாபம் கொடுத்து விட்டார். ஆம், மனிதர்களை கொன்று புசிக்கும் 'ராட்சஸனாக' மாறும் படி சாபம் கொடுத்து விட்டார். 

ஆம், இந்த சாபத்தின் காரணமாக, மிக அழகிய உருவில் இருந்த 'லலித்', மிகக் கொடூரமாக  64 மைல் உயரமும், 4 மைல் அகலமும், 8 மைல் நீள கைகளையும், மிகப்பெரிய குகை போன்ற வாயினையும், மிகப்பெரிய  கண்களையும் கொண்டு,  மனிதர்களை கொன்று புசிக்கும்  ராட்சஸனாக உரு மாறினான். 
(இவ்வளவு பெரிய உருவம் எடுக்க முடியமா? அது எப்படி சாத்தியம் என்று யோசிக்கும் பொழுது, இதனை தற்பொழுது உலகையே ஆட்டிப்படைக்கும் CORONA VIRUS  உடன் ஒப்பிடலாம் அல்லவா? -மனிதர்களை கொல்லும்-உலகம் முழுக்க பரவியதன் மூலம்-வராஹ புராணத்தில் கூறப்பட்ட ராட்சஸ உருவத்தை விட மிகப்பெரியது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? சரி இதற்கு தீர்வு தான் என்ன? தொடர்ந்து படிப்போம்.)

இந்த நிலையை தெரிந்து கொண்ட 'லலிதா' மிகவும் மனம் நொந்து வேறு வழியின்றி, தனது கணவனை அழைத்துக்கொண்டு, இனி 'வனாந்திரம் அதுவே தனது முகாந்திரம்' என்று உறுதி எடுத்துக் கொண்டு  தனது 'ராட்சஸ' உரு கணவனுடன்  கானகம் நோக்கி செல்கிறாள்.  பல நாட்கள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து தனது கணவனின் இந்த நிலை மாற வேண்டிக்கொண்டு சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு ஆசிரமங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள். 
இந்நிலையில், அவளது பூர்வ புண்ணியம் காரணமாக, விந்த்யாச்சல மலையில் உள்ள 'ஷ்ருங்க' முனிவரை சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. உடனே, அவரது கால்களில் விழுந்து வணங்கி தனது நிலையை எடுத்துக்கூறி தனது கணவனின் இந்த சாப நிலை நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு மிகவும் பணிந்து வேண்டினாள். 

ஷ்ருங்க முனிவரும், அப்பெண்மணியின் நிலை கண்டு மனம் கனிந்து, ஓ பெண்ணே, தன் மனைவியைப்  பற்றிய சிந்தனையே ஆயினும், எந்த நேரமும் காம எண்ணத்துடனேயே உனது கணவன் இருந்து அதன் மூலம் இசைக்கு களங்கம் விளைவித்ததால் இந்த சாபத்தை பெற்றான். இருப்பினும், இதிலிருந்து மீள ஒரு உபாயம் உள்ளது, வருகின்ற 'சைத்ர' மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று, நீ உண்ணாமல் உபவாசம் இருந்து, அன்று முழுவதும் பகவான் நாமாவை துதித்து, அதன் பிறகு மறு நாள் துவாதசி அன்று உனது புண்ணிய பலனை தானம் செய்வதன் மூலம், உனது கணவனை இந்த சாபத்தில் (கொடிய உருவில்) இருந்து மீட்கலாம், என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதனைக்கேட்டு, மிகவும் மகிழ்வுற்ற 'லலிதா', முனிவருக்கு மீண்டும் தனது நமஸ்காரங்களை   தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.  பின்னர், 'சைத்ர' மாதம் வரும்வரை காத்திருந்து சுக்ல பட்ச ஏகாதசி விரதம் இருந்து அன்று முழுவதும் பகவான் நாமாவை ஜெபித்து அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாள். மறுநாள் 'துவாதசி' அன்று காலை குளித்துவிட்டு, தனது கணவரின் நலன் வேண்டி, மனிதர்களை புசிக்கும் ராட்சஸ உருவம் நீங்க வேண்டி, தான் இருந்த 'ஏகாதசி' விரத பலனை  தானமாகக்  கொடுப்பதாக பகவானை மனதார வேண்டிக் கொண்டு கண் மூடி ப்ரார்த்தனை செய்தாள். 

கண் திறந்து பார்க்கும் பொழுது அந்த அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம், தனது கணவன் மீண்டும் பழைய அழகான உருவுடன், அற்புதமான ஆடை, அணிகலன்களுடன் அருகில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டாள். பகவானுக்கு மீண்டும் நன்றி கூறினாள். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் 'ரத்னபுரா' நகரம் சென்று ஆனந்த வாழ்வை மேற்கொண்டு இக வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று அதன் பின்னர் மோக்ஷத்தையும் அடைந்தனர். 

இவ்வாறு, ராட்சஸ தோஷம் நீக்கப்பெறும், ஏகாதசி 'காமதா ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது, என 'வராஹ புராணம்' கூறுகிறது.  

இந்த விரத பலனை படிப்பவர்கள் மற்றும் விரத பலனை பிறருக்கு தெரியப்படுத்துபவர்கள், என அனைவரும் ஒரு பசுவினை ஒரு அந்தணருக்கு  தானம் செய்த பலனைப் பெறுவார்கள்.   

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'காமதா ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

No comments:

Post a Comment