jaga flash news

Wednesday, 26 February 2025

ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா?

ஒரு சுபதினத்தை தேர்வு செய்வதற்கு முன் அன்றைய நாளில் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று பஞ்சாங்கத்தில் கவனித்து பார்ப்பார்கள். ஏனெனில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெற்று, அபரிவிதமான நல்ல பலன்களை அள்ளித்தர அந்த நாள் சக்தி வாய்ந்த நாளாக இருக்க வேண்டும்.

மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு நாளுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்! ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலுமாக இருப்பது நேத்திரம், ஜீவன் மட்டுமே!

நேத்திரம் என்றால் என்ன?

நேத்திரம் என்றால் கண்கள் என்று பொருளாகும். பாதைகள் சிக்கலாக இருந்தாலும் விழிகள் இருந்தால் சிக்கலையும் எளிமையாக கடந்து செல்ல இயலும் அல்லவா! அதுபோல தான் ஒருநாள் எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாளில் நாம் மேற்கொள்ள போகும் செயலுக்கு ஒரு உதவியோ அல்லது தடையை நீக்குவதற்கான ஆலோசனைகள் கிடைத்தால் அது சிக்கலை குறைப்பதற்கு உதவும் அல்லவா!

ஒருநாளின் வலிமையை நேத்திரம் மூலம் மூன்று வகைகளில் நாம் அறிந்து கொள்ளலாம்.


1. இரண்டு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிகச்சிறந்த பலன்களை வழங்கும் நாட்கள்.

எந்தவொரு சுப செயலையும் இந்த நாட்களில் மேற்கொள்ளலாம்.

2. ஒரு கண் உள்ள நாட்கள்:

இந்நாட்கள் மிதமான பலன்களை வழங்கும் நாட்கள்.

இந்த நாட்களில் சுப செயல்களை மேற்கொள்ள சற்று கவனமாக இருப்பது நல்லது.

3. குருட்டு நாட்கள்:

இந்நாட்கள் ஆபத்துகள் மற்றும் தடைகள் நிறைந்த நாட்கள்.

இந்த நாட்களில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகளை இந்நாட்களில் எதிர்கொள்ளலாம்.

ஆகவே, நாம் செய்யும் செயலுக்கு எந்த நாள் சரியாக இருக்கும் என்பதையும் நாம் இதன்மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

நேத்திரம் கணக்கிடும் முறை:

அஸ்வினி முதல் அன்றைய நட்சத்திரம் வரை உள்ள நாட்களை எண்ணி, அந்த எண்ணிக்கையை ஒன்பதால் வகுத்து மீதி வந்த எண்ணின் நிலையை பொறுத்து அந்த நாளின் வலிமையை அறிந்து கொள்ள முடியும்.

மீதியின் அடிப்படையில் வகைப்படுத்தல்:

மீதிகள் 1, 2, 3, 4 : இரண்டு கண் உடைய நாள் – சுபம்!

மீதிகள் 5, 6, 7 : ஒரு கண் உடைய நாள் – மத்தியமான சுபம்!

மீதிகள் 8, 9, 0 : குருட்டு நாள் – சுபம் தவிர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு

ஒருநாள் 14வது நட்சத்திரம் ஆக இருந்தால்,

14 ÷ 9 = 1 மீதி 5

மீதி 5 என்பதால், ஒரு கண் உடைய நாள் – மத்தியமான பலன்களை கொடுக்கும்.

ஜீவன் என்றால் என்ன?

ஒருநாள் எவ்வளவு தான் சிறப்பு நிறைந்ததாக இருந்தாலும் அந்த நாள் ஜீவன் நிறைந்த நாளாக இருந்தால் நாம் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனைத்து வெற்றிகளும், லாபங்களும் கிடைக்கும்.

நேத்திரம் எப்படி மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ அதேபோன்று தான் ஜீவனும் மூன்று விதங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது,

முழு ஜீவன் – முழு வாழ்க்கை, மிகச்சிறந்த நாள்.

அரை ஜீவன் – அரை வாழ்க்கை, மத்தியமான பலன்களை தரும் நாள்.

ஜீவன் இல்லாத நாள் – உயிரற்ற நாள், நல்ல காரியங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

ஜீவன் கணிதமுறைகள் :

சூரியன் இருக்கும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜீவன் வகைப்படுத்தப்படுகிறது.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு முன், பின் உள்ள நட்சத்திரம் ஜீவன் இல்லாத நட்சத்திரங்கள். ஆகையால் இந்நாட்களை தவிர்க்க வேண்டும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 3, 4, 5, 6, 7, 8 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் அரை ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். மத்திம பலன்களை கொடுக்கும்.

சூரியன் இருக்கும் நட்சத்திரத்திற்கு 9-13 முன், பின் உள்ள நட்சத்திரங்கள் ஒரு ஜீவன் உள்ள நட்சத்திரங்கள். நன்மையை தரும்.

நேத்திரமும் ஜீவனும் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

முழுமையாக நேத்திரமும், ஜீவனும் இருக்கும் நாள்:

ஒரு நாளில் நேத்திரம் இரண்டு கண்கள், ஜீவன் முழுவாழ்க்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் எதிர்பார்த்த முறையில் நடைபெறும். வெற்றிகள் கிடைக்கும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

தொழில், கல்வி, திருமணம் போன்ற அனைத்து முக்கிய சுப செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் மத்தியமான நாள்:

ஒரு நாளில் நேத்திரம் ஒரு கண்ணாகவும், ஜீவன் அரைவாழ்க்கையாகவும் இருந்தால், சிறு அளவிலான வெற்றிகள் கிடைக்கும். ஆனால் அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது. சவால்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும்.

இந்நாளில் என்ன செய்யலாம்?

சாதாரண செயல்கள், நுண்ணறிவு செயல்களை மேற்கொள்ளலாம்.

நேத்திரமும், ஜீவனும் இல்லாத நாள்:

ஒரு நாளில் நேத்திரம் குருட்டாகவும், ஜீவன் உயிரற்றவையாகவும் இருந்தால் எதிர்பார்த்த வெற்றிகள் பெற முடியாது.

இந்நாளில் முக்கிய செயல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பலவிதமான தடைகள் ஏற்படலாம்.

நேத்திரம் மற்றும் ஜீவன் ஆகியவை பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களாகும். ஒரு நாளின் சிறப்புகளை, ஆபத்துகளை புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் சரியான செயல்களை மேற்கொள்ள இது உதவுகிறது. ஜோதிடர் ஆலோசனை பெறுவதன் மூலம், இந்த அம்சங்களை முழுமையாக பயன்படுத்தி, வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.


No comments:

Post a Comment